கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை பல்கலைக்கழககம் நுழைவு வாயில் முன் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாணவிகள் விடுதிக்குள், கடந்த சில நாள்களாக சில மர்ம நபர்கள் உலா வருகின்றனர். ஆனால், புகார் அளித்தும் பல்கலைக்கழக நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், ``கிட்டத்தட்ட ஒரு வாரமாகவே விடுதிக்குள் மர்மநபர்கள் நடமாடி வருகின்றனர். மாணவிகளின் மொபைல் போன்கள் திருடுபோயுள்ளன. எங்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

சிசிடிவி கூட வேலை செய்வதில்லை. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும்.” என்றனர். இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மற்றும் போலீஸார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணை வேந்தர் காளிராஜ், ``இதுகுறித்து என்னிடம் நேற்றுதான் புகார் அளித்தனர். இதற்கு முன்பு இதுபோன்ற புகார் வந்ததில்லை. விடுதியில் பெண் பாதுகாவலர்களை பணியமர்த்தும் பணி நடந்து வருகிறது. 5 நாள்களுக்குள் அந்த வசதி ஏற்படுத்தப்படும்.

அதுவரை போலீஸார் பாதுகாப்பு அளிப்பதாக கூறியுள்ளனர். சிசிடிவி கேமராவில் சில தொழில்நுட்ப கோளாறு உள்ளது. அதை சரிசெய்யும் பணிகளும் நடந்து வருகிறது“ என்றார்.