Published:Updated:

ஜாமியாவில் தாக்குதல்; ஜே.என்.யூவில் வேடிக்கை... அரசை எதிர்த்து போராடும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள்

`அரசியலமைப்பு சட்டம் சொல்கிறதா நாங்கள் இந்தியக்குடிமகன் அல்ல என்று. அதிலுள்ள ஆர்ட்டிக்கிள் 19 கொடுத்த கருத்துச் சுதந்திரத்தை நம்பித்தான் இங்கு நாங்கள் அமர்ந்திருக்கிறோம்.’

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை புதுக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள், எட்டாவது நாளாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டையும் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசின் விடுமுறையைத் தொடர்ந்து இடையில் கைவிடப்பட்ட போராட்டம், மீண்டும் கல்லூரி தொடங்கிய ஜனவரி இரண்டாம் தேதியே புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இன்றுவரை நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களிடம் பேசியபோது, ``குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகக் கல்லூரியின் நுழைவுவாயிலுக்கு அருகில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம், தற்போது ஜே.என்.யூ-வில் போராடிய மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி அமைப்பின் தாக்குதலைக் கண்டித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஜாமியா, அலிகார் பல்கலைக்கழகங்களில் நடந்த தாக்குதலுக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கும் நிறைய வித்தியாசங்களைப் பார்க்கிறோம்.

ஜாமியாவிலும் அலிகாரிலும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனுமதியின்றி, காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். ஆனால், ஜே.என்.யூ-வில் அவ்வாறு நடைபெறவில்லை. கேட் 1-க்கு ஓடிச்சென்ற மாணவர்களை ஏ.பி.வி.பி அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் துரத்தி அடித்துக்கொண்டிருக்கையில், காவல்துறையினர் வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்படியென்றால், அரசே மாணவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறதா என்ற கேள்வியுடன்தான் இன்று நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஜே.என்.யூ-வின் பெண்கள் விடுதிக்குள் புகுந்தும் தாக்கியிருக்கிறார்கள். அவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து எப்படி சரியாக கல்லூரி மாணவர்கள் சேர்மனைக் கண்டறிந்து அடித்தார்கள் என்று தெரியவில்லை.போராட்டமே நடைபெறாத அந்த இடத்தில், கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்த இடத்தில் புகுந்து ஒருங்கிணைப்பாளர்களை எப்படி சரியாக அடையாளம் கண்டு அடித்தார்கள்? அதற்கான காணொளிகளும் இணையத்தில் வந்துகொண்டிருக்கின்றன" என்றனர்.

தொடர்ந்து, "ஜாமியாவில் தேசத் துரோகிகள் என்று கூறி அடிக்கத் தெரிந்த காவல்துறை, இங்கு ஏன் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது... யாரைக் காக்கிறது காவல்துறை? மக்களையா... ஆட்சியாளர்களையா? டெல்லி யூனியன் பிரதேசமாக இல்லாமல் இருந்திருந்தால், அரவிந்த் கேஜ்ரிவாலிடம் அதிகாரம் இருந்திருக்கும். அவர், மக்களை காப்பாற்றியிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர், தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டிக்கிறார். பல்கலைக்கழக வாயிலிலிருந்து யோகேந்திர யாதவ் வாசலில் நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி கோருகிறார், அனுமதி மறுக்கப்படுகிறது. கலவரக்காரர்களை அனுமதிக்கும் காவலர்கள், அவரை அனுமதிக்கவில்லை. அதுபோல, காவல்துறையே மாநில அதிகாரத்தில் இல்லை. அதுமட்டுமின்றி, வன்முறை நடந்த மாநிலங்களெல்லாம் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்; இறந்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்.

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

யார் தேசியத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்... யார் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று முடிவுசெய்கிறார்கள்... குடிமகன் என்று எதைக் கொண்டு முடிவுசெய்ய முடியும்? சான்றிதழ் பற்றி அறியாத எங்கள் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் சான்றிதழ் கேட்டால் எங்கே செல்வோம் நாங்கள்? அரசியலமைப்பு சட்டம் சொல்கிறதா நாங்கள் இந்தியக்குடிமகன் அல்ல என்று. அதிலுள்ள ஆர்ட்டிக்கிள் 19 கொடுத்த கருத்துச் சுதந்திரத்தை நம்பித்தான் இங்கு நாங்கள் அமர்ந்திருக்கிறோம். கோலம் போடுபவர்களை தேசத் துரோகிகள் என்கிறார்கள், அதற்கு இவர்கள் ஆர்ட்டிக்கிள் 19-ஐ இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்கிவிடலாம்.

தேசிய குடியுரிமைப் பதிவேட்டைக் கொண்டு நம் இருப்பைப் பதிவுசெய்யச் சொல்கிறார்கள். அதற்கு முன் நம் சான்றிதழ்களை வலுவிழக்கச் செய்வதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம். அதைக் கொண்டு இஸ்லாமியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் நாட்டிலிருந்து ஒடுக்கப்பார்க்கிறார்கள். அஸ்ஸாமில் 19 லட்சம் பேரை பிடித்து, அதில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்று அறிந்ததும் அந்த முயற்சியில் தோல்வியுற்றார்கள். இதை வெற்றிகரமாக அவர்கள் முடித்துவிட்டால், பிறகு சாதி வேற்றுமையில் நாட்டைப் பிளவுபடுத்துவார்கள். ஹிட்லரின் மறு உருவமாக மோடி இருக்கிறார் என்று ப.சிதம்பரமும் கூறியிருக்கியிறார்.

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அதுமட்டுமின்றி, இந்தப் போராட்டத்தை இப்போதைக்கு நாங்கள் கைவிடுவதாக இல்லை. தமிழகத்தில் முதன்முதலில் போராட்டத்தைத் தொடங்கியது புதுக்கல்லூரிதான். எங்கள் போராட்ட வடிவம் வேறு வேறு விதமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். முழுக்க முழுக்க மாணவர்கள் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தை தி.மு.க தூண்டிவிட்ட போராட்டம் என்று கூறுகின்றனர். இது, முழுக்க முழுக்க மாணவர்களின் அடிப்படை உணர்ச்சியால் நடைபெற்று வருகிறது. எந்த இயக்கமும் எங்களுக்குத் துணையில்லை.

ஜே.என்.யூ-வில் நேற்று தாக்குதல் நடந்ததால், இன்று காலை எங்களுடன் இரண்டாயிரம் பேர் இணைந்திருந்தனர். இக்கல்லூரியில் பயிலும் பாதிக்கும் மேற்பட்டோர் பகுதி நேர வேலை செய்து கொண்டிருப்பதால், தொடர்ந்து கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். ஆனாலும் இடைவிடாமல் தினமும் மாலை ஆறரை மணிவரை போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கும். எங்களுக்குள் காந்தியையும் பார்க்கலாம், அம்பேத்கரையும் பார்க்கலாம். நீங்களே அடித்தாலும் நாங்கள் அடிப்பதாக இல்லை. எங்களிடம் உங்கள் வெறுப்பு அரசியல் எடுபடாது" என்று கூறினர்.

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், ஆசாதி முழக்கமிட்டும் இந்தப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 'குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரை ஓயமாட்டோம்' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள் மாணவர்கள்.

- ஜான் ஜே. ஆகாஷ்

`ஒவ்வொரு இரும்புக்கம்பிக்கும் கருத்துக்கள் மூலம் பதில்!'- ஜே.என்.யூ  தாக்குதல் தொடர்பாக ஆயிஷ் கோஷ்