Published:Updated:

`அத்துமீறி நடக்கும் எரிவாயு குழாய்ப் பணிகள்!' -அறுவடை நெருங்குவதால் கலங்கும் தூத்துக்குடி விவசாயிகள்

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்

`நெல் அறுவடைக்கு 20 நாள்களே உள்ள நிலையில் விளைநிலத்துக்குள் அத்துமீறி எரிவாயுக் குழாய்களை அடுக்கி பணிகளைச் செய்து வருகிறார்கள்'.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வடகால், தென்கால், மேலக்கால், கீழக்கால் ஆகிய பாசனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர் விவசாயிகள். இதில், வடகால் பாசனத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐ.ஓ.சி.எல்) நிறுவனம் சார்பில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

நெல் வயிலில் பதிக்கப்படவுள்ள குழாய்கள்
நெல் வயிலில் பதிக்கப்படவுள்ள குழாய்கள்

`எரிவாயுக் குழாய் அமைக்கப்படுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்' என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்துக்குப் பிறகு குழாய் அமைக்கும்பணி நிறுத்தப்படுவதும், பின்னர் ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தினர் பணிகளைத் தொடங்குவதும் தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், அறுவடை நெருங்கிய நிலையில் நெல் வயலில் கதிர்களுக்கு மத்தியில் குழாய்களைப் போட்டு நிலத்தில் குழி எடுக்கும் பணியை இந்தியன் ஆயில் நிர்வாகம் தொடங்கியிருக்கிறது. பணிகள் நடைபெற்று வந்த பகுதிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால், நிறுவனத்தினர் அங்கிருந்து கிளம்பினர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாழைத் தோட்டத்தின் நடுவில் குழாய் பதிக்கும் பணி
வாழைத் தோட்டத்தின் நடுவில் குழாய் பதிக்கும் பணி

இந்தநிலையில், திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத் திறப்பு விழாவிற்காக வரும் 22-ம் தேதி முதல்வர் வர இருக்கிறார். அந்த நாளில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருப்பதாகக் கூறியுள்ளனர் விவசாயிகள். இதுகுறித்து தாமிரபரணி பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஆஸ்கரிடம் பேசினோம், ``ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை எரிவாயுக் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Vikatan

இதில், குலையன்கரிசல் சுற்றுவட்டாரத்தில் 108 சர்வே எண்களில் 125 ஏக்கர் விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 125 ஏக்கரில் 75 ஏக்கரில் நெல்லும் 50 ஏக்கரில் வாழையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், நெல் அறுவடைக்கு 20 நாள்களே உள்ளன. இந்த நிலையில் விளைநிலத்துக்குள் அத்துமீறி எரிவாயுக் குழாய்களை அடுக்கி பணிகளைச் செய்து வருகிறார்கள்.

விளைநிலத்தில் எரிவாயுக் குழாய்கள்
விளைநிலத்தில் எரிவாயுக் குழாய்கள்

125 ஏக்கரில் 42 விவசாயிகள், 40 முதல் 50 ஏக்கர் நிலத்தை அந்நிறுவனத்திடம் விற்பனை செய்துவிட்டனர். அந்த நிலத்தில் இதுவரை நடந்த பணிகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது மற்ற விவசாயிகளின் விளைநிலங்களிலும் அனுமதியில்லாமல் பணியைத் தொடங்கியுள்ளார்கள்.

விளைநிலங்களில் செல்லும் இந்தப் பாதையை, அரசுக்குச் சொந்தமான பிற இடங்களின் வழியே அமைக்கலாம். இதுகுறித்து 5 முறை ஆட்சியரிடம் மனு அளித்தும் பலனில்லை. முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முத்தையாபுரம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். தஞ்சாவூர் மட்டும்தான் பாதுகாக்கப்பட்ட பகுதியா?

குழாய்ப் பதிப்பிற்காக அழிக்கப்பட்ட நெல் வயல்
குழாய்ப் பதிப்பிற்காக அழிக்கப்பட்ட நெல் வயல்

பிற மாவட்டங்களில் விவசாயத்துக்கு உலை வைக்கும் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை என்னவென்று சொல்வது. நாங்களும் விவசாயிகள்தான். எங்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.

``விவசாயிகளின் இக்கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்கின்றனர் அதிகாரிகள்.

அடுத்த கட்டுரைக்கு