Published:Updated:

`திட்டமிட்டே அடித்தார்கள்; இந்தியில் திட்டினார்கள்!’ -ஜே.என்.யூ வன்முறையால் கலங்கிய மாணவர்கள்

ஜேஎன்யூ வளாகத்தில் மோதல்
ஜேஎன்யூ வளாகத்தில் மோதல்

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் கடந்த சில மாதங்களாகவே மாணவிகளிடம் மோசமாக நடந்துகொள்வதாகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவதாகவும் கூறுகின்றனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் நேற்று இரவு போர்க்களம்போல் காட்சியளித்தது. ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சமூகவலைதளத்தில் வெளியான வீடியோக்களும் புகைப்படங்களும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.

வீடியோ ஒன்றில் `முகத்தில் முகமூடி அணிந்தபடி சிலர் கைகளில் இரும்புக் கம்பிகள், குச்சிகளுடன் சுற்றி வந்தது’ அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. நள்ளிரவில் ரத்தக்காயங்களுடன் மாணவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஜே.என்.யூ வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல்
தாக்குதல்

நூற்றுக்கும் அதிகமான நபர்கள் முகமூடி அணிந்தபடி பல்கலைக்கழக வளாகத்துக்குள் வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறது ஜே.என்.யூ மாணவ அமைப்பு. பா.ஜ.க மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் மேலும் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறுகிறது இடதுசாரிகள் மாணவர்கள் அமைப்பு.

பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவத்தில் 28 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்த மாணவர்கள் சிலர் வெளியேறியுள்ளனர். `பல்கலைக்கழகத்தில் நிலைமை மோசமாக இருக்கிறது. அதனால் நாங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்து வெளியேறுகிறோம்’ என்றனர் மாணவர்கள்.

ஜே.என்.யூ-வில் இந்த மோதல் சம்பவம் சனிக்கிழமை காலையே அரங்கேறியுள்ளது. விடுதிக் கட்டண உயர்வு, செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் இருந்து ஜே.என்.யூ நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.என்.யூ அமைப்புத் தலைவர் ஆய்ஷி கோஷ் தலைமையில் பல்கலைக்கழக தகவல்தொடர்பு அறைக்கு அருகே போராட்டம் நடந்துவந்தது. மாணவ, மாணவிகள் அந்த அறைக்கு அருகில்தான் இருந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி

இந்த நிலையில்தான், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன. 40-க்கும் மேற்பட்ட நபர்கள் முகமூடி அணிந்தபடியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கச் சென்ற ஆய்ஷி கோஷின் கன்னத்தில் அறைந்துள்ளனர். அந்தக் கும்பல் இடதுசாரி மாணவர்களைக் குறிவைத்து விடுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்கின்றனர் ஜே.என்.யூ மாணவர் அமைப்பினர். தகுதியில்லாத நபர்களை துணைவேந்தர் பணிக்கு எடுத்தார். துணைவேந்தருக்கு ஆதரவாக அவர்கள் சிறப்பாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் மாணவர்கள்.

`மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல்; விடுதி சூறையாடல்!' -கலவர பூமியான டெல்லி ஜே.என்.யூ

சனிக்கிழமை நடத்திய தாக்குதலின்போது எஸ்.ஃப்.ஐ-யைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் ப்ரீத்தி, ஆனந்த், சுரேஷ், தேவ் வாசு, கிருஷ்ண பிரியா ஆகியோர் காயமடைந்தனர். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் பல்கலைக்கழக செக்யூரிட்டிகள் திட்டமிட்டே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் கடந்த சில மாதங்களாகவே மாணவிகளிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும் மோசமான மற்றும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவதாகவும் மாணவிகள் தரப்பில் கூறுகின்றனர்.

தாக்குதலில் காயம்
தாக்குதலில் காயம்

ஞாயிற்றுகிழமை நடந்தது என்ன?

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஜே.என்.யூ ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அமைதிப் பேரணிக்கு (Peace March) மாலை அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், மாலை 4.30 மணிக்கு ஒரு கும்பல் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீது கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஜே.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷின் தலையில் காயம் ஏற்பட்டது. பேராசிரியர்கள் சிலரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

`முகமூடி, ஹாக்கி மட்டைகள்; நொறுக்கப்பட்ட கதவுகள்!'- கண்ணீருடன் விவரித்த ஜே.என்.யூ மாணவர்கள்

இதையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 7.30 மணியளவில் பல்கலைக்கழகத்துக்குள் காவல்துறையினர் வந்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் ஒருவர் பேசுகையில், ``பெரியார் விடுதிக்குள்தான் அந்தக் கும்பல் முதலில் நுழைந்தது. எஸ்.ஃப்.ஐ செயற்பாட்டாளரான சூரி கிருஷ்ணன் முதலில் தாக்கப்பட்டார். ஒரு பெரிய கும்பல் முகத்தை மறைத்துக்கொண்டு இந்தியில் அசிங்கமாகத் திட்டினர். நான் அவர்களிடம் பேச முற்படும்போது இரும்புக் கம்பியைக்கொண்டு என் தலையில் தாக்கினர். எனக்கு தலையில் இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீசிய கற்கள் தலையில் தாக்கியிருந்தால் தலையே இரண்டாக பிளந்திருக்கும்” என்றார்.

மதியத்தில் இருந்தே காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில்தான் இருந்தனர். ஆனால், தாக்குதல் சம்பவத்தின்போது எந்த நடவடிகையும் எடுக்கவில்லை என்கின்றனர் மாணவர்கள் சிலர்.

தாக்குதலுக்குள்ளா மாணவர்
தாக்குதலுக்குள்ளா மாணவர்

பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தையடுத்து இரவில் அங்கு மருத்துவக்குழு விரைந்துள்ளது. முகமூடி அணிந்திருந்த நபர்கள் மருத்துவக்குழுவின் வாகனத்தைத் தாக்கியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் 9 பேர் வந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து வாகனத்தைச் சேதப்படுத்தியுள்ளனர். மருத்துவர்களையும் அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர். சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ பதிவுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு