Published:Updated:

`துணைவேந்தர் பதவிக்கே அவர் தகுதியற்றவர்!’ -முகமூடி கும்பல் தாக்குதலால் படுகாயமடைந்த ஆய்ஷி கோஷ் #JNU

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

ஜே.என்.யு-வில் புதிய ஆட்கள் நடமாட்டம் குறித்து முன்னரே தெரிவித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜே.என்.யூ-வில் நேற்று மாலை நடந்த வன்முறையில் ஜே.என்.யூ மாணவர் அமைப்புத் தலைவர் ஆய்ஷி கோஷ் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். தற்போது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். `பல்கலைக்கழக வளாகத்துக்குள் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக மதியமே காவல்துறையினரிடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை' என ஆய்ஷி கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள ஆய்ஷி கோஷ், ``மாணவர்கள் மீது சுமத்தப்படும் கட்டண உயர்வைக் கண்டித்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். அமைதியான முறையில் தீர்வு காண்பதே எங்களது நோக்கமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை மாணவர் தலைவர் மற்றும் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

சபர்மதி விடுதி அருகே நான் தாக்கப்பட்டேன். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தது. `வளாகத்தில் புதிய நபர்களின் நடமாட்டம் இருக்கிறது. நாங்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறோம்' எனக் காவலர்களிடம் தெரிவித்திருந்தோம். இருந்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

`திட்டமிட்டே அடித்தார்கள்; இந்தியில் திட்டினார்கள்!’ -ஜே.என்.யூ வன்முறையால் கலங்கிய மாணவர்கள்

இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகத்தில் எந்தப் பதவியை வகிக்கவும் அவர் தகுதியற்றவர். அவர் இந்தப் பல்கலைக்கழகத்தில் தோல்வியடைந்துவிட்டார். நான் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டேன். ஏராளமான ரத்தத்தை இழந்துவிட்டேன். மாணவர்கள்தான் ஆம்புலன்ஸை வரவழைத்து என்னை இங்கு அனுமதித்தனர்” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக த்ரிதி தத்தா என்ற மாணவி பேசுகையில், ``மாலை 5.30 மணிக்கு விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது 40-50 நபர்கள் முகமூடி அணிந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே இருப்பதைக் கண்டேன். அவர்கள் கையில் இரும்பு ராடுகள், குச்சிகளை வைத்திருந்தனர். அவர்கள் ஜெய் ஸ்ரீராம் போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

ஜேஎன்யூ  பல்கலைக்கழகம்
ஜேஎன்யூ பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். மாணவர்களைத் துரத்தினர். அங்கு ஏராளமான காவலர்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் சபர்மதி விடுதிக்குள் நுழைந்தேன். நான் அங்கு ஒரு காவலரையும் பார்க்கவில்லை. உடனே விடுதிக் காப்பாளரை எச்சரித்தேன். அவர் உடனடியாக செக்யூரிட்டி கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். ஆனால், யாரும் அழைப்பை எடுக்கவில்லை. அந்தக் கும்பல் மாணவர்களை மட்டுமல்ல பேராசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. பேராசிரியர்கள் சுக்லா சாவந்த், அமீத் பரமேஸ்வரன், சென் ஆகியோர் காயமடைந்துள்ளனர்” என்றார்.

இந்தத் தாக்குதலால் சபர்மதி விடுதி கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் சபர்மதி விடுதி காப்பாளர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். ``நாங்கள் முடிந்த வரை முயற்சி செய்தோம். ஆனால், எங்களால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு