Published:Updated:

``எங்க வயித்துல அடிச்சு வணிக வளாகம் கட்டணுமா?" - கொதிக்கும் தூத்துக்குடி வ.உ.சி சந்தை வியாபாரிகள்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி மார்க்கெட்டை இடித்து புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் வியாபாரிகள் கடைகளை அடைத்து மார்க்கெட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சாலையோரப் பூங்காக்கள், அறிவியல் பூங்காக்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், புதிய சாலைகள் அமைத்தல், சாலைகள் விரிவாக்கம், பேருந்து நிலையம் கட்டுதல், அடுக்குமாடி வணிக வளாகம், நகரின் முக்கியப் பகுதிகளில் இணையதள வசதி ஆகிய பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி சந்தையை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டும் திட்டமும் உள்ளது.

போராட்டம்
போராட்டம்

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட சந்தையில் வியாபாரம் செய்துவரும் வியாபாரிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்தநிலையில், கடைகளை நாளைக்குள் காலி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், சந்தையை இடிக்கக் கூடாது எனவும், இந்தத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் வியாபாரிகள் கடைகளை அடைத்து கறுப்புக்கொடி ஏந்தி மார்க்கெட் முன்பு போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வ.உ.சி சந்தையின் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் செந்தில்குமாரிடம் இது குறித்துப் பேசினோம். ``தூத்துக்குடியிலுள்ள சந்தைகளில் பழைமை வாய்ந்தது இந்த வ.உ.சி சந்தை. கடந்த 1920-ம் வருசத்துல வாரத்தில் சனிக்கிழமைகளில் மட்டும் செயல்படும் சனிக்கிழமைச் சந்தையாகத் தொடங்கப்பட்டது. 1938-லிருந்து தினசரிச் சந்தையானது. இந்தச் சந்தை தற்போது தூத்துக்குடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருது. இங்கே மொத்தம் 650 கடைகள் இருக்கு. மூணாவது தலைமுறையாக வியாபாரம் செஞ்சுட்டு வர்றோம். பொதுவா, சந்தைன்னாலே காய்கறிகள் வாங்கும் இடமாகத்தான் இருக்கும். ஆனால், இந்தச் சந்தையில காய்கறிகள், பழங்கள், இலை, பூ, அரிசி, பலசரக்கு மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருல்கள், மண் பாண்டங்கள், ஃபேன்ஸி பொருள்கள், மீன், கருவாடு, இறைச்சி வகைகள், உணவு தானியம், பழைய இரும்புப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், ஜவுளிகள், செல்லப்பிராணிகள், பேக்கரி, புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள், ஃபர்னிச்சர்ஸ், நாட்டு மருந்துப் பொருள்கள் என இங்கே கிடைக்காத பொருளே கிடையாது.

போராட்டம்
போராட்டம்

ஒரே இடத்தில் அத்தனை பொருளையும் வாங்கலாம். இதனால், லிஸ்ட்டில் குறிப்பிட மறந்த பொருள்கூட சந்தையைச் சுற்றி வரும்போதே நினைவுக்கு வந்துவிடும். மாவட்டத்தின் பல ஊர்கள்ல இருந்தும் தினமும் 1,000 முதல் 2,000 பேர் வரைக்கும் சாமான்கள் வாங்க வர்றாங்க. காலையில 10 மணிக்கு பொண்ணு மாப்பிள்ளையை முடிவு செஞ்சா எல்லா சாமானையும் இங்கேயே வாங்கி 12 மணிக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம்னு சொல்லுவாங்க. இங்கே அதிகபட்சமா ஒரு மணி நேரத்துல வாங்கி வண்டியில ஏத்திடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில காய்கறிச் சந்தைகளில் ஒரு கிலோவுக்கு குறையாமல் காய்களை வாங்க முடியாது. ஆனால், இங்குள்ள காய்கறிக் கடைகளில் குறைந்தபட்சம் கால் கிலோ முதல் காய்களை வாங்க முடியும். பட்ஜெட்டுக்குள் லிஸ்ட்டிலுள்ள பொருள்களை வாங்கிச் செல்ல முடியும். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சின்னச் சின்ன சந்தைகள் இருந்தாலும், இந்தச் சந்தைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிச்சுட்டேதான் இருக்கு. 1997- ம் வருஷம் எதிர்பாராம தீ விபத்து நடந்துச்சு. அப்போது பாதிப்புகள் அதிகமானது.

வியாபாரிகள் போராட்டம்
வியாபாரிகள் போராட்டம்

வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் சீரமைக்க உதவி கேட்டோம். ஆனால், நீங்களே பணம் செலவு செய்து கட்டிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. இதற்காக வங்கியில் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று தனிப்பட்ட முறையில் சீரமைத்தோம். 95% கடைகள் நல்ல நிலையில்தான் இயங்கிக்கிட்டிருக்கு. இந்த நிலைமையில ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல புதிதாகக் கடைகள் கட்டப்போறதாச் சொல்லி காலி பண்ணச் சொல்றாங்க. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாங்க வரவேற்கிறோம். ஆனால், அது வ.உ.சி சந்தைப்பகுதிக்கு தேவையற்றது.

நாட்டின் முதுகெலும்பே விவசாயிகளும் வியாபாரிகளும்தான். ஆனா, அரசே எங்க வயித்துல அடிக்கலாமா? இதற்கு முன்பும் இதே சந்தையை இடிச்சுட்டு புதுசா கடைகள் கட்டணும்கிற திட்டத்தைச் செயல்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சி செஞ்சாங்க. ஆனா, வியாபாரிகள், மக்களோட எதிர்ப்புனால அந்தத் திட்டம் நிறைவேறலை. இப்போ ஸ்மார்ட் சிட்டி வடிவத்துல திரும்பவும் எங்களோட வாழ்வாதாரத்தைப் பறிக்கப் பாக்குறாங்க.

வியாபாரிகள் போராட்டம்
வியாபாரிகள் போராட்டம்

இந்தச் சந்தையை நம்பி கடைக்காரர்கள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், லாரி ஓட்டுபவர்கள், சுமை தூக்குவோர் என சுமார் 50,000 பேரின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். அரசு இந்தத் திட்டத்தை கைவிடலையென்றால் குடும்பத்துடன் கலெக்டர் ஆபீஸுக்குப் போய் எங்களோட ஆதார் அட்டை, ரேஷன் அட்டையைத் திரும்ப ஒப்படைப்பதா முடிவு செஞ்சிருக்கோம். மாநகராட்சியில் பல பகுதிகளில் அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில், வியாபாரிகளின் வயிற்றில் அடித்து இப்படியொரு திட்டத்தை செயல்படுத்துவது எந்த வகையில் நியாயம்?” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு