Published:Updated:

`வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தென்னிந்தியாவிலும் வெடிக்கும்!’ - எச்சரிக்கும் சி.மகேந்திரன்

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன் ( ம.அரவிந்த் )

`புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் நடைபெறும். வடஇந்தியாவில் நடைபெறும் போரட்டங்கள்போல் தென்னிந்தியாவிலும் விரைவில் வெடிக்கும்’ என மகேந்திரன் தெரிவித்தார்.

``புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, தமிழகத்தில் டிராக்டர் பேரணி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள்மீது காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். நானும் ஒரு விவசாயி’ எனக் கூறிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி இதற்காக வெட்கப்பட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் தெரிவித்தார்.

போராட்டம் குறித்துப் பேசிய மகேந்திரன்
போராட்டம் குறித்துப் பேசிய மகேந்திரன்

தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் என்பது கொரோனா பட்ஜெட்போல இருக்கிறது. கொரோனாவைக் காரணமாகக் கூறி அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பு ஏதும் இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். கார்ப்ரேட் நிறுவனங்களைக் கருத்தில்கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க இதில் சிறப்புத் திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இதைச் சுயசார்பு பட்ஜெட் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

மகேந்திரன்
மகேந்திரன்

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு செவி கொடுத்துக் கேட்க மறுக்கிறது. போராட்ட களத்தில் நான் 15 நாள்கள் விவசாயிகளோடு தங்கியிருந்தேன். அவர்கள் உணர்வுபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கான நிதியை ஒவ்வொரு விவசாயியிடமிருந்து கிராமப் பஞ்சாயத்து முறையில் வரிவைத்து, அவர்களாகவே வசூலித்து போராட்டத்துக்கான செலவைச் செய்துவருகின்றனர். இதில் பிறர் பங்களிப்பு ஏதும் கிடையாது.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற பேரணியைச் சிலர் சதித்திட்டம் தீட்டி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பகுதிக்கு சென்று வந்தவர்கள் கூறியதிலிருந்து உண்மை வெளியே வந்திருக்கிறது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் நடைபெறும். வடஇந்தியாவில் நடைபெறும் போரட்டங்கள்போல் தென்னிந்தியாவிலும் இந்தப் போராட்டங்கள் விரைவில் வெடிக்கும்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் டிராக்டர் பேரணி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். `நானும் ஒரு விவசாயி’ எனக் கூறிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி இதற்காக வெட்கப்பட வேண்டும். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பலரும் அறிவுபூர்வமாக சிந்தித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டம் என்பது புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது. தற்போதுள்ள இந்தியா என்பது லஞ்சம், ஊழல் நிறைந்த நாடாக இருப்பதால், படித்த இளைஞர்கள் பலர் அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்” என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு