``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!’’ - ஹிந்து என்.ராம் உரை

ரஜினிகாந்த் CAA , NPR , NRC எதிர்ப்பு போராட்டங்களைப் பற்றி அவர் பேசும்போது, எது பணயம் வைக்கப்படுகிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்
இந்தியா முழுவதும் CAA, NRC மற்றும் NPR சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தினமும் போராட்டம் வலுக்கிறது. அரசு, போராட்டக் குரல்களுக்குச் செவி சாய்க்க மறுக்கிறது. இந்த நிலையில், இது குறித்த அரசியல் தலைவர்களின், பிரபலங்களின் கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சட்டங்களைப் பற்றித் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகள், அரங்கு கூட்டங்கள் என்று நாடெங்கிலும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அவ்வழியில், சென்னையில் கல்வியாளர்கள், அரசியல் சாசன வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல துறை வல்லுநர்கள் சார்ந்த பலர் `அரசியல் சாசன பாதுகாப்புப் பேரவை’ என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கு கூட்டத்தில் இந்தப் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் `தி ஹிந்து' வெளியீட்டுக் குழுமத் தலைவர் என். ராம் உரையாற்றினார். அந்த உரையின் ஒரு பகுதி இங்கே....

அவர், டெல்லியில் சமீபத்தில் நடந்த போராட்டங்களையும் கலவரத்தையும் பற்றிப் பேசுகையில், ``மிக துன்பகரமான சம்பவங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்திருக்கின்றன. CAA சட்டத்தையும் அதனோடு NRC மற்றும் NPR சட்டங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் புரிந்துகொள்ள, ஆய்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம். இச்சட்டங்களைச் சுற்றிய பல துன்பகரமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. தற்போது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் வன்முறைகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கான யதேச்சதிகாரப் போக்கின் வெளிப்பாடே. தற்போது நிகழும், CAA எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு, நம் வரலாறு கண்டிராத அளவு வீரியத்தைப் பெற்றிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. எல்லா வாழ்நிலைகளிலிருந்தும், எல்லா தரப்புகளிலிருந்தும் இச்சட்டத்துக்கு எதிராகப் போராடுவதற்காக மக்கள் ஒன்று திரண்டிருக்கிறார்கள். அதை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் பல்கலைக்கழகங்கள் தாக்கப்படுவது உட்பட பல அடக்குமுறைகள் கையாளப்படுகின்றன.
இந்தப் போராட்டங்கள், அரசியலமைப்பு நமக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளின் அடையாளமாக விளங்குகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை, போராடுவதற்கான உரிமை என அனைத்தையும் உள்ளடக்கியது. இந்தப் போராட்டம் பல நாள்களாகப் பல பகுதிகளில் நடந்துகொண்டிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகத்தான், கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், பர்வேஸ் வர்மா போன்றவர்கள் பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசி வருகிறார்கள். நான் காவல் ஆணையராக இருந்தால் இவர்களை எல்லாம் கைது செய்திருப்பேன். ஆனால், டெல்லி போலீஸ் மத்திய அரசுக்குப் பயந்துவிட்டது போலத் தெரிகிறது. அவர்கள் இதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைக் கேள்வி கேட்ட ஜஸ்டிஸ் முரளிதர் ஒரே இரவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த பணியிட மாற்றம் ஏன் நிகழ்கிறது என்பதையும் நாம் அறியமுடியாது.
டெல்லியில் நடந்த கலவரம், விரிவாக ஊடகங்களினால் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இந்துக்கள், முஸ்லிம்கள், அதிகாரிகள் என அனைவரும் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆனால், கலவரத்தை முன்கூட்டியே அனுமானிக்கவோ, உடனடியாக கட்டுக்குள் கொண்ட வரவோ டெல்லி போலீஸாரால் முடியாமல் போகிறது. இவற்றைக் கொண்டு, அரசு ஒன்று இதற்கெல்லாம் உடந்தையாக இருந்திருக்கிறது அல்லது தகுதியற்று இருந்திருக்கிறது என்றே புரிந்துகொள்ள முடிகிறது.
CAA வை ஆதரிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட அதனால்தான் இந்தக் கலவரத்தைத் தடுக்க முடியாத அரசைக் கண்டிக்கிறார். அவரது அந்த நியாயமான கோபத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், அதே சமயம் ரஜினிகாந்த் CAA, NPR, NRC எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி அவர் பேசும்போது, எது பணயம் வைக்கப்படுகிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
மேலும், ``ரஜினிகாந்த் அவர்கள் ஊடகங்களிடம் சொன்னவற்றை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன், ` CAA இந்தியக் குடிமக்களைப் பாதிக்காது, அப்படி அது முஸ்லிம்களைப் பாதித்தால் அதற்கு முதலில் எதிர்ப்புக் குரல் கொடுப்பது நானாகத்தான் இருப்பேன்' என்றார்.
இந்தக் கருத்துகளுக்கான பதிலைத்தான் நான் இப்போது சொல்ல விழைகிறேன். ஏனெனில், அவர்கள் இந்தச் சட்டங்கள் குறித்து இன்னும் நிறையப் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது . புரியவைக்கவே நான் முயன்றுகொண்டு இருக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து ``இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது, எங்குமே குடியுரிமை மதரீதியாக வழங்கப்படவில்லை. CAA மதரீதியாகக் குடியுரிமையைக் கையாள்வதே, அது தவறு என்பதை உறுதிப்படுத்துகிறது. நம்முடைய இந்தியக் குடிமக்கள் சட்டம் சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய மண்ணில் பிறந்தவர்களைக் குடிமக்கள் என்கிறது. ஒரு தேசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டத்தின்படி மக்களுக்கு வழங்கிய அனைத்து உரிமைகளையும் ஒருவனால் அனுபவிக்க முடியுமெனில் அவன் அந்த தேசத்துக் குடிமகனாகிறான். ஆனால், தற்போது குடிமகன் யார் என்பதிலேயே குழப்பம் இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். அதற்குப் பின்னர்தான் இந்தச் சட்டத்தால் இந்தியக் குடிமக்களுக்குப் பிரச்னை இருக்கிறதா இல்லையா என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.
மேலும், இந்திய அரசியலமைப்பின், 14-வது சட்டப்பிரிவு, இந்தியக் குடிமக்கள் மட்டுமன்றி, இந்திய மண்ணில் இருக்கும் அனைவருக்குமே சமமான சட்ட பாதுகாப்பையும், அனைவரும் இந்தியச் சட்டத்துக்கு முன் சமம் எனவும் சொல்கிறது. CAA இதை எதிர்ப்பதாலேயே இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது" என்றார்.