Published:Updated:

அனுமதியின்றி கூட்டமாகக் கூடுதல்... பத்தாயிரம் வழக்குகளுடன் முதலிடத்தில் தமிழகம்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாடு முழுவதும் 2018-ம் ஆண்டு பதியப்பட்ட குற்றங்களின் தரவுகளை வெளியிட்டது. 'அரசுக்கு எதிரான குற்றங்கள்' என்ற தலைப்பின் கீழ், தமிழ்நாடு அதிக அளவில் குற்றம் புரிந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்

2018, மே 22-ம் தேதி. தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அப்பாவி மக்களின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. போராட்டத்தின் 100-வது நாள், மக்கள் அமைதியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியில் நடந்தபோது, அவர்கள் ஊடரங்கு உத்தரவையும் மீறி பேரணியில் ஈடுபட்டதாகக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; அதன் விளைவு, அமைதியாகப் போராடிய 13 பேர் கொல்லப்பட்டனர்.

பலரும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய அமைப்புகள் மீது வழக்குகளும் போடப்பட்டன. அந்த ஆண்டு நடைபெற்ற மிகப் பெரிய போராட்டம் என்பது மட்டுமில்லாமல், பல உயிர்ச் சேதங்களை நிகழ்ந்திய போராட்டமாகவும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் மாறியது. அரசுக்கும் அரசின் கொள்கை முடிவுகளுக்கும் எதிராக மக்கள் திரண்டு போராடுவது என்பது ஜனநாயக நாடுகள் அளிக்கும் அடிப்படை உரிமைகளுள் ஒன்று. அப்படியாக, தமிழகம் ஒவ்வோர் ஆண்டும் போராட்டங்கள் வழியாக ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

அரசுக்கு எதிரான குற்றங்கள்
அரசுக்கு எதிரான குற்றங்கள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) கடந்த வாரம், இந்தியாவில் 2018-ம் ஆண்டு பதியப்பட்ட குற்றச் சம்பவங்களின் தரவுகளை வெளியிட்டது. இந்தியா முழுவதில் குற்றச் செயல்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் மாநில வாரியாக வெளியாகி யிருக்கிறது. 'அரசுக்கு எதிரான குற்றங்கள்' என்ற தலைப்பின் கீழ், தமிழ்நாடு அதிக அளவில் குற்றம்புரிந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

அதிகப் போராட்டங்கள் நடத்திய மாநிலம்!

அரசுக்கு எதிரான மொத்தக் குற்றங்களில் இரண்டாம் இடம் வகிக்கிறது தமிழ்நாடு. அரசுக்கு எதிரான குற்றங்களாகப் பதியப்பட்ட மொத்த வழக்குகள் 2,241. அதிக வழக்குகள் பதியப்படும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் 2,504 வழக்குகளைப் பெற்று முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் தமிழகமும் அதற்கு அடுத்த நிலையில் மகாராஷ்டிரா 453 வழக்குககளைப் பதிந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா முழுவதும் மொத்தமாக 8,536 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அரசுக்கு எதிரான குற்றங்கள்
அரசுக்கு எதிரான குற்றங்கள்

தேசத் துரோக வழக்குகள்!

அரசுக்கு எதிரான கருத்துகளைக் கூறுபவர்கள்மீது சட்டப் பிரிவு - 124ஏ-ன் கீழ் தேசத் துரோக வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுவது வாடிக்கையாகிவருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம், மணல் கொள்ளை முதலானவற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 2018-ம் ஆண்டில் ஒருவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், இந்தியா முழுவதிலும் 70 தேசத் துரோக வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன. இதில், ஜார்க்கண்ட் முதல் இடத்திலும், அஸ்ஸாம் மற்றும் ஜம்மு -காஷ்மீர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்திருக்கின்றன.

அனுமதி பெறாமல் கூடும் கூட்டங்கள்!

அனுமதிபெற்று, மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துபவர்கள் மீதும் பெரும்பாலும் பதியப்படும் வழக்குகளில் முதன்மையானது, அனுமதியின்றி கூட்டமாகக் கூடுதல் பிரிவில்தான். இந்த வழக்கில், இந்தியா முழுவதும் 10,092 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் 2,610 வழக்குகளுடனும், அடுத்ததாக ராஜஸ்தான் 2,439 வழக்குகளுடனும், மூன்றாவது இடத்தில் கேரளா 1,375 வழக்குகளுடனும் உள்ளன.

அரசுக்கு எதிரான குற்றங்கள்
அரசுக்கு எதிரான குற்றங்கள்

தொழிலாளர்கள் போராட்டம்!

இந்தியாவில், கடந்த ஆண்டும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் ஏராளம். இந்தியா முழுவதும் 440 தொழிலாளர்கள் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில்தான் அதிகமான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களில், ஏறத்தாழ 208 வழக்குகள் தமிழகத்திலும், ஒடிசாவில் 75 வழக்குகளும், கர்நாடகாவில் 47 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன

அரசுக்கு எதிராகப் போராடி கைது செய்யப்பட்டவர்களில் தமிழகம் முதலிடம்!

அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள்மீது கைது நடவடிக்கைகளும் வழக்குகளும் நாடு முழுவதும் பதியப்பட்டுள்ளன. இதில், இந்தியா முழுவதிலும் 13,160 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4,618 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 3,520 வழக்குகளும், ஆந்திரப்பிரதேசத்தில் 723 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராகப் போராடுபவர்களைக் கைதுசெய்வதில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது.

அரசுக்கு எதிரான குற்றங்கள்
அரசுக்கு எதிரான குற்றங்கள்

தொடர்ச்சியாகப் பல்வேறு விவகாரங்களில் அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் 'மக்கள் அதிகாரம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் ராஜுவிடம் இதுகுறித்துப் பேசினோம். அவர், "தமிழகத்தில் அமைதியாக நடத்தப்படும் போராட்டங்களுக்குக்கூட காவல்துறை அனுமதி கொடுப்பதில்லை. நீதிமன்றத்தில் முறையிட்டாலும், அதை விசாரித்து முடிவுகள் அறிவிக்கும் முன்பே அந்தப் பிரச்னை அரசால் மூடப்பட்டுவிடுகிறது.

சென்னையில், எந்தப் போராட்டத்துக்கும் காவல்துறை தற்போது அனுமதிப்பதில்லை. வீதிகளில் நடத்தப்படும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவது மட்டுமின்றி, மண்டபங்களில் போடப்படும் கூட்டங்களும் காவல் துறையின் தலையீட்டால் நடக்காமல் போகிறது. இதுபோன்ற கூட்டங்களை நடத்தும் மண்டபத்தின் உரிமையாளருக்கு காவல்துறையால் மிரட்டல்கள் வருகின்றன. போராட்டங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து வெளிவரும் துண்டுப் பிரசுரங்களை அச்சிடும் அச்சகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது காவல்துறை. ஆளும் அரசின் போக்குக்கேற்ப செயல்படுவதையும் மீறி, காவல்துறை அதிகாரிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்கின்றனர்" என்றார்.

தொடர்ந்து, "காலனிய ஆட்சிக் காலத்தில் பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்குகள், இன்று இயக்கங்களின் தலைவர்களின் மீது போடப்படுவதையும் மீறி, நீதி கேட்டுப் போராடும் சாமான்ய மக்களின் மீதும் பதியப்படுகிறது. தேசத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்கள்மீது தேசத் துரோக வழக்கு பதிவுசெய்யலாம். ஆனால், மக்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் போராடுவதை தேசத் துரோக வழக்காகப் பதிவு செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது.

ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளே மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதுதான். ஆனால் இன்று, சட்டத்தைக் கையிலெடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு வழங்கப்பட்டி ருப்பது ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது. வாழ்வியல் பிரச்னைக்காக ஜனநாயத்துக்கு உட்பட்டு முன்னெடுக்கும் போராட்டங்களை அரசு தடுக்கிறது. இவ்வாறான செயல்களை அரசு தொடர்ந்தால், அடிப்படை உரிமைகளான பேச்சுரிமைக்காகப் போராடும் சூழல் ஏற்படும். அதற்கும் மக்களுடன் சேர்ந்து போராடத் தயங்க மாட்டோம்" என்று முடித்துக்கொண்டார்.

'மக்கள் அதிகாரம்'  ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு
'மக்கள் அதிகாரம்' ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு

வருடந்தோறும் நிகழும் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அரசுக்கும் அரசின் கொள்கைகளுக்கும் எதிராக நடைபெறும் போராட்டங்களில், மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளைப் பரிசீலிக்க, மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். இங்கு, பல போராட்டங்களை ஒடுக்குவது எப்படி என்ற யோசனையைத் தான் அரசால் முன் வைக்கப்படுகிறதே அன்றி, மக்கள் போராடும் பிரச்னைகளுக்குத் தீர்வென்ன என்று அரசு சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால், போராடிய மக்கள்மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டிருக்காது. மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடியவர்கள், 'தேசத் துரோகி' முத்திரையையும் பெற்றிருக்க மாட்டார்கள்.

- தனிமொழி