Published:Updated:

`மு.க.ஸ்டாலின், துணை பிரதமராகும் கனவுடன் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறார்!' - அண்ணாமலை

``உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்டதைத் தொடர்ந்து 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் 142 அடியாகத் தேக்கினோம். தமிழகத்தில் ஆட்சி மாறிய பின் 136 அடியைத் தாண்டவிடாமல் செய்துவிட்டனர். இதற்கு மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." - அண்ணாமலை

முல்லை பெரியாறு அணையின் தமிழக உரிமையை மீட்கக்கோரியும் தமிழக, கேரள அரசுகளைக் கண்டித்தும் பா.ஜ.க சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``முல்லை பெரியாறு அணை ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக் தலைமையில் தமிழர்களால் கட்டப்பட்டது. 1986-ல் கொண்டு வந்த 999 ஆண்டுக் கால குத்தகை ஒப்பந்தம் என்பது காலவரையறையற்றது. மழைபெய்யும் காலம் வரை இந்த அணையின் தண்ணீர் தமிழகத்துக்குச் சொந்தம்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக இருந்த காலத்தில் அணையில் 10 டி.எம்.சி தேக்கப்பட்டது. இதன்மூலம் 2.41 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறப்பட்டது. 136 அடியாகக் குறைக்கப்பட்டபோது 71,000 ஏக்கராகக் குறைந்தது. அணையில் 142 அடியாகத் தண்ணீர் தேக்கினால் 1.70 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஆனால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசுக்கு அக்கறையில்லை. இதற்காக கேரள அரசுடன் முறையாக ஒப்பந்தமும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு விவகாரம்: இந்த உண்மைகளை கேரள அரசியல்வாதிகள் உணர மறுப்பது ஏன்?

இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 138.50 அடியாக இருந்தபோதே நீதிமன்ற தீர்ப்பை மீறி கேரள அரசு தண்ணீர் திறந்தது. இதுகுறித்து முறையாகத் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கு தமிழக அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு கையைக் கட்டிக்கொண்டும் வாயைப் பொத்திக் கொண்டும் வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் இருந்து 4 அமைச்சர்கள் சென்றனர். அதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 80 வயதிலும் வந்து ஆய்வு செய்கிறேன் என்கிறார். ஆட்சியில் இருந்தபோது முறையாக வேலை செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.

பேபி அணைக்கு கீழே உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளித்த கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால், தற்போது கேரள அரசு மரங்களை வெட்ட அனுமதி அளிக்கவில்லை எனக் கூறிவிட்டது.

வரும் 2024-ம் ஆண்டி பாராளுமன்றத் தேர்தலில் நாட்டின் துணை பிரதமராக வந்துவிடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழக முதல்வராக்க நினைக்கிறார். இது பகல் கனவாகிவிடும். இருப்பினும் தமிழக மற்றும் கேரள கம்யூனிஸ்ட்களின் ஆதரவுடன் துணை பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறார். ஆனால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் 400 எம்.பி-க்களைப் பெற்று மோடிதான் மீண்டும் பிரதமராவார்.

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்டதைத் தொடர்ந்து 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் 142 அடியாகத் தேக்கினோம். தமிழகத்தில் ஆட்சி மாறிய பின் 136 அடியைத் தாண்டவிடாமல் செய்துவிட்டனர். இதற்கு மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் விவசாயம் செழிக்க முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1979-ல் இருமாநில அரசுகளும் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகில் பலமான அணையாக முல்லை பெரியாறு அணை உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 கமிட்டிகள் அணையை ஆய்வு செய்து பலமாக உள்ளது என அறிக்கை சமர்ப்பித்தது. அணையில் 142 அடி தேக்குவதில் எவ்வித பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவதால் கேரள மக்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த வைகோவுக்கு விவசாயிகள் மீது உண்மையான மரியாதை இருந்தால், அவர் நியாயமான மனிதராக இருந்தால் பா.ஜ.க-வுடன் கைகோத்து முல்லை பெரியாறு அணையை மீட்க வர வேண்டும். அவர் குடும்ப அரசியல் செய்யவில்லையெனில், எங்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சமூக வலைதளத்தில் சென்னை வெள்ளத்துக்கு மத்திய அரசுதான் காரணம் எனப் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கவில்லை என்கிறார். ஆனால், ரேடார் மூலம் முறையாக எச்சரிக்கை அறிவிப்புகள் விடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மு.கருணாநிதி முதல்வராக இருக்கும்போது வெள்ளைத்தை பார்த்தார்.

மாநிலத்தலைவர் அண்ணாமலை
மாநிலத்தலைவர் அண்ணாமலை
முல்லைப் பெரியாறு: பேபி அணையைப் பலப்படுத்த கேரள அரசு பச்சை கொடி... புதிய அணை திட்டம் கைவிடப்படுமா?!

மு.க.ஸ்டாலின் மேயராகவும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், துணை முதல்வராக இருக்கும் போதும் தற்போது முதல்வராக இருக்கும்போதும் வெள்ளைத்தைப் பார்த்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெள்ளைத்தைப் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றனர். மழை வந்தால் வெள்ளம் வரும் எனத் தெரியாமல், ரேடார் மூலம் சொன்னால்தான் தெரியும் என்கிறார்கள்.

முல்லை பெரியாறு அணைக்காக உரிமையை மீட்க பா.ஜ.க நடத்தும் போராட்டத்தைத் திசை திரும்பவே மதுரை எம்.பி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழக கம்யூனிஸ்ட்டுகள் தற்போது யார் பக்கம் இருக்கிறது எனத் தெரிவிக்க வேண்டும். இந்திய-சீனப் போரின்போது சீனாவின் பக்கம் நின்றனர். தமிழக கம்யூனிஸ்ட்களும் மதுரை எம்.பி-யும் பினராயி விஜயன் பக்கம்தான் நிற்பார்கள். எனவே, தமிழக மக்கள் அரசியலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தப் போராட்டம் முடியவில்லை. தமிழக உரிமையை மீட்க முல்லை பெரியாறு அணையை நோக்கி செல்லவும் பா.ஜ.க தயாராக உள்ளது. முல்லை பெரியாறு அணையை நோக்கி ஒரு லட்சம் மக்கள் செல்லத் தயாராக இருங்கள்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு