Published:Updated:

`சாதியைக் காரணம் காட்டி என் காதலியைக் கடத்திவிட்டார்கள்!'- காவல் நிலையம் முன்பு கரூர் இளைஞர் தர்ணா

உறவினர்களுடன் ரகுபதி தர்ணா
உறவினர்களுடன் ரகுபதி தர்ணா ( நா.ராஜமுருகன் )

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சாதியைக் காரணம் காட்டி தங்களது மனைவிகளை அவரது பெற்றோர்கள் பிரித்துவிட்டதாக ஏற்கனவே, இரண்டு இளைஞர்கள் புகார் கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கரூர் மாவட்டத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாதியைக் காரணம் காட்டி தனது காதலியைத் தன்னிடமிருந்து அவரது உறவினர்கள் பிரித்துவிட்டதாகவும், காதலியைத் தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று பரமத்தி காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

க.பரமத்தி காவல் நிலையம்
க.பரமத்தி காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 28). இவர் அந்தப்பகுதி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றின் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். அதேபோல், கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர், முசிறியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலை பார்ப்பதற்கு வசதியாக, அந்தப் பெண் முசிறியில் வீடு எடுத்து தங்கி, பணிக்குச் சென்று வந்தார்.

இந்த நிலையில், அந்தப் பேருந்தில் சென்று வந்தபோது, ரகுபதிக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்கள் கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்தக் காதல் விவகாரம் அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவந்தது. ஆனால், ரகுபதியும் அந்தப் பெண்ணும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் இவர்களது காதலுக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர்.

ரகுபதி
ரகுபதி
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி முசிறிக்கு வந்த அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர், 'உனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை' எனக்கூறி, அந்தப் பெண்ணைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விட்டாராம். பின்னர், `அது பொய்' என்று தெரிந்ததும் அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து வந்து, ரகுபதியுடன் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புன்னம் சத்திரத்திற்குச் சென்றார். இந்தக் தகவலை அறிந்ததும், அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புன்னம்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்த காதல் ஜோடியை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

`பேச விருப்பமில்லை... பெற்றோரோடு போகிறேன்?!' -சேலம் பெண் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

அப்போது அவர்கள் ரகுபதியை விரட்டி விட்டு, அந்தப் பெண்ணைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் மனமுடைந்த ரகுபதி, தனது காதலியை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, தனது உறவினர்களான கணபதி (27), திவாகர் (24) ஆகியோருடன் க.பரமத்தி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார். அவரின் புகாரின் பேரில் க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் அந்தப் பெண்ணின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளனர். ஆனால் ரகுபதி, 'உடனடியாக காதலியை மீட்டுத் தரவேண்டும்' எனக்கூறி, உறவினர்களுடன் க.பரமத்தி காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 உறவினர்களுடன் ரகுபதி தர்ணா
உறவினர்களுடன் ரகுபதி தர்ணா
நா.ராஜமுருகன்

இதையடுத்து, காவல் ஆய்வாளர் ரமாதேவி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தர்மலிங்கம், சதீஸ்குமார் உட்பட போலீஸார் ரகுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ரகுபதி தனது போராட்டத்தைக் கைவிடவில்லை. அதோடு, தொடர்ந்து ரகுபதி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், க.பரமத்தி காவல் நிலைய போலீஸார், ரகுபதி உட்பட தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட மூன்று பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சாதியைக் காரணம் காட்டி தங்களது மனைவிகளை அவரது பெற்றோர்கள் பிரித்துவிட்டதாக இரண்டு இளைஞர்கள் புகார் கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு