Published:Updated:

இந்தித் திணிப்பு முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் வரை... 2019-ல் தமிழகம் எதற்கெல்லாம் போராடியது?

2019- ம் ஆண்டு, தமிழ்ச் சமூகம் மொழிக்காக, கலாசாரத்துக்காக, அடிப்படை வசதிகளுக்காக, ஊதிய உயர்வுக்காக, உரிமைகளுக்காக அதிகாரத்தை எதிர்த்து நின்றது. அப்படி, கடந்த ஆண்டு நடந்த முழுவதுமான போராட்டங்களில், சில முக்கியமான போராட்டங்களின் தொகுப்பு இது.

1
புதிய கல்விக்கொள்கை

இந்தித் திணிப்பு எதிர்ப்பு!

தமிழகத்தில், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நேற்றோ இன்றோ துவங்கியது இல்லை. 1937-ம் ஆண்டிலேயே அது தொடங்கிவிட்டது. ஆனால், கடந்த ஆண்டும் அதற்கான தேவையை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு உருவாக்கியது.

கடந்த ஜூன் மாதத்தில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைக் கட்டாய மொழிப் பாடமாகக் கொண்டுவர வேண்டுமென மத்திய அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர், அது கைவிடப்பட்டது. அதே ஆண்டில், இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தி மொழியைக் கட்டாமாக்க மத்திய அரசு முயற்சிசெய்ய, அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் அதை முறியடித்தன.

கடந்த ஜூன் மாதம், இந்தியில் உரையாடிய ரயில்வே ஊழியர் கூறிய தகவலைத் தமிழ் பேசும் ஊழியர் ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாக, இரு ரயில்கள் ஒரே வழித்தடத்தில் வந்தன. பெரிய விபத்து நிகழாமல் தடுக்கப்பட்ட போதும், அனைத்து ரயில்வே ஊழியர்களும், ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே பேச வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இதை நடைமுறைப்படுத்தவே மத்திய அரசு நடத்தும் ரயில்வே தேர்வுகளில் பிராந்திய மொழியான தமிழ் இடம்பெறாது என்றும் அறிவித்தது. அதற்கும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. இப்படி இந்தி கட்டாயம் ஆக்கப்படுவதும், தமிழகத்தின் எதிர்ப்பால் திரும்பப் பெறுவதும் மாறி மாறி நடந்துகொண்டே இருந்தது.

2
திருவள்ளுவர்

காவியுடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவர்!

கடந்த சில மாதங்களில், பல மேடைகளில் தமிழ் மொழியில் பேசியும், தமிழ் மொழியைப் புகழ்ந்தும், தமிழ் மீதான தன் பற்றை வெளிப்படுத்தினார், பிரதமர் மோடி. தாய்லாந்தில் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு வாழும் தமிழ் மக்களிடம் உரையாடினார். அப்போது, "தாளாற்றித் தந்தபொருளெல்லாம் தக்கார்க்கு" என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசி, திருவள்ளுவரைப் புனிதர் என்றும் கூறியிருந்தார். இதன் விளைவு, தமிழக பி.ஜே.பி-யினர் சமத்துவம் போதித்து வெள்ளை உடையணிந்திருந்த திருவள்ளுவருக்கு காவி உடையணிவித்து, இந்து அடையாளம் தந்து, தங்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

பி.ஜே.பி-யினரை மிஞ்சும் வகையில், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், தஞ்சையில் திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்து பூஜை செய்ய,அவரைத் தமிழக காவல் துறை கைதுசெய்தது. இந்தச் செயல்களைக் கண்டிக்கும் வகையில் தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.

“எந்த மொழிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட கருந்துகளை முன்வைப்பதால்தான், திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். ஆனால், முற்றிலும் சமத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் பி.ஜே.பி-யினரின் செயல்கள் இருக்கின்றன” என்று வாதிட்டன தமிழ் அமைப்புகள்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் கூறுகிறார்; இந்துத்துவமோ, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது’ என எதிர்ப்பை முன்வைத்தன திராவிட இயக்கங்கள்.

3
மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்களின் போராட்டம்!

2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய போராட்டங்களுள் ஒன்று, அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டம். மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வராததால் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஏழை எளிய மக்கள், உடல் நலம் சரியில்லாமல்போகும் போதெல்லாம், அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். போராட்டம் நடந்த இந்த 7 நாள்களில் நிச்சயம் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பர்.

போராடும் மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானதுதான் என்று கூறி, எதிர்க்கட்சி தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் தமிழக அரசோ, இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், அவர்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பணிக்குத் திரும்பாமல் இருக்கும் 60 ஊழியர்கள்மீது பணியிடை மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்தப் பணிமாற்ற நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதைக் காரணம் காட்டி, அனைவரையும் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், பணிக்கு வராமல் இருந்த இந்த ஏழு நாள் சம்பளத்தையும் ரத்துசெய்தது அரசு. மருத்துவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், மீண்டும் பணிக்குத் திரும்பினர் தமிழக அரசு மருத்துவர்கள்.

4
ஜாக்டோ ஜியோ போராட்டம்

அரசு ஊழியர்கள் போராட்டம்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோருதல்; 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, 2016-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் தரப்படாத 21 மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்குதல்; சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை வழங்குவதை நிறுத்திவிட்டு, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்; மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இணையான சம்பளத்தை மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கக் கோருதல்... உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி 2019-ம் ஆண்டு ஜனவரி 22 அன்று, தங்களின் போராட்டத்தைத் தொடங்கினர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய அரசு, அதிரடியாக அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, மக்களுக்கு அரசு ஊழியர்கள் மீது வெறுப்பு உண்டாக்கும் வகையில் பல வதந்திகளும் பரப்பப்பட்டன. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் இவ்வாறாகத் தோல்வியடைந்தது.

`சண்ட செய்வோம்...' சென்னை சேப்பாக்கத்தில் இசையோடு முழங்கிய கலைஞர்கள் போராட்டம்!
5
குடியுரிமை திருத்த எதிர்ப்பு ( கே.ஜெரோம் )

குடியுரிமை சட்டதிருத்த எதிர்ப்பு!

2019-ம் ஆண்டின் மற்றுமொரு முக்கியமான போராட்டம், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக இந்தியா முழுவதும் நிகழ்ந்த மாணவர் போராட்டம். இஸ்லாமிய மக்களும், இலங்கைத் தமிழர்களும் பாதிக்கப்படும் வகையில் இந்த மசோதா இயற்றப்பட்டதாகக் கூறி, தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. சென்னை, கோவை, தேனி போன்ற மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்றன. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி,பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் எனப் பலரும் போராட்டங்களில் கலந்துகொண்டனர். பலர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு, ‘இந்த சட்டத் திருத்தத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது' என்றும், இது பலருக்கும் நன்மை தரும் சட்டத் திருத்தம் என்றும் விளக்கமளித்தது.

ஆளும் அ.தி.மு.க-வோ, தங்களின் ஆதரவு மத்திய அரசுக்குத்தான் என்று நாடாளுமன்ற வாக்கெடுப்பிலேயே அறிவித்துவிட்டது. கடந்த டிசம்பர் 23-ம் தேதியன்று, எதிர்க்கட்சியான தி.மு.க தலைமையில் தமிழகத்தில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. பல கட்சிகளும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், மத்திய அரசு இதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

- தனிமொழி

அடுத்த கட்டுரைக்கு