Published:Updated:

வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான போராட்டம்... பெ.மணியரசனுக்கு சில கேள்விகள்!

உலகம் முழுவதும் மென்பொருள் துறையில் தமிழர்கள் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இஸ்ரோவில் தமிழர்கள் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால், வருவாய்த்துறை, அஞ்சல்துறை, ரயில்வே துறையில் மட்டும் தேர்வாக முடியாமல் இருக்கிறார்கள் என்றால் தமிழர்கள் திறமையில்லாதவர்களா?

போராட்டம்
போராட்டம்

``திரும்பிப் போங்கள், திரும்பிப் போங்கள், வெளி மாநிலத்தவர்களே திரும்பிப்போங்கள், வராதீர்கள், வராதீர்கள் தமிழ்நாட்டுக்குள் வராதீர்கள்'' எனும் முழக்கத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இன்று காலை ஸ்தம்பிக்க வைத்தனர் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர். பீகார், ஒடிசா போன்ற வடமாநிலங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வேலைக்காக வருபவர்களை, நீங்கள் ``வேலைக்காக இங்கு வராதீர்கள், எங்கள் வேலைகளைப் பறிக்காதீர்கள்'' எனும் வேண்டுகோள் விடுக்கும் வகையில் `மனிதச் சுவர் போராட்டம்' எனும் பெயரில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அந்த இயக்கத்தின் தலைவர் மணியரசன், இயக்க உறுப்பினர்கள், தமிழ் உணர்வாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கி.வெங்கட்ராமன் - பெ.மணியரசன்
கி.வெங்கட்ராமன் - பெ.மணியரசன்

போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் பேசுகையில்,

``சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தின் வழியாகத்தான் தினந்தோறும், வெளி மாநிலங்களில் இருந்து, குறிப்பாக வட மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டுக்கு வந்து குவிகிறார்கள். இங்கே தமிழர்கள் வேலையில்லாமல் அலைகிறார்கள். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் சுற்றுலா விசாவில் சென்று மாட்டிக்கொண்டு கசையடி வாங்கி சிறைக்கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். தமிழகத்தில் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்பை முடித்து 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தமிழர்களின் அரசு வேலைவாய்ப்புகளை சூழ்ச்சி செய்து வட இந்தியர்கள் பறித்துக்கொள்கிறார்கள். குறிப்பாக ரயில்வே போன்ற துறைகளில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. கேட் கீப்பர் வேலைக்கு கூட ராஜஸ்தானில் இருந்துதான் தேர்வு செய்யப்படுகிறார்கள். வருமானவரித்துறை அலுவலகத்தில், வங்கிகளில் வட மாநிலத்தவரே அதிகமாக பணியில் இருக்கிறார்கள்.

மார்வாடிகளும், குஜராத்திகளும், மலையாளிகளும், ஆந்திரத் தெலுங்கர்களும்தான் தமிழ்நாட்டில் தொழிலதிபர்களாக, தொழில்துறையில் ஆதிக்கம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அன்றாட கூலித் தொழில்களிலும் வெளி மாநிலத்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதனால், தமிழர்களின் வேலைவாய்ப்பு அடியோடு பறிக்கப்படுகிறது. 1956 நவம்பர் ஒன்றாம் தேதி, மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் குறியேறியவர்களை எல்லாம் படிப்படியாக வெளியேற்ற வேண்டும். இந்த மண்ணின் மக்களுக்கு வாழ்வுரிமை வேண்டும். தமிழர்கள் வெளிமாநிலங்களில் அரசு வேலைக்குச் செல்ல ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் எளிதாக வேலைக்கு வரலாம் என்றால் தமிழ் இளைஞர்கள் வேலைக்காக எங்கே போவார்கள்?

போராட்டம்
போராட்டம்

உலகம் முழுவதும் மென்பொருள் துறையில் தமிழர்கள் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இஸ்ரோவில் தமிழர்கள் உயர் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால், வருவாய்த்துறை, அஞ்சல்துறை, ரயில்வே துறையில் மட்டும் தேர்வாக முடியாமல் இருக்கிறார்கள் என்றால் தமிழர்கள் திறமையில்லாதவர்களா?

நிச்சயமாக இல்லை, திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிப்படுகிறார்கள் என்பதே உண்மை. மத்திய அரசு இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது . தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு விலை போகின்றன. தமிழக மக்கள்தான் இந்த அநீதியைத் தட்டிக்கேட்க முடியும். அதை எதிர்த்துப் போராட முடியும். அஸ்ஸாமில் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் கூட எங்கள் மாநிலத்துக்குள் பிற மாநிலத்தவர்கள் வரக் கூடாது என போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், நாம் நடத்தினால் அதைத்தவறு என்று சொல்கிறார்கள். குஜராத்தில், மகாராஷ்டிராவில், ஆந்திராவில் இன்னும் பல மாநிலங்களில் அந்த மாநில மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனச் சட்டம் இருக்கிறது.

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

தமிழ்நாட்டில் அப்படி எந்தச் சட்டமும் இல்லை. மக்களாகிய நாம்தான் போராடி அப்படியொரு சட்டத்தை இயற்றச்செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 சதவிகிதம் வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு வேலைகளில் நூறு சதவிகிதம் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதற்கான சட்டமியற்றப்பட வேண்டும்'' என மிகக் காட்டமாகப் பேசி முடித்தார்.

அவரைத் தொடர்ந்து போராட்டத்தில் தலைமை வகித்த கி.வெங்கட்ராமன் பேசினார். தொடர்ந்து, `வெளிமாநிலத்தவர்களே திரும்பிப் போங்க’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் நேரத்தில் இந்தப் போராட்டத்தை நீங்கள் முன்னெடுப்பது அதை மடை மாற்றுவதற்கான வேலை என விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றனவே?

அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் தற்போது எதற்காகப் போராட்டம் நடைபெறுகிறது. மண்ணின் மக்களுக்கான உரிமைக்கான போராட்டம்தான் அங்கு நடைபெற்று வருகிறது. நாங்கள் மதப் பாகுபாட்டோடு கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை ஏற்கவில்லை. அதேவேளையில், வட கிழக்கு மாநில மக்கள் போராடுவதுபோல் தமிழக உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம்.  அதை ஆதரிப்பவர்கள், எங்களின் போராட்டத்தை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள். இது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்.

தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்க என்பது அவர்களை அச்சுறுத்தும் ஒரு கோஷம் இல்லையா?

மகாராஷ்டிராவில், கர்நாடகாவில், கேரளாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டது போல்  நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. திரும்பிப் போங்கள் என வேண்டுகோள்தான் விடுக்கிறோம். காந்திய வழியில்தான் போராடுகிறோம்.

போராட்டம்
போராட்டம்

அந்தந்த மாநிலங்களில் வேலை இல்லாமல் இங்கு வரும் கூலித் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது சரியா?

அவர்கள் அகதிகள் இல்லை. எந்த வழியும் இல்லாமல் போக. அவர்களுக்கென்று மாநிலம் இருக்கிறது, முதலமைச்சர் இருக்கிறார். நாட்டின் பிரதமர் இருக்கிறார் அவர்களிடம் கேட்கட்டும். இங்கு ஏன் வர வேண்டும்... தமிழர்களின் வேலைகளை ஏன் பறிக்க வேண்டும்?

இங்கிருக்கும் முதலாளிகள்தான் குறைந்த சம்பளத்துக்காக அவர்களை அழைத்து வருகிறார்கள். அவர்களை எதிர்த்துதானே போராட வேண்டும்?

அவர்களுக்கும் அறிவுரைகளை சொல்லிக்கொண்டுதான் வருகிறோம். ஆரம்பத்தில் கூலி வேலைக்கு வந்து பின்னர் தொழில்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செய்வார்கள், அதனால் வெளி மாநிலங்களில் இருந்து யாரையும் அழைத்து வராதீர்கள் என அவர்களிடமும் கோரிக்கைகளை முன்வைத்துதான் வருகிறோம்.

போராட்டம்
போராட்டம்

இந்தியா என்பது ஒரே நாடுதானே, இதுபோன்ற கோரிக்கைகள் தேசிய ஒருமைப்பாட்டை குலைக்காதா?

அப்படியெல்லாம் இல்லை. நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில், வெளி மாநிலத்தவர் ஒருவர் தங்க வேண்டும் என்றால் `இன்னர் லைன் பெர்மிட்' வாங்க வேண்டும். அந்த மாநில அரசு அனுமதித்தால் மட்டுமே அங்கு தங்கமுடியும். இப்போது மணிப்பூரும், மேகாலயாவும் கூட அப்படியொரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. மகர சங்கராந்தி முடிந்ததும், அதை நிறைவேற்றித் தருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருக்கிறார். நாங்கள் தமிழகத்துக்கும் அப்படியொரு சட்டத்தைக் கேட்கிறோம் அவ்வளவுதான்.