Published:Updated:

`காற்றாலை பாதிப்பே தீரல; அதுக்குள்ள சிமென்ட் தொழிற்சாலையா?' - போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள்

``மானாவாரி விவசாயப் பகுதியில் அமைக்கப்பட்ட காற்றாலைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளே தீராத நிலையில், புதிதாக சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்கமாட்டோம்” என தூத்துக்குடி மக்களும், விவசாயிகளும் மனிதச்சங்கிலி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.கைலாசபுரம் பகுதியில் புதிதாக தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு கைலாசபுரம், சவரிமங்கலம், ஜம்புலிங்கபுரம், உமரிகோட்டை உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனிதச்சங்கிலி போராட்டம்
மனிதச்சங்கிலி போராட்டம்
`18 கிராமத்தில் விவசாயம் அழிந்துபோகும்!' - 6 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

ஆனால், பொதுமக்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை எனக்கூறி கிராம மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.கைலாசபுரம் – புதியம்புத்தூர் சாலையில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதச்சங்கிலிப் போராட்டம் குறித்து கிராம மக்களிடம் பேசினோம், ``இந்தப் பகுதி முழுக்கவே மழையை நம்பியுள்ள மானாவாரி விவசாயப்பகுதிதான். மழை பெய்யலேன்னா அந்த வருச விவசாயமும் நடக்காது. அதனாலதான் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காம ஆடு, மாடுகளையும் மேய்ச்சுட்டு வர்றோம். எங்க கிராமத்து சுற்று வட்டாரப் பகுதிகள்ல காற்றாலைகள் அமைக்கிறதுக்கே ஆரம்பத்துல இருந்து எதிர்ப்பு தெரிவிச்சு பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனா, இப்போ திரும்புன பக்கமெல்லாம் காற்றாலைகளா வந்துடுச்சு. இதனால, விவசாயம் செய்ய முடியல.

சிமெண்ட் ஆலை அமையவுள்ள இடத்தின் அருகில் உள்ள ஊரணி
சிமெண்ட் ஆலை அமையவுள்ள இடத்தின் அருகில் உள்ள ஊரணி

இந்த நிலைமையில பத்து நாளுக்கு முன்னாலகூட ஒரு காற்றாலை ஒடிந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டுச்சு. ராத்திரி நேரத்துல நடந்ததுனால உயிர்ச் சேதம் எதுவுமில்லாம தப்பிச்சுட்டோம். இந்த நிலையில சிமெண்ட் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊருக்கு மிக அருகாமையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைவதற்கு எங்களுக்கு துளியும் விருப்பம் கிடையாது. இந்த முயற்சி கைவிடப்பட வேண்டும். சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிராக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை. ஆனால், சிமெண்ட் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தினை பார்ப்பதற்கும் அங்கு பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளை செய்வதற்கும் தொடர்ச்சியாக கம்பெனி ஆட்கள் வந்துட்டுப் போறாங்க. சிமெண்ட் ஆலை வந்தா கொஞ்சநஞ்சம் நடக்குற மானவாரி விவசாயமும் பாதிக்கப்பட்டுடும்.

எதிர்ப்பு வாசகம் ஏந்திய சிறுவர்கள்
எதிர்ப்பு வாசகம் ஏந்திய சிறுவர்கள்
தூத்துக்குடி: திடீரென முறிந்து விழுந்த காற்றாலை! - பற்றிய தீயால் கிராம மக்கள் அச்சம்

சிமெண்ட் ஆலை புகை படர்ந்து மாட்டுத்தீவனச் சோளம், சிறுதானியங்கள் முழுமையாப் பாதிக்கப்படும். இப்படி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மானாவாரி விவசாயத்தை அழித்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையிலான எந்த தொழிற்சாலையும் இங்கு அமைக்க அனுமதிக்க மாட்டோம். சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த மாதம் 12-ம் தேதி நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துச்சு. அதுல ஊரே திரண்டு எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செஞ்சோம்.

ஆனால், 10 பேர் மட்டும்தான் சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மற்ற அனைவரும் ஆதரவு தெரிவிப்பதாகவும் பொய்யான தகவல் அறிக்கையை அதிகாரிகள் அரசுக்கு வழங்கியுள்ளனர். இதை மறுக்கும் விதமாகவும் எங்களது எதிர்ப்பினை பதிவு செய்யும் விதமாகவும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளோம். இந்த தொழிற்சாலை அமைய உள்ளதாகச் சொல்லப்படும் இடத்திற்கு மிக அருகிலேயே மருத்துவமனை, ரயில் நிலையம், பள்ளிக்கூடம் மற்றும் 270 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் நீரேற்று நிலையம் உள்பட அனைத்து வாழ்வாதாரங்களும் உள்ளன.

மனிதச்சங்கிலிப் போராட்டம்
மனிதச்சங்கிலிப் போராட்டம்

இவற்றை சீரழிக்கும் நோக்கில் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். ஊருக்கு வெளியே உள்ள சிப்காட் வளாகத்திலோ, சிப்காட்டிற்கு அருகிலோ அமைக்கலாம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வேறு நல்ல தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்தால் அதனை நாங்கள் கட்டாயம் வரவேற்போம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு