Published:Updated:

``டெல்லி போலீஸுக்கு நாங்கள் பயப்படவில்லை!’’ - `ஆசாதி’ என ஒலித்த ஐந்து பெண்களின் குரல்

டெல்லி ஜாமியா மாணவிகள்
டெல்லி ஜாமியா மாணவிகள்

``போலீஸ் எங்களை அடித்திருந்தாலும் ஷாஹீனைக் காப்பாற்ற நாங்கள் சென்றிருப்போம். இது இந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல. இது மதச்சார்பற்ற தேசம் என்று அரசியல் சாசனம் சொல்கிறது. இந்த நாடு எல்லாருக்குமானது. இங்கு எல்லோருக்கும் சம உரிமை உள்ளது."

``நீங்கள் 22 வயதாக இருந்தபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்பது நினைவிருக்கிறதா" என்று பார்வையாளர்களை நோக்கிக் கேள்வி எழுப்புகிறார் பத்திரிகையாளர் பர்க்கா தத். அப்படிக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவரது கரங்கள் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னாவின் கைகளை அன்போடு இறுகப் பற்றிக்கொண்டிருந்தன. 22 வயது ஆயிஷா ஜாமியாவில் முதுகலை பட்டம் படிப்பவர். சொந்த ஊர் கேரள மாநிலம் கொன்டோட்டி. ஆயிஷாவும் அவரின் தோழிகள் லடீடா ஃபர்சானா, அக்தரிஷ்தா அன்சாரி, சந்தனா யாதவ், தஸ்நீம் ஆகிய நால்வரும்தான் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் அடையாளங்கள்.

டெல்லி ஜாமியா மாணவிகள்
டெல்லி ஜாமியா மாணவிகள்

தெற்கு டெல்லியின் ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே மாத்ரி மந்திர் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது காவல்துறை தாக்க வரவும் அருகில் இருந்த பங்களா ஒன்றின் கதவுகளுக்குப் பின்னால் பதுங்கியுள்ளனர். பங்களாவில் நின்றுகொண்டிருந்த காரின் ஓரம் இருந்த ஆயிஷா மற்றும் அவரின் தோழிகளைப் போலீஸிடமிருந்து பாதுகாக்க மறித்து நின்றுகொண்டிருந்த ஷாஹீன் அப்துல்லாவைப் பிடித்து இழுத்து தரையில் போட்டு லத்தியால் அடிக்க முயல்கிறது.

டெல்லி ஜாமியா மாணவிகள்
டெல்லி ஜாமியா மாணவிகள்

ஷாஹீன் ஜாமியாவில் முதுகலை பத்திரிகை மற்றும் மக்கள்தொடர்புக் கல்வி பயின்று வருகிறார். தனியார் ஊடகம் ஒன்றிலும் பணியாற்றி வருகிறார். போலீஸிடம் தன்னுடைய ஊடக அடையாள அட்டையைக் காட்டிய பிறகும் அவரைத் தாக்க முயன்றிருக்கிறார்கள். இடைமறிக்கும் ஆயிஷா போலீஸை நோக்கி கரங்களை உயர்த்துகிறார். மற்ற நான்கு பெண்களும் போலீஸ் ஷாஹீனைத் தாக்காத வகையில் அவரைச் சுற்றி பாதுகாப்பு அரணாக மூடிக்கொள்கிறார்கள்.

ஐந்து பேருமே வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஆயிஷாவும் லடீடாவும் கேரளாவிலிருந்து ஜாமியாவுக்குப் படிக்க வந்தவர்கள். சந்தனா உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஜாமியாவில் இந்தி இலக்கியம் படிக்கிறார். தஸ்நீம் இஸ்லாமிய நெறிகள் பற்றிப் படிக்கிறார். அக்தரிஷ்தா ஜார்க்கண்டைச் சேர்ந்தவர். அக்தரிஷ்தாவும் சந்தனாவும் குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஜாமியாவில் நடந்த முதல்கட்டப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற பெண்கள். சந்தனா, ஆயிஷா மற்றும் ஃபர்சானா மூவரும் கரங்களை உயர்த்தி முழக்கமிடும் புகைப்படம் ஏற்கெனவே வைரலாகி வருகிறது.

டெல்லி ஜாமியா மாணவிகள்
டெல்லி ஜாமியா மாணவிகள்

இத்தனைக்கும் முதல்நாள் போராடும்போது போலீஸ் தாக்கியதில் ஃபர்சானாவுக்கு மூச்சிரைப்புப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல்தான் ஃபர்சானா தொடர்ந்து குரல்கொடுத்துப் போராடியிருக்கிறார். சம்பவம் நடந்த அன்று நிகழ்ந்தவற்றை விவரிக்கும் ஆயிஷா, "எனக்குப் போலீஸைக் கண்டு பயமில்லை. ஷாஹீனைக் காப்பாற்ற வேண்டியதே எங்களது நோக்கமாக இருந்தது.

எங்களை மறைத்தபடி நின்றுகொண்டிருந்த ஷாஹீனை இழுத்து வெளியே வீசினார்கள், "அவனை வெளியே இழுத்துத் தாக்குங்கள்" என்கிற குரல்கள் கேட்டன. காவல்துறையை மறித்து ஷாஹீனைக் காப்பாற்றப்போன எங்களை அசிங்கமாகவும் பாலியல் ரீதியான சொற்களாலும் திட்டினார்கள். அருகில் இருந்த வீடுகளிலிருந்து யார் உதவ வந்தாலும் அவர்களையும் உதைப்போம் என போலீஸ் மிரட்டினார்கள். எங்களுடன் இருந்த சந்தனாவுக்கு போலீஸ் தாக்கியதில் வலது காலில் அடிபட்டது" என்று விவரிக்கிறார்.

டெல்லி ஜாமியா மாணவிகள்
டெல்லி ஜாமியா மாணவிகள்

சந்தனா பேசுகையில், "போலீஸ் எங்களை அடித்திருந்தாலும் ஷாஹீனைக் காப்பாற்ற நாங்கள் சென்றிருப்போம். இது இந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல. இது மதச்சார்பற்ற தேசம் என்று அரசியல் சாசனம் சொல்கிறது. இந்த நாடு எல்லாருக்குமானது. இங்கு எல்லோருக்கும் சம உரிமை உள்ளது" என்கிறார்.

"உங்களுக்குப் பயமே இல்லையா" என்று ஆயிஷாவைப் பார்த்துக் கேட்கிறார் பர்க்கா தத், "இல்லை. எனக்கு பயம் என்பதே இல்லை. நாங்கள் இறைவன் ஒருவருக்கே அஞ்சுபவர்கள். இது எங்களின் இருத்தலுக்கான போராட்டம். உரிமைக்கான போராட்டம். நாங்கள் குரல் கொடுத்துதான் ஆக வேண்டும். முதலில் காஷ்மீர் விவகாரம் உருவெடுத்தபோது எல்லோரும் அமைதி காத்தார்கள். பிறகு, பாபர் மசூதி தீர்ப்பு வந்தபோது எங்களுக்கு நீதியின் மீதான நம்பிக்கை போய்விட்டிருந்தது. தற்போது குடியுரிமைச் சட்டம், இதையும் எதிர்க்கவில்லையென்றால் நாளை தேசியக் குடிமக்கள் பதிவேடு பிரச்னை தேசத்தின் ஒவ்வொரு தனிநபரையும் தாக்கக் காத்திருக்கிறது. அநீதி இழைக்கப்பட்டால் அதைக் கண்டு ஒதுங்கக் கூடாது. அதற்கெதிராகக் குரலெழுப்ப வேண்டும். பெண்கள் என்றாலே அமைதியாகப் பேசிப் பழகச் சொல்லி இந்தச் சமூகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. பெண்களே! அப்படியிருக்காதீர்கள்" என்று வெள்ளந்தியும் வீரமும் தெளியப் பேசுகிறார் ஆயிஷா.

டெல்லி ஜாமியா மாணவிகள்
டெல்லி ஜாமியா மாணவிகள்

"மெரி பெஹனோ மாங்கே ஆசாதி,

மெரி பச்சே மாங்கே ஆசாதி,

நாரி கா நாரா ஆசாதி..."

செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான கமலா பசினின் கவிதை வரிகள் இவை. 'எம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விடுதலை தேவை, எம் பெண்களின் குரல்களில் விடுதலை ஒலிக்கும்" என்பது இதன் பொருள்.

நாரி கா நாரா ஆசாதி,

நாரி கா நாரா ஆசாதி...

மாணவரைக் காக்க மனித கேடயமான மாணவிகள்! - ஜாமியா போராட்டத்தில் கவனம் ஈர்த்த கேரள மாணவி #video
அடுத்த கட்டுரைக்கு