Published:Updated:

கிளர்ச்சியால் கிடைத்த `நெல்லை எழுச்சி தினம்’ - சுதந்திரத்தின் ரத்த சரித்திரம்!#OnThisDay

தாமிரபரணி ஆற்றின் பின்னணியில் தைப்பூச மண்டபம்

வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் ஆங்கிலேயரை எதிர்த்து தாமிரபரணிக் கரையில் உரையாற்றியதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். அதைக் கண்டித்து, நெல்லையில் ஆங்கிலேய அரசை ஸ்தம்பிக்கவைக்கும் அளவுக்கு கிளர்ச்சி மூண்டது. 

கிளர்ச்சியால் கிடைத்த `நெல்லை எழுச்சி தினம்’ - சுதந்திரத்தின் ரத்த சரித்திரம்!#OnThisDay

வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் ஆங்கிலேயரை எதிர்த்து தாமிரபரணிக் கரையில் உரையாற்றியதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். அதைக் கண்டித்து, நெல்லையில் ஆங்கிலேய அரசை ஸ்தம்பிக்கவைக்கும் அளவுக்கு கிளர்ச்சி மூண்டது. 

Published:Updated:
தாமிரபரணி ஆற்றின் பின்னணியில் தைப்பூச மண்டபம்

சுதந்திரப் போராட்டத்தில், நெல்லை மாவட்டத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆங்கிலேய அரசை முதன்முதலில் எதிர்க்கத் துணிந்த பூலித்தேவன், கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் வரிசையில் விடுதலை வேட்கையுடன்  மக்களை அணி திரட்டிய வ.உ.சி, பாரதியார், வாஞ்சிநாதன் எனப் பலரும் வாழ்ந்த மண், நெல்லை. 

வ.உ.சி சிலை
வ.உ.சி சிலை

ஆங்கிலேய அரசுக்கு எதிராக சுதேசி கப்பல்களை வாங்கி இயக்கிக்காட்டிய வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு மக்களிடம் பிரசாரம் செய்துவந்தார்கள். பொருளாதாரத்தில் கைவைத்ததால், வ.உ.சி உள்ளிட்ட சுதேசி இயக்கத்தினர் மீது  ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரம்.

தாமிரபரணிக் கரையில் திரண்ட 12 ஆயிரம் பேர்!

1908 மார்ச் 8-ம் தேதி, வங்கத்துச் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட விபின் சந்திரபால் விடுவிக்கப்பட்ட தினத்தை சுயராஜ்ய தினமாகக் கொண்டாடினார்கள். நெல்லை தாமிரபரணிக் கரையில், மார்ச் 9-ம் தேதி, தடையை மீறி பொதுக்கூட்டம் நடந்தது. 

வ.உ.சி பேசிய தைப்பூச மண்டபம்
வ.உ.சி பேசிய தைப்பூச மண்டபம்

நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் உள்ளே இருக்கும் தைப்பூச மண்டபத்தின் கூரையில் ஏறி வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் எழுச்சியுடன் பேசினார்கள். அந்த உரையைக் கேட்க, தடையை மீறி தாமிரபரணிக் கரையில் 12,000 பேர் கூடியுள்ளனர். பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக மூவரும் மார்ச் 12-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.

வ.உ.சி, உள்ளிட்ட மூவரும் கைதானதை அறிந்ததும், நெல்லை மாவட்டத்தில் மறுநாள் (1908 மார்ச் 13-ம் தேதி) கலவரம் மூண்டது. சாதி, சமயங்களை மறந்து ஆங்காங்கே மக்கள் திரண்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார்கள். அரசு கட்டடங்கள், காவல் நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். 

கூரை மீதேறி வ.உ.சி பேசிய மண்டபம்
கூரை மீதேறி வ.உ.சி பேசிய மண்டபம்

மக்களின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த, ஆங்கிலேய அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் ஒரு சிறுவன், கோயில் பூசாரி, இஸ்லாமியர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டனர். அடக்குமுறையால் ஆங்கிலேயர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த விவகாரம் அப்போது, பிரிட்டன் நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாளை ஆங்கிலேயர்கள் ’நெல்லைக் கலவரம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

வரலாற்றுப் பிழையைச் சரிப்படுத்திய மாநகராட்சி!

இந்தச் சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில், வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை ( 40 வருடங்கள்) விதிக்கப்பட்டது. சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டின் கடைக்கோடியில் நடந்த இந்த முதல் கிளர்ச்சியே, சுதந்திர தாகம் பிற இடங்களிலும் பரவக் காரணமாக அமைந்தது.

நாட்டு விடுதலைக்காக சாதி, சமய பேதங்களை மறந்து போராடிய வரலாறு இன்றைய இளைஞர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்.
எழுத்தாளர் நாறும்பூநாதன்

’நாட்டின் விடுதலைக்காக சாதி, சமய பேதங்களை மறந்து மக்கள் ஒன்றுபட்டுப் போராடிய வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தவேண்டியது அவசியம். குறிப்பாக, தற்போதைய சூழலில், இதையெல்லாம் பாடத் திட்டத்தில் சேர்த்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்’ என்கிறார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளரும் எழுத்தாளருமான நாறும்பூநாதன்.

நெல்லை எழுச்சி தினம் பற்றிப் பேசிய எழுத்தாளர் நாறும்பூநாதன், “112 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்றைப் பதிவுசெய்த தாமிரபரணி இப்போதும் ஓடிக்கொண்டிருகிறது. அதன் அருகிலேயே அந்த வரலாற்றைச் சுமந்தபடி தைப்பூச மண்டபமும் எந்தச் சேதாரமும் இல்லாமல் இருக்கிறது.

எழுத்தாளர் நாறும்பூநாதன்
எழுத்தாளர் நாறும்பூநாதன்

வ.உ.சி-யும் சுப்பிரமணிய சிவாவும், பத்மநாப ஐயங்காரும் கைதானதைக் கேள்விப்பட்டதும் மக்களிடம் ஏற்பட்ட ஆத்திரம், அரசு அலுவலகங்களை அடித்துநொறுக்கி தீக்கிரையாக்கச் செய்திருக்கிறது. அதை அப்போதைய மாநகராட்சி, ‘நெல்லைக் கலவரம்’ எனப் பதிவுசெய்தது. ஆனால், 100 வருடங்களுக்குப் பிறகு, ஏ.எல்.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது, அந்த வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டு, ‘நெல்லை எழுச்சி தினம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு விழாவுக்கு கோரிக்கை!

தற்போதைய இளைஞர்களிடம் அறச்சீற்றம் கிடையாது. அநீதியைக் கண்டு பொங்கும் குணம் மறைந்துவருகிறது. சாதி, மத பேதங்கள் பள்ளி மாணவர்களிடம்கூட இருக்கிறது. நமது தேசத்தின் வரலாறு, நமது பண்பாடு குறித்து அவர்களுக்குத் தெரியாமல் போனதே இத்தகைய பின்னடைவுக்குக் காரணம்.

வ.உ.சி மணிமண்டபம்
வ.உ.சி மணிமண்டபம்

அதனால், நெல்லை எழுச்சி தினம் குறித்தும் அதன் பின்னணி பற்றியும் மாணவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அநீதிக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களோடு சேர்ந்து எழுச்சியுடன் போராடியது பற்றித் தெரியப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தினத்தை அரசு விழாவாக நடத்த முன்வர வேண்டும்” என்றார்.