Published:Updated:

``நம்பி நிலத்தை கொடுத்தோம், பணி நிரந்திரம் செய்யாம ஏமாத்துறாங்க” கொதிக்கும் காட்டுப்பள்ளி மக்கள்!"

போராட்டத்தில் மீனவ மக்கள்
போராட்டத்தில் மீனவ மக்கள்

நிலம் கொடுத்த எங்களையே இன்னும் பணி நிரந்தரம் செய்யாமல் வதைத்து வருகிறார்கள். இந்நிலையில், மீண்டும் விரிவாக்கம் செய்வதற்கு இன்னும் பல கிராமங்களைச் சூறையாடி மக்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கப் பார்க்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டை அடுத்த காட்டுப்பள்ளியில் L&T நிறுவனம் 2012-ம் ஆண்டு கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தைக் கட்டியெழுப்பியது. அதற்காக L&T நிறுவனம் காட்டுப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் அதிகமானோரை அப்புறப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்தியது.

துறைமுகம் அமைக்க நிலம் கொடுத்த காட்டுப்பள்ளி குடும்பங்களைச் சேர்ந்த 144 பேருக்குத் துறைமுகத்தில் நிரந்தர பணி வழங்கப்படும் என்று L&T நிறுவனம் மக்களிடம் உறுதி அளித்திருந்தது. அதன் படி, துறைமுகத்தில் காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 144 பேர் 2012 முதல் பணி புரிந்து வருகின்றனர்.

காட்டுப்பள்ளி துறைமுகம்
காட்டுப்பள்ளி துறைமுகம்
க.சுபகுணம்

L&T வசமிருந்த துறைமுகத்தைக் கடந்த 2018-ம் ஆண்டு வாங்கிய அதானி குழுமம், 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் துறைமுகத்தை 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக, அந்நிறுவனம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதானி குழுமத்தின் இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு காலஞ்சி, காட்டுப்பள்ளி, பழவேற்காடு என 80-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

பழவேற்காடு
பழவேற்காடு

இது ஒரு புறமிருக்க, மறுபுறம் துறைமுகம் அமைக்க நிலம் கொடுத்துவிட்டு அங்குப் பணி புரிந்து வருபவர்கள், பணி நியமனம் வழங்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகியும், இதுவரையிலும் பணி நிரந்தரம் செய்யப்படாததால் கடந்த ஒரு வருட காலமாக வேலை நிறுத்தம், சாலை மறியல் என நிர்வாகத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், நேற்று மீண்டும் பணி நிரந்தரம் செய்யுமாறு துறைமுகத்தில் பணி புரிந்து வரும் காட்டுப்பள்ளி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாகக் காட்டுப்பள்ளி, காலஞ்சி மற்றும் பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் மீனவ மக்கள்
போராட்டத்தில் மீனவ மக்கள்

பல மணி நேரம் நீடித்த போராட்டத்தைக் கைவிடுமாறு துறைமுக நிர்வாகம் கேட்டுக்கொண்ட போதிலும், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அதனையடுத்து, அங்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாள அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட துறைமுக ஊழியர்கள் கூறுகையில், "தற்போது இந்த துறைமுகம் அதானி குழுமத்தின் வசம் இருக்கிறது. ஆனால், இந்த துறைமுகத்தை கட்டியது L&T நிறுவனம். துறைமுகம் அமைப்பதற்காகக் காட்டுப்பள்ளி பகுதியில் வசித்து வந்த எங்களை அதிகாரிகளை வைத்துக் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினார்கள். நிலம் கொடுத்தால் துறைமுகத்தில் நிரந்தர வேலை அளிப்பதாகச் சொன்னார்கள். அதை நம்பி நாங்கள் அனைவரும் அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்தோம். துறைமுகமும் சீக்கிரத்திலேயே கட்டப்பட்டது. ஆனால், அவர்கள் சொன்னது போல் நிலம் கொடுத்த குடும்பங்களைச் சேர்ந்த அனைவருக்கும் வேலை வழங்காமல், வெறும் 144 பேருக்குத் தான் வேலை வழங்கினார்கள்.

Vikatan

2012-ம் ஆண்டு பணி நியமனம் அளிக்கப்பட்டு வெவ்வேறு பிரிவுகளில் எங்களுக்கு வேலை வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் துறைமுக நிர்வாகம் அனைவருக்கும் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி வழங்கியது. நாங்களும், ஓரிரு வருடங்களில் நிரந்தரம் செய்து விடுவாராகள் என்று விட்டுவிட்டோம்.

ஆனால், இத்தனை வருடங்கள் ஓடி விட்டது அவர்கள் எங்களைப் பணி நிரந்தரம் செய்வதாகத் தெரியவில்லை. ஏற்கனவே இதற்கு முன் வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டோம். அப்போது, இன்னும் ஓரிரு வாரங்களில் நிரந்தரம் செய்து விடுவோம் என்று சமரசம் செய்தனர். ஆனால், சொன்னதைச் செய்யவில்லை. இவர்களின் பேச்சை நம்பி எங்களின் வாழ்வாதாரமாக இருந்த இந்த காட்டுப்பள்ளியைத் துறைமுகத்திற்காக அளித்தோம். ஆனால், அவர்கள் எங்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.

நிலம் கொடுத்த எங்களையே இன்னும் பணி நிரந்தரம் செய்யாமல் வதைத்து வருகிறார்கள். இந்நிலையில், மீண்டும் விரிவாக்கம் செய்வதற்கு இன்னும் பல கிராமங்களைச் சூறையாடி மக்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கப் பார்க்கிறார்கள். வேலை வழங்குவதாக ஆசை காட்டி மோசம் செய்து வரும் துறைமுக நிர்வாகம் எங்கள் போராட்டங்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றனர்.

மீனவ மக்களின் போராட்டத்தால் காட்டுப்பள்ளி பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

அடுத்த கட்டுரைக்கு