Published:Updated:

பட்டாசு ஆலை விபத்து: `செக் பவுன்ஸ்; மத்திய அரசின் நிவாரணமும் கிடைக்கல!’ -பரிதவிக்கும் தொழிலாளர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம்
சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம்

விருதுநகரில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கபட்ட தலா ரூ.5 லட்சத்திற்கு காசோலை, பவுன்ஸ் ஆகிவிட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான, பேன்ஸி ரக பட்டாசு தயாரிப்பிற்கான நாக்பூர் உரிமம் பெற்று 'ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை' இயங்கி வந்தது. சட்டவிரோதமாக இந்த ஆலை 4 பேருக்கு உள் குத்தகைக்கும் விடப்பட்டது. 30 அறைகளில் 89 பேர் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், 20 அறைகள் இடிந்து தரை மட்டமாயின. 27 பேர் உடல் கருகியும், சிதறியும் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றனர்.

சாத்தூர் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு
சாத்தூர் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு

முழுமையான விதிமீறலும், தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான பட்டாசு உற்பத்தி அழுத்தமும்தான் இந்த விபத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இந்த ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்களான சக்திவேல், ராஜா, சிவகுமார், பொன்னுபாண்டி, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போதே அதிகாரிகளின் முன்னிலையில் ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிலையில்தான், அந்தக் காசோலைகளை வங்கியில் கலெக்க்ஷனுக்காக போட்டபோது, அதில், 2 பேருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளன. மீதமுள்ள 25 பேரின் குடும்பங்கள் நான்கு மாதமாகியும் தற்போது வரை பணம் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அக்குடும்பத்தினர்கள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இன்று சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசினோம்,

காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்

“பட்டாசு, தீப்பெட்டி உற்பத்திதான் எங்களுக்கு முக்கியத்தொழில். வயித்துப் பாட்டைக் கழிக்கிறதுக்கும், பிள்ளைகளைப் படிக்க வைக்கிறதுக்கும் எங்க குடும்பத்துல உள்ளவங்க பட்டாசு ஆலைக்கு வேலைக்குப் போனாங்க. ஒத்த ரூமுக்குள்ள அதிகபட்சமா நாலு பேரு இருந்து பார்க்க வேண்டிய வேலையை பதினைஞ்சு பேரு வரைக்கும் ஒன்னா உட்கார்ந்து பார்க்கச் சொல்லுவாங்க. ரூமுக்குள்ள செய்ய வேண்டிய பட்டாசு உற்பத்தியை திறந்தவெளியிலயும், மரத்தடியிலயும் செயயச் சொல்லுவாங்க. இப்படி இடைவெளியே இல்லாம உட்கார்ந்து தொடர்ந்து வேலை பார்த்ததுனாலயும், அதிக உற்பத்தி நெருக்கடியும், தொழிலாளர்களை அவசரப் பட்டுத்துனதும்தான் அந்த பட்டாசு விபத்துக்கு முக்கியக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கக் குடும்பத்தை தாங்கிப் பிடிச்ச தூண்களா இருந்தவங்களெல்லாம் அந்தப் பட்டாசு விபத்துல உடல் சிதறி இறந்து போயிட்டாங்க. உயிரிழந்த குடும்பத்துக்கு மத்திய அரசு ரெண்டு லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதியா மூணு லட்சமும் இழப்பீடா அறிவிச்சாங்க. அந்த தொகை மட்டும்தான் எங்களுக்கு கிடைச்சுது. இந்த நிலையிலதான், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெறும்போது 27 பேரின் குடும்பத்துக்கும் 5 லட்ச ரூபாய்க்கான செக்கை குத்தகைக்கு எடுத்த முதலாளிமார்கள் கொடுத்தாங்க. ஆனா, அந்தக் செக்குல குறிப்பிட்டிருந்த தேதியில இருந்து நாலைஞ்சு நாளு கழிச்சுதுதான் பேங்குல போட்டோம். ஆனா, ”செக்கு பவுன்ஸ் ஆயிடுச்சு”ன்னு சொல்லிட்டாங்க.

மகாலெட்சுமி - மோகனசெல்வி
மகாலெட்சுமி - மோகனசெல்வி

படிக்கிற பிள்ளைகளுக்கு ஸ்கூல், காலேஜ் பீஸ் கட்டணும், ஏற்கெனவே நிச்சயதார்த்தம் செஞ்சு வச்சிருந்த நாலஞ்சு கல்யாணத்தை நடத்தலான்னு நினைச்சிருந்தோம். இதுல ரெண்டு மூணு பேருக்கு கண் ஆபரேசன், குடல் ஆபரேசன் பண்ண வேண்டியதிருக்கு. வாங்குன கடன்களை வேற அடைக்கணும். எல்லாத்துக்கும் இந்த பணத்தைத்தான் மலையா நம்பியிருந்தோம். ஆனா, இப்போ என்ன செய்யுறதுன்னு தெரியாம நிற்கதியா நிற்குறோம். அதே மாதிரி மத்தியரசு அறிவிச்ச நிவரணமும் நாலு மாசமாகியும் எங்களுக்கு கிடைக்கலை” என்றனர் கண்ணீருடன்.

”இது முதல் முறையல்ல., 2020-ம் ஆண்டு நடந்த பட்டாசு ஆலை விபத்துல உயிரிழந்த 14 பேரின் குடும்பத்துக்கு ஆலை நிர்வாகம் வழங்கப்பட்ட காசோலையும் பவுன்ஸ் ஆயிடுச்சு. அந்த தொகையும் இன்னும் கிடைக்கவில்லை” என்றனர் சிப்பிப்பாறை கிராம மக்கள். தூத்துக்குடி மாவட்டம் முக்கூட்டுமலை கிராமத்தைச் சேர்ந்த மோகனசெல்வி, ”போன வருசம் மார்ச் 20-ம் தேதி விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையில உள்ள ’ராஜம்மாள் பட்டாசு ஆலை’யில நடந்த விபத்துல 14 பேர் இறந்து போயிட்டங்க. சரவெடி தயாரிப்பதற்கான உரிமத்தை வச்சுக்கிட்டு, சட்டவிரோதமா பேன்ஸி ரக பட்டாசு தயாரிச்சுதுதான் அந்த விபத்துக்குக் காரணம். அந்த கம்பெனி முதலாளி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்த 4 லட்ச ரூபாய்க்கான செக்கும் பவுன்ஸ் ஆயிடுச்சு. பல தடவை போராட்டம் நடத்தியதோட முதலாளி வீடு, போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபிஸ்னு அலையா அலைஞ்சதுதான் மிச்சம் எந்த நடவடிக்கையும் இல்ல.

தாசில்தார் - வெங்கடேஷ்
தாசில்தார் - வெங்கடேஷ்

முதலமைச்சர் நிவாரண நிதியா ஒரு குடும்பத்துக்கு அறிவிச்ச 1 லட்சமும் 15 மாசமாகியும் இப்போ வரைக்கும் கிடைக்கல. குடும்பத்துல உள்ள உசுரு போனது மட்டும்தான் மிச்சம்” என்றார் வேதனையுடன். விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மகாலட்சுமியிடம் பேசினோம், “பட்டாசு ஆலை விபத்துல தொழிலாளர்கள் இறந்து போயிட்டா அவர்களோட குடும்பத்துக்கு ஆலை நிர்வாகம் இழப்பீடு கொடுக்கணும்னு எந்த விதியுமே கிடையாது.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து:   நிவாரண தொகை... காசோலை பவுன்ஸ்! -அதிர்ச்சியில் குடும்பத்தினர்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக தொழிலாளர்கள் சங்கத்தினர் போராடிப் போராடிதான் இழப்பீட்டுத் தொகையை பெற்று வருகிறார்கள். அந்த நேரப் பதற்றத்தைக் குறைப்பதற்காகவும், குற்ற வழக்கில் இருந்து தப்பித் கொள்வதற்காகவும் காசோலையை தாராளமாக கொடுக்கிறார்கள் பட்டாசு ஆலைகளின் முதலாளிகள். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சென்று வங்கியில் டெப்பாசிட் செய்தால், 90 சதவீதம் பணம் இல்லை என்றே பதிலே கிடைக்கும். ஆலை முதலாளியிடம் கேட்டாலும் எந்த பதிலும் இருக்காது. பட்டாசு ஆலை விபத்துக்கான இழப்பீட்டு தொகை தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இதற்கு நிரந்தரத்தீர்வு இருக்கும். இதை சட்டமாக்கிட தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

“பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை பவுன்ஸ் ஆனது தொடர்பாகவும், அந்த தொகையை ஆலையின் உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரும்படியும் மனு அளித்துள்ளனர்.

சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டம்
சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டம்

இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பட்டாசு ஆலையின் உரிமையாளரின் சொத்துக்கள் குறித்த விவரங்களை கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார், சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ்,

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு