Published:Updated:

ராமேஸ்வரம்: கோயில் தீர்த்தங்களைத் திறக்கக் கோரி இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்!

ராமேஸ்வரம் கோயில் முன் நூதன போராட்டம்
ராமேஸ்வரம் கோயில் முன் நூதன போராட்டம் ( உ.பாண்டி )

கடந்த சில மாதங்களாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், கடற்கரையிலும், 22 தீர்த்தங்களிலும் நீராட தடை தொடர்கிறது.

ராமேஸ்வரம் கோயிலிலுள்ள தீர்த்தங்களில் நீராட பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கோயில் வாசலின் முன் நீராடி நூதன போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
உ.பாண்டி

இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது ராமேஸ்வரம். காசிக்கு நிகரான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் 22 புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. ராமேஸ்வரம் வரும் யாத்திரைவாசிகள், பக்தர்கள் இங்கிருக்கும் அக்னி தீர்த்தக் கடலிலும், அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் இருக்கும் 22 புனிதத் தீர்த்தங்களிலும் நீராடி, பின்னர் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், அக்னி தீர்த்தக் கடலில் நீராடத் தடை விதிக்கப்பட்டதுடன், தனுஷ்கோடிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், கடற்கரையிலும், 22 தீர்த்தங்களிலும் நீராடுவதற்குத் தடை தொடர்ந்தது.

தீர்த்த ஊர்வலம்
தீர்த்த ஊர்வலம்
உ.பாண்டி

இதற்கிடையே கடந்த 14-ம் தேதி முதல் மெரினா கடற்கரை, அதைத் தொடர்ந்து குற்றால அருவி ஆகியவற்றுக்கு மக்கள் செல்ல அரசு அனுமதி அளித்தது. ஆனால், ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் மட்டும் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால், ராமேஸ்வரம் வரும் யாத்திரைவாசிகள் தங்களது ஆன்மிகக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்தனர். தீர்த்தம் திறக்கப்படாததால், பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்துபோனது. பக்தர்கள் வருகைக் குறைவால் கோயில் மற்றும் யாத்திரைவாசிகளை நம்பியிருக்கும் உள்ளூர் தொழிலாளிகள், வியாபாரிகள், தங்கும் விடுதி நடத்துபவர்கள், யாத்திரைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் வருவாய் இழந்து மாற்றுத் தொழிலை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

ராமேஸ்வரம்: கோயில் நகைகள் எடைக் குறைவு! - அபராதம் விதிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி

இதைத் தொடர்ந்து, மற்ற இடங்களைப்போல் ராமேஸ்வரத்துக்கும் முழுமையான தளர்வுகளை அளிக்கவும், கடற்கரை, கோயில் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதிக்கவும் பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்தநிலையில், ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களில் நீராட பக்தர்களை அனுமதிக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கோயில் வாயிலின் முன் நூதனப் போராட்டம் நடத்தினர்.

கோயிலுக்குள் நுழைய  முயன்ற இ.கம்யூனிஸ்ட் கட்சியினர்
கோயிலுக்குள் நுழைய முயன்ற இ.கம்யூனிஸ்ட் கட்சியினர்
உ.பாண்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் முருகானந்தம், மாவட்டக்குழு நிர்வாகி செந்தில்வேல் ஆகியோர் தலைமையில் அந்தக் கட்சியினர் அக்னி தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து கோயிலின் கிழக்கு வாயில் பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு தீர்த்தங்களைத் திறக்க வலியுறுத்தி கோஷமிட்ட அவர்கள், தாங்கள் எடுத்து வந்திருந்த அக்னி தீர்த்தத்தைத் தலையில் ஊற்றியபடி நூதன போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நூதன போராட்டத்தில், புரோகிதர் சங்கத் தலைவர் ரவீந்திர பண்டா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வடகொரியா, பிச்சை, கண்ணன், ஜீவானந்தம், ஜோதிபாசு மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு