Published:Updated:

பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த தனியார் நிறுவன ஊழியர்கள்... திருவள்ளூரை பதற்றமாக்கிய மறியல்!

சாலை மறியல்
சாலை மறியல் ( சே.பாலாஜி )

போராட்டம், காரணமாகத் திருவள்ளூர்-ஶ்ரீபெரும்புதூர் சாலையில் பயணிகள் பேருந்து, தனியார் தொழிற்சாலைப் பணியாளர் பேருந்து ஆகியவற்றின் போக்குவரத்து ஒன்றரை மணிநேரம் பாதிக்கப்பட்டதால் பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினர் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் திருவள்ளூர் - ஶ்ரீபெரும்புதூர் சாலையில் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த தனியார் நிறுவன ஊழியர்கள்... திருவள்ளூரை பதற்றமாக்கிய மறியல்!
சே.பாலாஜி

திருவள்ளூர் அருகே மணவாளநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்தச் சாலை மறியல் போராட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவி, மாநில துணைத் தலைவர் ஏ.எஸ்.கண்ணன், பி.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தனியார் வாகனத் தொழிற்சாலை, பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு கைமாறினாலும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும், நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

கேடிஎம் டியூக் 250-ஐ விட 20,576 ரூபாய் குறைவு... வெல்கம் ஹஸ்க்வர்னா 250சிசி பைக்ஸ்!

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மணவாளநகர் காவல் நிலைய காவல்துறையினர் துணைக்கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போராட்டம், காரணமாகத் திருவள்ளூர் - ஶ்ரீபெரும்புதூர் சாலையில் பயணிகள் பேருந்து, தனியார் தொழிற்சாலைப் பணியாளர் பேருந்து ஆகியவற்றின் போக்குவரத்து ஒன்றரை மணிநேரம் பாதிக்கப்பட்டதால் பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த தனியார் நிறுவன ஊழியர்கள்... திருவள்ளூரை பதற்றமாக்கிய மறியல்!
சே.பாலாஜி

இந்தச் சாலை மறியல் போராட்டம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், ''தனியார் வாகனத் தொழிற்சாலை அமைப்பதற்காக மேல்நல்லாத்தூர், அதிகத்தூர், பட்டரை, வெங்கத்தூர் கண்டிகை ஆகிய கிராமங்களில் 356 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் அரசால் கைப்பற்றப்பட்டன. அப்போது, ஒரு சென்ட் நிலத்துக்கு மிகக்குறைந்த அளவு மட்டுமே நஷ்டஈடு அரசு நிர்ணயம் செய்தது. அதைத் எதிர்த்து போராடியதைத் தொடர்ந்து விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்தநிலையில், தனியார் வாகனத் தொழிற்சாலை, தற்போது, பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்குக் கைமாறியுள்ளது. இதனால் அங்கு பணியாற்றி வந்த விவசாயிகளின் குடும்பத்தினர் 22 பேர் உட்பட தொழிலாளர்கள் 173 பேருக்கு அந்தநிறுவனம் வேலை தர மறுத்துவிட்டது. இதைக் கண்டித்து நாள்தோறும் அந்த வாகன தொழிற்சாலை முன்பு 30 நாள்கள் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வேலை இழந்த விவசாயிகள் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்குப் பணி வழங்ககோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் இதுகுறித்து தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காண உதவ வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு