Published:Updated:

கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு; மாடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடிய விவசாயிகள்!

மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக முல்லைப்பெரியாறு நீர் லோயர் கேம்ப்பில் இருந்து ஆண்டிபட்டி வழியாக மதுரைக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டால் தேனி மாவட்டமே பாலைவனமாகும் என்கின்றனர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக முல்லைப்பெரியாறு நீரை தரைவழியாகக் குழாய் மூலம் மதுரைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முதல் மதுரை வரை பெரிய குழாய் பதித்து நீரைக் கொண்டு செல்லும் முல்லைப்பெரியாறு-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவிருக்கிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், குழாய் மூலம் மதுரைக்குத் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டால், தேனி மாவட்டம் பாலைவனமாகும் அபாயம் இருக்கிறது எனத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
`முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு விதிகள் பழைமையானவை!’ - உச்ச நீதிமன்றத்தில் கேரளா புதிய மனு

இந்நிலையில், அக்டோபர் 9-ம் தேதி உத்தமபாளையத்தில் வைத்து முல்லைப்பெரியாறு-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், இறுதி முடிவுகள் எடுக்கப்படாமலே கூட்டம் முடிந்தது. அப்போதே ஆட்சியர் அலுவலகம் முன்பு இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அதன்படி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகளுடன் திரண்டனர். இதையடுத்து, முல்லைப் பெரியாறு-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தைக் கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

ஆட்சியரைச் சந்தித்து மனு
ஆட்சியரைச் சந்தித்து மனு
முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; கேரள அரசின் புதிய நாடகமா?

ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்த விவசாயிகள், விவசாயிகள் வைகை அணையைத் தூர்வாரி அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்குத் தண்ணீர் கொண்டுச் செல்வதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்கள் விளைநிலங்களைப் பாதுகாக்கவே இத்திட்டத்தை எதிர்க்கிறோம், என்றனர்.

இதில் தேனி மாவட்ட விவசாயி சங்கங்கள், பொதுமக்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு மற்றும் எஸ்டிபிஐ, பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு