Published:Updated:

`பரீட்சை எழுதுற மாணவர்கள் இருக்காங்க..!' - சாலை மறியலின்போது பேருந்துக்கு வழிவிட்ட கிராம மக்கள்

சாலை மறியல்
சாலை மறியல்

அந்த வழியாக வந்த பேருந்தில் தேர்வு எழுதச் செல்ல வேண்டிய பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் இருந்ததால் போராட்டக்காரர்கள் சிறிது நேரம் எழுந்து பேருந்துக்கு வழிவிட்டு பின்னர் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தஞ்சாவூர் அருகே ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காலை நேரம் என்பதால் அந்த வழியாக வந்த பேருந்தில் தேர்வு எழுதச் சென்ற பள்ளி மாணவர்கள் இருந்ததால் பேருந்துக்கு வழி விட்ட பிறகு, மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஏரியில் பொக்லைன் எந்திரம்
ஏரியில் பொக்லைன் எந்திரம்

தஞ்சாவூர் அருகே உள்ளது கொல்லாங்கரை என்ற கிராமம். இங்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னுவத்தி ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஏற்கெனவே மண் அள்ள வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, `ஏரியில் மண் அள்ள அனுமதிக்கக் கூடாது' எனக் கிராம மக்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தனர். பின்னர், `மண் அள்ள அனுமதிக்க மாட்டோம்' என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியுடன் சிலர் ஏரியில் மண் அள்ளுவதற்காக வந்தனர். இதை அறிந்த கிராம மக்கள் அன்னுவத்தி ஏரியில் திரண்டதுடன், `மண் அள்ளக்கூடாது' என்று கூறி பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர். அதன்பின்னர், எந்திரத்தோடு வந்தவர்கள், `அரசாங்கத்தின் அனுமதி பெற்றுதான், மண் அள்ள வந்தோம்' எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஆசியோடு நடக்கிறதா மணல் கொள்ளை?

`அரசு அனுமதி கொடுத்தாலும் நாங்க கொடுக்க மாட்டோம்' என மக்கள் எச்சரித்தனர். அதன் பின்னர் பொக்லைன் டிரைவர், பொக்லைனை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து, கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் தேர்வு எழுதச் செல்ல வேண்டிய பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் இருந்ததால், போராட்டக்காரர்கள் சிறிது நேரம் எழுந்து பேருந்துக்கு வழிவிட்டு, பின்னர் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மண் அள்ளுவதற்கு அனுமதிக்க மாட்டோம்' எனக்கூறி மக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு