Published:Updated:

``10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்திவைத்து ஆதரவு தாருங்கள்!'' - தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடக்கவுள்ளது. அப்போது, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 10 நிமிடங்களுக்கு நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

போக்குவரத்து
போக்குவரத்து

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உட்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜனவரி 8) அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருக்கின்றன. அரசுப் போக்குவரத்து, ஆட்டோ, கால்டாக்ஸி, லாரி, சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை இயக்கும் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 20 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள்

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு) பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் கூறுகையில், "போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருக்கிறார்கள். கார், இருசக்கர வாகனம் போன்ற சொந்த வாகனம் வைத்திருப்பவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று அழைக்கிறோம். நாளை நண்பகல் 12.00 மணி முதல் 12.10 வரை 10 நிமிடங்களுக்கு வாகனத்தை நிறுத்திவைத்து, இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

பொது வேலைநிறுத்தத்துக்கான காரணம் குறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், "மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் என்பது கார் மற்றும் பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் வைத்துள்ளவர்களையும் பாதிக்கக்கூடியதாக உள்ளது. அனைத்து வாகனங்களும் மோட்டார் வாகனச் சட்டவிதிகளின்படியே இயக்கப்படுகின்றன. மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம், ஒட்டுமொத்த மோட்டார் தொழிலையும் பாதிக்கும். எனவேதான், இப்படியொரு திருத்தத்தைக் கொண்டுவரக் கூடாது என்று கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள்

தற்போது மத்திய பா.ஜ.க அரசு தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்தியுள்ளது. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சீர்குலைக்கப்படும் ஆபத்து உள்ளது. தனியார் நிறுவனங்களால் பஸ், லாரி போன்ற வாகனங்களை இயக்க முடியாது. ஆட்டோ, கால்டாக்ஸி, லாரி, சரக்கு வாகனம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, சொந்தமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவேதான் அவர்களையும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

மேலும், "ஓட்டுநர் உரிமம் பெறுவது, வாகனங்களைப் பதிவுசெய்வது உட்பட அனைத்துப் பணிகளும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இனி, இந்தப் பணிகள் அனைத்தும் தனியார் ஏஜென்சிகள் வசம் ஒப்படைக்கப்படும். இனிமேல், வாகனங்களை சாலையோர ஒர்க் ஷாப்புகளில் பழுதுபார்க்க முடியாது. வாகனத் தயாரிப்பாளர்களின் சர்வீஸ் சென்டர்களில்தான் வாகனங்களைப் பழுதுபார்க்க வேண்டும். தற்போது உள்ள உதிரிபாகங்கள் கடைகளில் உதிரிபாகங்களை வாங்கி வாகனங்களில் பொருத்தக் கூடாது. வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடம்தான் உதிரிபாகங்களை வாங்க வேண்டும்.

போக்குவரத்து
போக்குவரத்து
தே. அசோக் குமார்
`கஞ்சா விக்கிற இடத்துல நீ  யாருடா?' -கடலூர் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு ரௌடியால் நேர்ந்த விபரீதம்

மேலும், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தகுதிச்சான்றிதழ் (எஃப்.சி) பெற வேண்டும். இனிமேல், தனியார் நிறுவனங்கள்தான் தகுதிச்சான்றிதழ் அளிப்பார்கள். சொந்த வாகனமாக கார், இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த உற்பத்தியாளர்களிடம் பணத்தைக் கொட்டிக்கொடுக்க வேண்டும். இவை தவிர, வாகன ஓட்டிகள் அத்தனை பேரையும் அவதிக்குள்ளாக்கும் அடிப்படையில் தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சாலைகளை முறைப்படுத்தாமல் தண்டனை அறிவிப்பதால் மட்டும் விபத்தைக் குறைக்க முடியாது. முதல்முறை ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம். மறுமுறை லைசென்ஸ் ரத்துசெய்யப்படும். சீட் பெல்ட்டுக்கும் இதே தண்டனை வழங்கப்படும்.

வாகனம் விபத்துக்குள்ளானால் மூன்றாம் நபர் நஷ்டஈட்டுக்கான தொகையை தற்போது இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் வழங்கி வருகின்றன. இனிமேல், விபத்தில் மரணம் அடைந்தால் ரூ. 5 லட்சம், காயமடைந்தால் ரூ. 2 லட்சம் மட்டும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொடுத்தால்போதும். மீதித் தொகையை உரிமையாளர்தான் கொடுக்க வேண்டும். இப்படியாக, பல மோசமான திருத்தங்கள் இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

`அட இப்படியெல்லாமா போராட்டம் பண்ணுவாங்க?' - உலகத்தின் கவனத்தை ஈர்த்த சில விநோதப் போராட்டங்கள்!

எனவேதான், சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவர்களும் வாகனங்களைப் பயன்படுத்தும் அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டுமென்று கேட்கிறோம்” என்று தொழிற்சங்கத்தினர் கூறுகிறார்கள்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆதரவு அளித்துள்ளார்.

"ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உட்பட 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து நாடு தழுவிய அளவில் நடத்தும் போராட்டத்துக்கு தி.மு.க சார்பில் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, உரிமைகளைப் பறிப்பதிலேயே மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டிவருவதால், தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முழுக்க முழுக்க தொழிலாளர் விரோதக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் மத்திய பா.ஜ.க. அரசு முனைப்புக் காட்டிவருவது மிகக் கொடுமையானது. பலமுறை தொழிலாளர்கள் தரப்பில் முறையிட்டும், பல கட்டங்களில் முன்னறிவிப்பு போராட்டங்களை நடத்தியும், கடந்த 6 வருடங்களாக அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வழங்க மறுத்து- தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருவது கண்டனத்துக்குரியது” என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.