Published:Updated:

`பா.ஜ.கவினருக்கு மட்டும் தனிச் சட்டமா?' - கிருஷ்ணமூர்த்தி கைது விவகாரத்தில் சுப.உதயகுமார் காட்டம்

``பொது மக்களுக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பா.ஜ.கவினர் மீது குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுக்காத அரசும், காவல்துறையும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளி கிருஷ்ணமூர்த்தியை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தது ஏன்?” என சுப.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடியில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் கடந்த 4–ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ``தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் ஒரே அணியில் கைகோத்து பல போராட்டங்கள் நடத்தி ஆலையை மூடச் செய்த களம். போராட்டங்கள் பல நடந்த ஊர் இது.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி

நெல்லை கண்ணன் சொன்னதுபோல, கண்டிப்பா சோலிய முடிப்போம். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலின் சோலிய முடிப்போம். பி.ஜே.பியை அரியணையிலிருந்து அகற்றும் வரை ஓயமாட்டோம். மோடி, அமித் ஷா கூட்டம் அடியோடு வேரறுக்கப்படும் வரை எங்களின் மண் சார்ந்த போராட்டம் ஓயாது. குடியுரிமைச் சட்டத்தை வாபஸ் வாங்கினாலும் நாம் ஏமாறக்கூடாது. போராட்டத்தைக் கைவிடக் கூடாது” என ஆவேசமாகப் பேசினார்.

பி.ஜே.பியைக் குறிப்பிட்டுப் பேச்சைத் தொடங்கிய போதே, டென்ஷனான போலீஸார் பேச்சை நிறுத்தச் சொல்லிக் கூறியும், தொடர்ந்து பேசினார். இந்நிலையில், நேற்று தென்பாகம் போலீஸார், அவரை விசாரணைக்காக அழைத்துப் பின்னர் கைது செய்ததுடன் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கிருஷ்ணமூர்த்தியின் கைதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயக்குமார் தலைமையில் பல்வேறு இயக்கங்களின் கூட்டமைப்பினைச் சேர்ந்தோர், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்தவர்கள்
மனு அளிக்க வந்தவர்கள்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயகுமார், ``மத்திய அரசு பலவந்தமாக நாட்டு மக்களின் மீது குடியுரிமைச் சட்டத்தைத் திணிக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்ட அமைப்புக்கு எதிராக நிறைவேற்றப்படும் இந்தச் செயல் குறித்து பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து அறவழியில் ஒரு போராட்ட நிகழ்வை நடத்தி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸார், மோசமான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீதிமன்றம், பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய, குண்டுவீசுவோம், கொலை செய்வோம், குடும்பத்தை குளோஸ் பண்ணுவோம் என்றெல்லாம் பொதுவெளியில் பேசி மிரட்டல் விடுத்த பா.ஜ.கவைச் சேர்ந்த தேசியச் செயலாளர் எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது இதுவரையிலும் தமிழக அரசும், காவல்துறையும் குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுக்கவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி
ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி

இந்நிலையில், அறவழியில் தனது கருத்தைத் தெரிவித்த கிருஷ்ணமூர்த்தியை மட்டும் கைது செய்தது ஏன்? பா.ஜ.கவினருக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? கிருஷ்ணமூர்த்தி மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு, விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், இதுபற்றிய கருத்துகளை மக்களிடையே தீவிரமாக எடுத்துச்செல்வோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு