Published:Updated:

`பொருளாதார சீரழிவுக்கே இதுதான் காரணம்!' - ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராகக் கொதிக்கும் வியாபாரிகள்

வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

``ஆன்லைன் வர்த்தகத்தால் நம் நாட்டுப் பொருளாதாரம் வெளிநாட்டுக் கம்பெனிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் பொருளாதார பேரழிவு ஏற்படும்” என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராகவும், அந்நிய நாட்டு உணவுப் பொருள்களை மக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், ``நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கு காரணமே ஆன்லைன் வர்த்தகம்தான். ஆன்லைன் வர்த்தகத்துக்கான கதவை முந்தைய காங்கிரஸ் அரசு திறந்தது.

Vikatan

மத்திய பா.ஜ.க அரசோ கதவை தனியாக கழட்டி வைத்துவிட்டது. இதனால், சில்லறை வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் உற்பத்தி செய்பவர், சந்தைப்படுத்துபவர், விற்பனையாளர் என அனைவரும் அந்நியர்கள்தான். இதனால் வணிகத்தில் கிடைக்கும் வருமானம் அவர்களுடைய சொந்த நாட்டுக்குச் செல்வதால் பொருளாதாரச் சீரழிவு ஏற்படுகிறது.

நம் நாட்டுப் பொருளாதாரம் வெளிநாட்டுக் கம்பெனிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதார பேரழிவு ஏற்படும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அந்நியப் பொருள்கள் விற்பனை செய்வதில்லை என தீர்மானித்து சுதேசிக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. அதன்படி பொதுமக்களும் அந்நிய நாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருள்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களையே வாங்க வேண்டும்.

வெள்ளையன்
வெள்ளையன்

இதை வலியுறுத்தி இந்தப் புதிய ஆண்டில் ஜனவரி 1-ம் தேதி சென்னையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறோம்'' என்றார். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்த வெள்ளையனை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸார், நடு வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு