Published:Updated:

`கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்!'- லாரி சம்மேளனம் எச்சரிக்கை

ர.ரகுபதி

தமிழகத்தில் 21 டோல்கேட்களில் சுங்கக் கட்டணம் திடீரென 10 முதல் 15 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

lorry strike
lorry strike

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தச் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை, 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி 22 சுங்கச்சாவடிகளுக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜயமங்கலம் (குமாரபாளையம்), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஓமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுப்பட்டி (சேலம்), வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பாராய்த்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை) உட்பட 21 சுங்கசாவடிகளுக்குக் கட்டணம் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

toll gate
toll gate

கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும் என்பதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் சுங்கக் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பஸ்களின் கட்டணமும் உயர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அளவில், 5.5 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. அதில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவை லாரிகள். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 55 ஆயிரம் லாரிகள் உள்ளன. டீசல், பெட்ரோல், டயர் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வால், இத்தொழில் நசிந்து வருகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளுக்குத் தனித்தனியாக சாலை வரி செலுத்துவதுடன், சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக, சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு, ஆண்டுக்கு ஆண்டு அக்கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, `` 'மத்திய அரசு, ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. கடந்தாண்டு, கனரக வாகனங்களுக்கு, 525 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

நடப்பு ஆண்டு 545 ரூபாய் வசூல் செய்வதாக, சுங்கச்சாவடி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. காலாவதியான சுங்கச் சாவடிகளை நீக்கம் செய்யாதது, டீசல் விலை உயர்வு, காப்பீடு ஆகியவற்றால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு, லாரி உரிமையாளர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றை கருத்தில் கொண்டு, இக்கட்டண உயர்வை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

lorry strike
lorry strike

இதுகுறித்து சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறுகையில், 'தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 10 முதல் 15 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக அகில இந்திய சம்மேளனத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது பற்றி முடிவெடுத்து அறிவிக்கப்படும்,'' என்றார்.