Published:Updated:

ராமேஸ்வரம்: `சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தாருங்கள்!’ - குடும்பத்தினர் கோரிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் மீனவர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் ( உ.பாண்டி )

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய குரூஸ், பாம்பனைச் சேர்ந்த அந்தோணிராஜ் ஆகியோருக்கு சொந்தமான மூன்று படகுகளையும், அவற்றிலிருந்த மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
உ.பாண்டி

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 14-ம் தேதி காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இவர்கள் அன்றைய தினம் பாரம்பர்யப் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்துவிட்டு அங்கிருந்து கரையை நோக்கித் திரும்பினர். இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி மீனவர்களைத் தாக்கியதுடன், சில படகுகளையும் சிறைப்பிடித்தனர்.

மீனவர்கள் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்
மீனவர்கள் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்
உ.பாண்டி

இதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய குரூஸ், பாம்பனைச் சேர்ந்த அந்தோணிராஜ் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளையும், அவற்றிலிருந்த மீனவர்கள் சுரேஷ், அசோக், குமரேசன், கோபி, அப்துல் கலாம், ஜெனோவர்,டைடஸ், சூசை, நம்பு, பாலா, ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட 22 மீனவர்களையும் சிறைப்பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்த மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி கொரோனா நோய் அச்சம் காரணமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அன்றைய தினம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சிம்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகும், அதில் சென்ற ஏழு மீனவர்களும் படகு பழுதான நிலையில் இலங்கை இரண தீவுப் பகுதியில் கரை ஒதுங்கினர். இவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் இரண தீவுப் பகுதியில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இந்தநிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க முடியாது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். இதனால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் குடும்ப பெண்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் குடும்ப பெண்கள்.
உ.பாண்டி

இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவேகானந்தா குடில் நிர்வாகி சுவாமி பிரணவானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், தேவதாஸ், சேசுராஜ், எமரிட், சகாயம், சந்தியா மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மீனவர்களை மீட்க வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு