நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமானதால், கடந்த புதனன்று எர்ணாகுளம், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், இடுக்கி, பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்த 15 கிளைகளை மூடுவதாக முத்தூட் நிர்வாகம் அறிவித்தது.
குறைந்த சம்பளம், குறைக்கப்படும் ஊக்கத்தொகை, சம்பளப்பிடித்தம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் யூனியன், கடந்த ஆகஸ்ட் 20 முதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளது.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களில் ஒரு பிரிவினர், வங்கி சாரா மற்றும் தனியார் நிதி ஊழியர் சங்கம் (NBPFEA) என்ற பெயரிலான யூனியனில் இணைந்து செயல்பட்டார்கள். ஆனால், இந்த அமைப்பை முத்தூட் நிர்வாகம் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு மிகக்குறைந்த சம்பளம், ஊக்கத்தொகை குறைக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து அந்த அமைப்பினர் போராட்டத்தைத் தொடங்கியபோது அதில் பங்கெடுத்த பணியாளர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு அமைப்பினர் போராட்டத்தில் இறங்கியதையடுத்து அவர்கள் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமானதால், கடந்த புதனன்று எர்ணாகுளம், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், இடுக்கி, பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்த 15 கிளைகளை மூடுவதாக முத்தூட் நிர்வாகம் அறிவித்தது. இந்தக் கிளைகளில் இனி நகைக்கடன் வழங்கப்படாது என்றும், ஏற்கெனவே கடன் பெற்றவர்கள், மூன்று மாத காலத்துக்குள் கடன் தொகையைச் செலுத்தி நகையை மீட்டுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலையால் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வருமான இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், கொச்சியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் முத்தூட் நிறுவனம் அதன் தாக்கம் படாமல் இயங்கி வந்தது. இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்களில் சுமார் 4480+ கிளைகளுடன் இயங்கிவரும் இந்த நிறுவனத்தில் 24,000+ பணியாளர்கள் வேலைபார்க்கிறார்கள். 2019-20 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,067.67 கோடியாக உள்ளது. ஒருங்கிணைந்த நிகர லாபம் 9% அதிகரித்து ரூ.563 கோடியாக உள்ளது.
நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கியபோதும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கவில்லையென்றும், குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுபவர்களுக்கும் சொற்ப சம்பளமே வழங்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், முத்தூட் நிறுவனத்தின் தரப்போ, "எங்களுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருக்கின்றன. கேரளாவைத் தவிர, வேறெங்கும் இதுபோன்ற பிரச்னைகள் எழுப்பப்படவில்லை. இவர்கள் நடத்தும் தேவையற்ற போராட்டங்களால் கடந்த மூன்றாண்டுகளில் கேரளாவில் எங்கள் வணிகம் 10 சதவிகிதத்திலிருந்து நான்கு சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. போராட்டம் மேலும் தொடர்ந்தால் கேரளாவிலுள்ள 600 கிளைகளில் 300 கிளைகளை மூடுவோம் என்று எச்சரித்துள்ளது.
ஒருபுறம் நிர்வாகத்துக்கு எதிராகப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, இன்னொரு தரப்புப் பணியாளர்களோ, தங்களைப் பணிக்குச் செல்லவிடாமல் போராட்டக்காரர்கள் தடுப்பதாக நிர்வாகத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கிறார்கள். இந்த நிலையில் வரும் திங்களன்று நிர்வாகத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அதில் எட்டப்படும் முடிவைப் பொறுத்துதான் மேலும் கிளைகள் மூடப்படுமா, இல்லையா என்பது தெரியவரும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும்பதற்றம் உள்ளாகியுள்ளது.