Published:Updated:

``அன்றைக்கு என்.பி.ஆர் வந்திருந்தால் எம்.ஜி.ஆர் வந்திருப்பாரா?'' வறுத்தெடுக்கும் வண்ணாரப்பேட்டை!

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்...
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில்...

''என்.பி.ஆரில் இப்போது கேட்கப்படும் கூடுதல் விவரங்களை 1950-களில் கேட்டிருந்தால் எம்.ஜி.ஆர் தடுப்பு முகாமில்தான் இருந்திருப்பார்'' என விமர்சிக்கிறார்கள் வண்ணாரப்பேட்டை போராட்டாக்காரர்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷாகீன் பாக் ஏரியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் சூழலில், சென்னை வண்ணாரப்பேட்டையில் அதே பாணியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

வண்ணாரப்பேட்டையில் வைக்கப்பட்ட போஸ்டர்.
வண்ணாரப்பேட்டையில் வைக்கப்பட்ட போஸ்டர்.

பிப்ரவரி 14-ம் தேதி வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டம் தடியடியாக மாற... அது `சென்னை ஷாஹின் பாக்' போராட்டமாக மாறியது.11-வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் ஏற்படுத்திய பாதிப்பு தமிழகம் முழுவதும் 'ஷாகீன் பாக்'கள் என்கிற தொடர் போராட்டங்களுக்கு வித்திட்டன.

வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடத்தப்படுகிறது என்ற போதும் மோடி மற்றும் எடப்பாடி ஆட்சியில் நடக்கும் நிகழ்வுகளையும் விமர்சிக்கிறார்கள். பி.ஜே.பி-க்கு ஆதரவு கொடுக்கும் அ.தி.முக-வை 'அடிமை அ.தி.மு.க' என முழக்கமிடுகிறார்கள். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுகிறவர்கள், எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் வறுத்தெடுக்கிறார்கள். '`ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஒருபோதும் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்திருக்க மாட்டார்'' எனப் பேசுகிறார்கள்

போராட்டம்
போராட்டம்

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த அ.தி.மு.க மீது கடும் கோபத்தில் இருப்பது அப்பட்டமாகவே போராட்டத்தில் வெளிப்பட்டது. வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஜெயலலிதாபோல வேடமிட்ட சிறுமி, ''நான் ஜெயலலிதா பேசுகிறேன். நான் உயிருடன் இருந்திருந்தால் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர்-யை அனுமதித்திருக்க மாட்டேன். என்னுடைய கட்சியின் சின்னம்தான் இரட்டை இலை. அது இப்போது பி.ஜே.பி-யின் எச்சில் இலை'' என்றபோது கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

எம்.ஜி.ஆர் சிறையில் இருப்பதுபோல ஓவியம் வரைந்து, `இலங்கை மண்ணில் பிறந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கு உயிருடன் இருந்திருந்தால், என்.ஆர்.சி அவரை முகாமுக்குள் தள்ளியிருக்கும். சி.ஏ.ஏ அவருக்கு உதவியிருக்காது. இதற்குப் பதில் சொல்லுங்கள் எடப்பாடியாரே!' என்ற வார்த்தைகளுடன் வண்ணாரப்பேட்டையில் பேனர் வைத்திருக்கிறார்கள்.

போராட்டம்
போராட்டம்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததால் அ.தி.மு.க-வை கடுமையாகத் திட்டுகிறார்கள். ''குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வாக்களித்த நீங்கள், அதற்கு பிராயச்சித்தமாக சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றைத் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' எனக் கோரிக்கை வைக்கிறார்கள்.

''குடியுரிமை சட்டத்தில் இப்போது சேர்க்கப்பட்ட புதிய ஷரத்துகள் இந்தியா குடியரசு ஆனபோது கொண்டு வரப்பட்டிருந்தால் இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆருக்கு குடியுரிமை கிடைத்திருக்காது. அவர் நடிகராக மாறியிருக்க முடியாது. அ.தி.மு.க என்ற கட்சியே உருவாகியிருக்காது. இன்றைக்கு என்.பி.ஆரில் கேட்கப்படும் கூடுதலான ஆறு கேள்விகளை அன்றைக்குக் கேட்டிருந்தால் எம்.ஜி.ஆர் தமிழகத்துக்குக் கிடைத்திருக்க மாட்டார். 1952-ம் ஆண்டே என்.பி.ஆர் வந்திருந்தால் எம்.ஜி.ஆர் வந்திருப்பாரா? இதெல்லாம் எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தெரியாதா?'' எனக் கேள்வி எழுப்புகிறார்கள் வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்.

ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஆய்ஷே கோஷ்
ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஆய்ஷே கோஷ்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்புகின்றனர். ''இலங்கையில் பிறந்ததால்தான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் இருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் பண உதவியும் பயிற்சியும் அளித்தார். அந்த ஈழத் தமிழ் இந்துக்களைக்கூடச் சேர்த்துக்கொள்ளாத குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக அவர் உருவாக்கிய கட்சியே வாக்களித்திருப்பது எம்.ஜி.ஆருக்கு செய்யும் துரோகம்'' எனக் கொதிக்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

அடுத்த கட்டுரைக்கு