Published:Updated:

`அதிமுக போராடிப் பெற்றுத் தந்த உரிமை; திமுக கேரளாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது!' - ஓ.பன்னீர்செல்வம்

``முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்தது குறித்து உரிய விளக்கம் அளிக்காமல் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சப்பைக்கட்டு கட்டிப் பேசிவருகிறார்” - ஓ.பன்னீர்செல்வம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்கும் திமுக அரசைக் கண்டித்து தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ``முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகம் தண்ணீர் பெறும் உரிமை 999 வருடங்களுக்கு பெறப்பட்டது. 2000 -ம் ஆண்டிலிருந்து அணை குறித்துத் தவறான தகவல்களை கேரள அரசு பரப்பிவருகிறது. கேரள அரசு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஜெயலலிதா பல கோடி செலவு செய்து அணையைப் புதுப்பொலிவுடன் பராமரிப்பு செய்தார். அணையில் 152 அடி வரை நீரைத் தேக்க ஜெயலலிதா கேரள அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டம்

கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காததால், உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார், நீதிமன்றத்தில் உத்தரவை அடுத்து வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என ஒப்புதல் அளித்தார்கள். 2006-ல் ஆட்சிக்குவந்த திமுக உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கைத் துரிதப்படுத்தவில்லை, 2006-ல் கேரளாவில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சிக்கு திமுக துணை போனது.

2011-ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றத்தால் ஆய்வு செய்த வல்லுநர் குழு பூகம்பம் வந்தால்கூட அணைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது எனக் கூறியது. இதையடுத்து அணையில் 142 அடி நீரை தேக்கிக்கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஜெயலலிதா பெற்றுத் தந்தார். பேபி அணையை பழுதுபார்க்க ஜெயலலிதா ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

ஆனால் பேபி அணை பலப்படுத்துவதற்குத் தடையாக இருக்கும் அணைக்கு கீழே உள்ள மரங்களை வெட்டவிடாமல் கேரள அரசு தடுத்தது. இருப்பினும் தீர்ப்பு பெறப்பட்ட ஆண்டே அணையில் 142 அடி நீர்நிலை நிறுத்தப்பட்டது. அணையின் முழு அதிகாரமும் தமிழ்நாட்டுக்கே இருக்கிறது. ஆனால் 15 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி, ஜெயலலிதா பெற்றுத் தந்த தீர்ப்புக்கு திமுக இப்போது குந்தகம் செய்துள்ளது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்குத் தண்ணீர் திறந்தது குறித்து உரிய விளக்கமளிக்காமல் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சப்பைக்கட்டு கட்டி பேசிவருகிறார். அதிமுக ஆட்சியில் மட்டும் எப்படி 142 அடி நீர் தேக்க முடிந்தது? தமிழக மக்களுக்கு இரு மாநில அரசுகளும் குந்தகம் விளைவித்துள்ளன. படிப்படியாக தண்ணீரைக் குறைப்பதே இரு மாநில அரசுகளின் எண்ணம். இதனால் தென்மாவட்ட விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை நிலைநாட்டவில்லை. கேரளா அரசு பேபி அணையில் மரங்கள் வெட்ட அனுமதி கொடுத்ததாகச் செல்கிறார்கள், அது உண்மையா எனத் தெரியவில்லை. ஜெயலலிதா பெற்றுத் தந்த உரிமையை மீட்டெடுக்க அதிமுக என்றும் போராடும். தென்மாவட்ட மக்களின் ஜீவாரதார உரிமையைப் பெறும் வரை அதிமுக என்றும் ஒயாது" என்றார்.

முல்லை பெரியாறு விவகாரம்: நீதிகேட்டு நடைப்பயணம் செல்லவிருக்கும் 5 மாவட்ட விவசாயிகள்!

முன்னதாகப் பேசிய தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார், "கேரள மக்களிடம் முல்லைப்பெரியாறு அணை குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் செயலுக்கு திமுக கைகோத்துச் செல்கிறது. எனவே, மக்கள் திமுக-வுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு