Published:Updated:

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திடீர் வாபஸ் - என்ன காரணம்?

திட்டமிட்டப்படி எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது. `தென் மாநிலங்களில் 15 நாள்களுக்கு எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை' என தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டேங்கர் லாரி
டேங்கர் லாரி ( ரமேஷ் கந்தசாமி )

நாமக்கல்லில், அச்சங்கத்தின் தலைவர் எம்.பொன்னம்பலம், செயலாளர் என்.ஆர்.கார்த்திக் ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், `தென் மாநிலங்களில் 53 எரிவாயு நிரப்பும் பாட்டிலிங் பிளான்ட்டுகளுக்கு டேங்கர் லாரிகளைப் பயன்படுத்திவருகிறோம். 2018 - 2023-ம் ஆண்டுகளுக்கான டெண்டர் ஒப்பந்தத்தின்போது, கடந்த 30 ஆண்டுகளாக இருந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்தன. 2017 மார்ச் மாதம் புதிய விதிமுறைகளுடன் எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலர் புதிய டேங்கர் லாரிகளை வாங்கினர். ஆனால், ஒன்பது மாதங்கள் கழித்து 2018 ஜனவரியில்தான் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.கால தாமதம் ஏற்பட்டதால் 2,000 வாகனங்கள் காத்திருப்பில் இருந்தன.

சமையல் சிலிண்டர்
சமையல் சிலிண்டர்

தொடர்ந்து 2018 செப்டம்பரில் இறுதி டெண்டர் நிறைவேற்றப்பட்டு, மொத்தமாக 4,800 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மீதமுள்ள 700 வாகனங்கள் காத்திருப்பில் இருந்தன. வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்த நிலையில், 8 மாதங்களாக அது தொடர்பான அறிவிப்பில்லை. தற்போது, எண்ணெய் நிறுவனங்களையோ பொதுமக்களையோ பாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடவில்லை. புதிய விதிமுறைகள் என்னவென்று தெரியாததாலேயே பல உறுப்பினர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்களுடன் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களது கோரிக்கைகளை அந்நிறுவனங்கள் ஏற்காததால், இக்கட்டான சூழ்நிலையில் இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம். தென் மாநிலங்களில் எரிவாயுத் தட்டுப்பாடு என்பது இன்னும் 15 நாள்களுக்கு இருக்காது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மொத்தமுள்ள 53 பாட்டிலிங் பிளான்ட்டுகளிலும் எரிவாயுவை இறக்குவதற்கு டேங்கர் லாரிகள் தயாராக உள்ளன. எங்களது வேலைநிறுத்தத்தைப் பொறுத்தவரை, எரிவாயுவை லாரிகளில் நிரப்பும் இடத்தில்தானே தவிர, அவற்றை பாட்டிலிங் பிளான்ட்டுகளில் இறக்கும் இடத்தில் இல்லை.

டேங்கர் லாரி
டேங்கர் லாரி
ரகுபதி

இந்தப் பிரச்னையை எண்ணெய் நிறுவனங்கள் சுமுகமாகத் தீர்த்துவைக்கும் என்ற நம்பிக்கையில், வேலைநிறுத்தத்தை திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்குகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. எங்களது வழக்கறிஞர்கள் மூலமாகவும் நாங்கள் கோரிக்கையை எடுத்துரைப்போம். இருப்பினும், நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். தென் மண்டலத்துக்குட்பட்ட தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில், 500 லாரிகள் எரிவாயு நிரப்பும் பணியை திங்கள்கிழமை முதல் புறக்கணிக்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு, டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்' என்றனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்கள், டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக விசாரிக்க மத்தியஸ்தரை நியமித்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக நீதிமன்றதில் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்தது. இது தொடர்பான வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.