Published:Updated:

`உங்களால் முடிந்தால் நிறுத்துங்கள்'- மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு மிரட்டல்?

சி.ய.ஆனந்தகுமார்
தே.தீட்ஷித்

அமைச்சர் பெயரை சொல்லிக்கொண்டு, காவிரியின் துணை ஆறுகளில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, மணல் அள்ளிய 20 லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால், திருச்சி-புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

protest
protest

திருச்சி காவிரியில் மணல் கொள்ளை ஓரளவு குறைந்தாலும், காவிரியின் துணை ஆறுகளில் மணல் கொள்ளை குறையவில்லை. இந்நிலையில், திருச்சி காவிரி ஆற்றின் துணை ஆறான கோரையாற்றில் மணல் கொள்ளை தலைவிரித்தாடுவதாகவும், அதைத் தடுத்து நிறுத்தவேண்டியும் அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாகப் போராடிவருகின்றனர். பொறுமையிழந்த மக்கள் திரண்டுவந்து, சட்டவிரோதமாக மணல் அள்ளிய 20 லாரிகள் மற்றும் வாகனங்களை முற்றுகையிட்டனர்.

திருச்சி-புதுக்கோட்டை எல்லையில் உள்ளது ஆவூர். இப்பகுதியில் உள்ள கோரையாற்றில் மணல் கொள்ளை நடப்பதாகத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள். குறிப்பாக ஆவூர், மதயானைப்பட்டி, சூரக்குடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் ஆகும்.

protest
protest

புதுக்கோட்டை மதயானைப்பட்டியில், அரசு மணல் குவாரி இயங்கிவருகிறது. இந்தக் குவாரி, சுமார் 12 ஏக்கர் பரப்பிலான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதனால் அந்தப் பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களான சூரக்குடி, ஆவூர் பகுதிகளில் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு, அனுமதிக்கப்பட்ட அளவான 1மீட்டர் ஆழம், சுமார் 800 மீட்டர் நீளத்துக்குப் பதிலாக, 10 மீட்டர் ஆழம் வரை மணல் அள்ளப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள கோரையாற்றுப் பகுதி முழுக்க பள்ளமாகிக்கிடக்கிறது.

இது, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதி என்பதால், அதிகாரிகள், காவல்துறையினர் அதிகம் கண்டுகொள்வதில்லை. இன்று திரண்டு வந்த அப்பகுதி மக்கள், மணல் குவாரிக்குச் சென்று விசாரித்தபோது, அங்கிருந்த ஆளுங்கட்சி பிரமுகரின் ஆட்கள், அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரம் செய்ததாகவும் குவாரியை உங்களால் முடிந்தால் நிறுத்திப்பாருங்கள் எனச் சொல்லி மிரடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், திரண்டு வந்து மணல் குவாரியை முற்றுகையிட்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 20 லாரிகளை சிறைபிடித்தனர். அப்போது, லாரி, ஜேசிபி ஓட்டுநர்கள் தப்பி ஓடியதால் பரபரப்பு நிலவியது.

அப்போது நம்மிடம் பேசிய பொதுமக்கள், ``சட்டவிரோதமாக இந்தப் பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர் குறைந்துபோனது. மழை பெய்தாலும், ஆற்றில் தண்ணீர் வராத நிலை. ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும் வரத்துப் பகுதிகளை சீர்குலைத்துவிட்டனர். இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்துள்ள மணல் கொள்ளைகுறித்து பலமுறை முற்றுகையிட்டும், புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. போலீஸாரின் துணையுடன் நடத்தும் மணல் கொள்ளை மீது யார் நடவடிக்கை எடுப்பது? இந்த திருட்டு மணல் கொள்ளைக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

protest
protest

கேட்டால் அமைச்சர் பெயரைச் சொல்லி, அதிகாரிகள் போராடுபவர்களையே மிரட்டி வருகிறார்கள் என்றார்கள். இங்கு நடக்கும் மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்தவில்லை எனில், அப்படியே ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் முறையிடவும் தயாராக உள்ளோம்” என்றார்கள்.

தொடர்ந்து அவர்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேநேரம், பொதுமக்களும் தற்போது பிடிபட்டுள்ள வாகனங்களைப் பறிமுதல்செய்து வழக்குப்பதிவு செய்யவும் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தகலறிந்து வந்த விராலிமலை வட்டாட்சியர் சதீஷ் மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, சிறைப்பிடித்த வாகனங்களை விடுவித்தனர்.