Published:Updated:

`நோ டு சி.ஏ.ஏ, நோ டு என்.ஆர்.சி!’ - சேலத்தில்`மெகந்திப் போராட்டம்’

மெகந்திப் போராட்டம்
மெகந்திப் போராட்டம் ( எம்.விஜயகுமார் )

எதிர்ப்பவர்கள் சட்டத்திற்கு எதிராகக் கைது செய்யப்படுகிறார்கள். இது ஜனநாயக நாட்டிற்கு ஆரோக்கியமானது அல்ல.

சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் 250 -க்கும் மேற்பட்ட வீட்டின் வாசல்களில் கோலங்கள் போட்டும், ஆண்கள், பெண்கள் கைகளில் மெகந்தியிட்டும் நூதன முறையில் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள்.

மெகந்தி
மெகந்தி
எம். விஜயகுமார்

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பிரவின், ``மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து நாட்டு மக்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது நாடு பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவித்து வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவும், தேசிய குடியுரிமைப் பதிவேடும் கொண்டு இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகத்தைச் செய்திருக்கிறது. அதைக் கண்டித்து இந்தியா முழுவதும் இச்சட்டத்தை எதிர்க்கிறார்கள். பா.ஜ.க இச்சட்டத்தை ஆதரிக்கிறது. இது ஒவ்வொருவருக்கும் நம் அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் ஜனநாயக உரிமை. ஆனால், இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் சட்டத்திற்கு எதிராகக் கைது செய்யப்படுகிறார்கள். இது ஜனநாயக நாட்டிற்கு ஆரோக்கியமானது அல்ல.

கோலம்
கோலம்
எம். விஜயகுமார்

கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகளில் உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் துணிவில்லை. ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களைக் கைது செய்கிறது. இதைக் கண்டித்து சேலத்தில் பல வீடுகளில் கோலங்கள் போட்டிருக்கிறார்கள். இளம் பெண்களும், இளைஞர்களும் கைகளில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சியைக் கண்டித்து கைகளில் மெகந்தியிட்டார்கள்'' என்றார்.

இதுபற்றி மைதிலி என்பவர், ``குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து எங்கள் வீடுகளில் கோலம் போட்டோம். உடனே சேலம் காவல் துறையினர் வந்திருந்தார்கள். `எதற்காக இப்படி கோலம் போடுகிறீர்கள்? உங்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைப்போம்' என்று மிரட்டினார்கள். நாங்கள் ஜனநாயக முறைப்படி குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து கோலம் போடுகிறோம். முடிந்தால் வழக்கு போட்டு கைது செய்யுங்கள் என்றோம். சமூக விரோதிகளைக் கைது செய்யக் காவல்துறைக்குத் துணிவு இல்லை. எங்களைக் கைது செய்ய வருகிறார்கள்'' என்றார்.

பிரவின்
பிரவின்
எம். விஜயகுமார்

இதுபற்றி சேலம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ``தேர்தல் பணியில் இருப்பதால் இதுபற்றி முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், கோலம் போட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு