‘மீனவர்கள் நிறைந்த எங்கள் மாவட்டத்தில், மீன்வளக் கல்லூரி தொடங்க வேண்டும்’ என்பதுதான் கன்னியாகுமரி மக்களின் நீண்டகால கோரிக்கை. இந்தக் கல்வியாண்டில், அங்கு கல்லூரியைத் தொடங்கிவிட்டது, நாகப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம். மகிழ்ச்சியடைய வேண்டிய மீனவர்களோ, ``நாங்கள் கேட்டது அரசுக் கல்லூரியைத்தான். தனியாருக்கு நிகரான கட்டணம் வசூலிக்கும் சுயநிதிக் கல்லூரியை அல்ல’’ என்று கொந்தளிக்கிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
கடந்த மாதம் கவுன்சலிங் முடிந்துவிட்டது. பி.எஃப்.எஸ்ஸி படிப்புக்காக, 20 மாணவர்களைத் தேர்வுசெய்துவிட்டனர். அக்டோபர் மாதம் 9-ம் தேதி, கல்லூரி ஆரம்பமாகவிருக்கும் நிலையில் எதிர்ப்பு வலுத்திருக்கிறது.
கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழில் மட்டுமே பிரதானம். அதிலும் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட தூத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்வதில் வல்லவர்கள். தினக்கூலிகளாக வேலைசெய்யும் மீனவர்களின் பிள்ளைகள், மீன்பிடித் தொழில் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, குமரி மாவட்டத்துக்கு மீன்வளக் கல்லூரி வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தோம். ஆனால், வசதிபடைத்தவர்களுக்கான கல்லூரியை இங்கு தொடங்கப் போகிறார்கள்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, பொன்னேரி, நாகப்பட்டினத்தின் தலைஞாயிறு ஆகிய மூன்று இடங்களில் அரசு மீன்வளக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அங்கெல்லாம் அரசுக் கட்டணத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு மட்டும் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் செலுத்திப் படிக்கும் கல்லூரியை ஏன் கொண்டுவருகிறார்கள் எனத் தெரியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நான்கு ஆண்டு படிப்பான மீன்வளப் பாடப்பிரிவில் மொத்தம் எட்டு செமஸ்டர்கள் உள்ளன. அரசுக் கல்லூரிகளில் ஒரு செமஸ்டருக்கு 12,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கல்லூரி படித்து முடிக்கும்போது, 96,000 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டிவரும். சுயநிதிக் கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு 75,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். நான்கு ஆண்டுகள் படித்து முடிக்க, ஆறு லட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதிக மதிப்பெண் பெற்று கலந்தாய்வில் முன்னிலை வகித்தாலும், பணம் செலுத்த வசதி இல்லாமல் இருந்தால் படிக்க முடியாத நிலைதான் ஏற்படும்.

மீன்வளக் கல்லூரி தொடங்க, குறைந்தபட்சம் 27 ஏக்கர் இடம் வேண்டும். ஆனால், மைலாடியில் கல்லூரி அமைக்க 11 ஏக்கர் நிலம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் மட்டும்தான் ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர, அங்கு கட்டடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கல்வி ஆண்டில் நாகர்கோவிலை அடுத்த பறக்கையில் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தின் அருகில் உள்ள கட்டடத்தில் வைத்து வகுப்புகள் தொடங்க இருக்கிறார்கள்.
மீன்வளக் கல்லூரி என்றால், மொத்தம் ஏழு துறைகளும், ஒரு துறைக்கு ஒரு பேராசிரியர், இரண்டு இணை பேராசிரியர்கள், மூன்று உதவி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். புதிய மீன்வளக் கல்லூரியில் ஒரு டீன், ஓர் உதவி பேராசிரியர், ஒரு டீச்சிங் அசிஸ்டென்ட் என மூன்று பேர்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை கட்டமைப்பே இல்லாமல் கல்லூரி தொடங்கினால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அரசுக் கட்டணத்தில் மாணவர்களுக்குப் படிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு நேரில் மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.
இதுகுறித்து டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஸ்ரீனிவாசனிடம் பேசினோம். ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் சார்பில் பலமுறை அரசிடம் எழுத்துபூர்வமாகக் கேட்டிருந்தோம். அரசால் உடனடியாக கல்லூரி தொடங்க முடியாது என்பதால், பல்கலைக்கழக முயற்சியால் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தனியார் சார்பில் கல்லூரி தொடங்கப்பட்டால், அதன் பிறகு அரசுக் கல்லூரி தொடங்குவதில் சிரமம் ஏற்படும் என்பதால், இப்போது சுயநிதிக் கல்லூரி தொடங்கியுள்ளோம். காலப்போக்கில் பொதுமக்கள் கோரிக்கையால் அரசுக் கட்டணத்தில் செயல்படும் கல்லூரியாக தமிழக அரசு இதை மாற்ற வாய்ப்புள்ளது.
வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள சுயநிதி வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பற்றிக் கவலைப்படாமல், முதலில் வருபவர்களுக்கு உடனே அட்மிஷன் போட்டுவிடுவார்கள். ஆனால், நாங்கள் அனைத்து விண்ணப்பங்களையும் பெற்றுவிட்டு, அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில் சீட் வழங்குகிறோம். இது முதல் ஆண்டு என்பதால், மேஜர் பாடங்களுக்கான பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்காலத்தில் தேவைக்கு ஏற்ப பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்றார்.