Published:Updated:

விடுமுறை அறிவித்த நிர்வாகம்; 2 மாணவர்கள் கைது?- தொடரும் சென்னைப் பல்கலைக்கழக போராட்டம்! #CAAProtests

குடியுரிமைச் சட்டத்திருத்தம், ஜாமியா மிலியா மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

குடியுரிமைச் சட்டத்திருத்ததைத் திரும்பப் பெறக் கோரியும் ஜாமியா மிலியா, அலிகார் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளதாகவும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டால் இருவரையும் விடுதலை செய்வதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டங்கள் தொடங்கின. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவதற்காக முயற்சி செய்தனர். இது வன்முறையாக மாறியதால், டெல்லி காவல்துறை ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களைக் கடுமையாகத் தாக்கியது. மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகம், நூலகம், மசூதி, பெண்கள் விடுதி முதலான பகுதிகளில் காவல்துறையினர் நுழைந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஏறத்தாழ 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து டெல்லி ஜெ.என்.யு மாணவர்கள், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் முதலானோர் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாணவர்களும் மாணவ அமைப்புகளும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெறக் கோரியும், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 17 அன்று பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் மாணவ அமைப்புகளும் கலந்துகொண்டனர். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராகவும் பிரதமர் மோடி மற்றும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர்.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இதில் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களுள் கார்த்திகேயன், சுப்பையா ஆகிய இரண்டு மாணவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவி வளர்மதியிடம் பேசினோம். "கோவளம் டாடா சமூக அறிவியல் நிறுவன மாணவர்கள் 80 பேர் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக வந்திருந்தனர். மெரினா வளாகதுக்கு வந்திருந்த அவர்களை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த கார்த்திகேயன், சுப்பையா ஆகியோரைக் காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, சட்ட விரோத காவலில் வைத்துள்ளது. மாணவர்களை விடுதலை செய்யக் கோரினால், நாங்கள் போராட்டத்தைக் கைவிட்டால்தான் மாணவர்களை அனுப்புவோம் என்று எங்களிடம் காவல்துறை பேரம் பேசுகிறது" என்றார்.

இதுதொடர்பாகத் திருவல்லிக்கேணி, அண்ணா சதுக்கம் காவல் நிலையங்களைத் தொடர்புகொண்டோம். இரண்டு காவல் நிலையங்களிலும் மாணவர்கள் யாரையும் கைதுசெய்யவில்லை எனக் கூறுகின்றனர். திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸை தொடர்புகொண்டோம்; அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதுகுறித்து அவரிடம் விவரம் கேட்டு, குறுஞ்செய்தி அனுப்பியுள்ளோம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறை
சென்னைப் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் வரும் டிசம்பர் 23 வரை விடுமுறை அறிவித்துள்ளது; தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விடுமுறை அறிவிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மேலும், காவல்துறையினர் பலரும் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.