`20 வருஷமா பேருந்து நிக்கல.. கிராமசபையின் கண்துடைப்பு'- காதில் பூச்செருகி போராட்டம் நடத்திய மக்கள்!
தூத்துக்குடியில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும் கிராம மக்கள் கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தில் சரள்மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக லாரிகளில் மணலை அள்ளி விற்பனை செய்வதாக அந்தக் கிராம மக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு மனு அளித்தும் பலனில்லாததால் அந்தக் கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “எங்க கீழ்நாட்டுக்குறிச்சி கிராமப்பகுதியில் சரள்மண் எடுப்பதாக அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, ஆற்றுமணலை சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வர்றாங்க. இது சம்மந்தமா பலமுறை மனு கொடுத்தும் எந்தப்பலனும் இல்லை. நாளுக்கு நாள் மணல் அள்ளுற லாரிகளின் எண்ணிக்கை அதிகரிச்சபடியேதான் இருக்கு. அதிகாரிகள் உதவி இல்லாம மணல் கொள்ளை நடக்க வாய்ப்பே இல்ல.
அதனாலதான், சுதந்திர தினத்தன்று கிராமங்களில் கருப்புக்கொடி கட்டி அரசையும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளையும் கண்டித்து கருப்புக்கொடி கட்டப் போறோம்னு முன்கூட்டியே அறிவுப்பு பலகையும் வச்சோம். அதுக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்ல. அதனால, காஞ்சாபுரம், தலைக்காட்டுபுரம், சிந்தலக்கரை, முத்துலாபுரம் இராமனூத்து, கசவன்குன்று உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முக்கிய இடங்களில் கருப்புக்கொடி கட்டியிருக்கோம். இதுக்கு மேலயும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தலேன்னா மறியல் போரட்டத்துல ஈடுபடுவோம்.” என்றனர்.

இதைப் போல, கோவில்பட்டி அருகிலுள்ள மூப்பன்பட்டி கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமசபைக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மக்கள் காதில் பூச்செருகிக் கொண்டு வந்ததாலும், மாடுகளை அழைத்துக் கொண்டு மனு அளிக்க வந்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. இக்கிராமத்தின் வடக்குப்பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2014-15-ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வரையிலும் திறக்கப்படாத சேவை மையக் கட்டிடத்திற்கும் மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்தக் கிராமத்தில் இதற்கு முன்பு நடந்த கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செயல்படுத்தாததைக் கண்டித்தும் மக்கள் கோஷம் எழுப்பியதால் கூட்டம் நடைபெறவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “எங்க கிராமத்துல விவசாயம், கால்நடை வளர்ப்புத் தொழிலைத்தான் செய்துட்டு வர்றோம். குடிநீர் பற்றாக் குறையால் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்திட்டு வர்றோம். கோவில்பட்டியில் இருந்து மூப்பன்பட்டி வழியாக ஆவல்நத்தம் செல்லும் அரசுப்பேருந்து நிறுத்தப்பட்டு 20 ஆண்டுகளாகிறது. இதனால், கிராமத்திலிருந்து பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அரசின் இலவச பயண அட்டையைப் பயன்படுத்த முடியவில்லை. கால்நடைகள் எண்ணிக்கை அதிகம் என்பதால், கால்நடைகளுக்கான கொட்டகை அமைத்து தரச்சொல்லி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் மழை, வெயில் காலங்கள் நோய்த் தாக்குதலால் ஆடு, மாடுகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதைக் கண்டித்துதான் இதற்கான மனுக்களை மாடுகளின் கழுத்தில் அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தோம். இதே போல முந்தைய கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் காதுகளில் பூச்சுற்றிக் கொண்டு கூட்டத்திற்கு வந்தோம். கிராமங்களின் மேம்பாட்டிற்காகத்தான் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்திற்கும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லையென்றால் இதுபோன்ற கிராமசபைக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்பிற்காகத்தான் நடத்தப்படுகிறதா?” என்றனர் ஆவேசத்துடன்.