Published:Updated:

`வாழ்வாதாரமே போச்சு; மாற்று ஏற்பாடு சொல்லுங்க'- டிஜிட்டல் பேனருக்கு`கண்ணீர் அஞ்சலி' போராட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேனர் தொழிலாளர்கள் விநோத போராட்டம் நடத்தினர்.

digital banner
digital banner

அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் டிஜிட்டல் பேனர் பயன்படுத்தக் கூடாது என்ற கட்சியினரின் அறிவிப்பால் பேனருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி டிஜிட்டல் பேனர் உற்பத்தியாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

banner printing office
banner printing office

தமிழ்நாட்டில் இல்ல விழா, திருவிழா, அரசியல் கட்சி கூட்டம் என மக்கள் கூடும் எந்த விழாவாக இருந்தாலும் சரி அங்கே நிச்சயம் பேனர்கள் இடம்பெறும். தங்கள் பெருமையை நிலைநாட்டும் ஒன்றாக வைக்கப்படும் பேனர்கள் சில நேரங்களில் பிரச்னைகளுக்கும் வழிவகுத்துவிடுகின்றன. எனவே, பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனாலும் அவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் கடுமை காட்டியது. அதன் தொடர்ச்சியாக கட்சியினரின் இல்ல விழாக்களிலோ, கட்சி நிகழ்ச்சிகளிலோ பேனர்களை வைக்க வேண்டாம் என கட்சித் தலைவர்கள் அறிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

banner printing office
banner printing office

இது ஒருபுறமிருக்க விழாக்களில் டிஜிட்டல் பேனர்களை வைக்காவிட்டால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என பேனர் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் புலம்பி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட பேனர் உற்பத்தியாளர்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகள் முன் ``போஸ்டர், நோட்டீஸ் இவர்களின் மகன் டிஜிட்டல் பேனர் அவர்கள் அகால மரணமடைந்தார்'' எனக் கூறி டிஜிட்டல் பேனருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்களை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த டிஜிட்டல் பேனர் உற்பத்தியாளர் ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது, ”விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் டிஜிட்டல் பேனர் தயாரிப்பு தொழிலை நம்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் இந்த தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் சமீபத்திய அறிவிப்பால் பெரும்பகுதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சில நாட்கள் முகூர்த்த நாட்களாக இருந்ததால் எங்களால் ஓரளவு சமாளிக்க முடிந்தது.

ஆனால் தற்போது ஒரு நாளைக்கு ஒரு பிளக்ஸ் கூட அச்சடிக்க முடியவில்லை. இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ள எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வேறு என்ன வேலைக்கு செல்ல முடியும்? எனவே, அரசியல் கட்சியினர் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு வேறுஒரு தீர்வு காண வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.