Published:Updated:

``இங்க ராணுவ ஆட்சியா நடக்குது?" - விமானப்படைக்கு எதிராகக் கொந்தளித்த தஞ்சை மக்கள்

கே.குணசீலன்
ம.அரவிந்த்

தஞ்சாவூரில் மக்கள் பயன்படுத்திவந்த சாலையை இந்திய விமானப்படை அதிகாரிகள் மூடி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அந்த வழியாகச் செல்வதற்கு அனுமதிக்கின்றனர். இதனால், சொந்த ஊரிலேயே நாங்கள் அகதிகளாக இருக்கிறோம் என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

இனத்துக்கான்பட்டி கிராமத்தினர்
இனத்துக்கான்பட்டி கிராமத்தினர் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் அருகே மாற்று கிராமம் உருவாக்கித் தருவதாகக் கூறி, அந்த ஊர் மக்களிடம் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது இந்திய விமானப்படை. தற்போது, அந்தப் பகுதி முழுவதும் விமானப்படை கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மக்கள் வெளியே செல்வதற்குப் பயன்படுத்திவந்த சாலையை மூடி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அந்த வழியாகச் செல்வதற்கு அனுமதிக்கின்றனர் அதிகாரிகள். இதனால், சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலையில் இருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களை நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இனத்துக்கான்பட்டி கிராமத்தினர்
இனத்துக்கான்பட்டி கிராமத்தினர்

தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது, இந்திய விமானப்படை தளம். இங்கு, பல ஆண்டுகளாகவே பல்வேறு விரிவாக்கப் பணிகளைச் செய்துவருகின்றனர், விமானப்படை தளத்தைச் சேர்ந்த அதிகாரிகள். இதற்காக, விமானப்படை தளம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதேபோல் இனத்துக்கான்பட்டி கிராமத்திலும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த ஊர், இந்திய விமானப்படை தளத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருப்பதுடன் ஊரைச் சேர்ந்த மக்கள் வெளியே சென்று வருவதற்கு விமானப்படைக்கு சொந்தமான ஒரு சாலையை மட்டும் பயன்படுத்திவந்தனர்.

தற்போது அந்தச் சாலை மூடப்பட்டு, குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் மக்கள் யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதிப்பதில்லை. இதனால் நாங்கள் அகதிகளாக வாழ்கிறோம். எங்க பகுதியில் மட்டும் ராணுவ ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியுடன் எங்களை வாழவிடுங்கள். இல்லையென்றால், சாவதற்கு சுடுகாடு கொடுங்கள் என்ற கோஷத்துடன், இன்று தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு கொடுக்க வந்தனர். மேலும், எங்களுக்கு மாற்று கிராமம் அமைக்கும் வரை குறிப்பிட்ட அந்த சாலையில் எப்போதும்போல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இனத்துக்கான்பட்டி கிராமத்தினர்
இனத்துக்கான்பட்டி கிராமத்தினர்

இதுகுறித்து ராதா என்ற பெண்ணிடம் பேசினோம், ``எங்க ஊரில் மொத்தம் 146 குடும்பங்கள் இருந்தன.1995-ம் ஆண்டு, விமானப்படை விரிவாக்கப் பணிக்காக எங்களுடைய (சுமார் 1,500 ஏக்கர்) நிலங்களைக் கையகப்படுத்திக்கொண்டனர். இதற்காக, எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் வசிப்பதற்காக மாற்று கிராமம் உருவாக்கித் தருவதாகக் கூறினர். ஆனால், இதுவரை செய்துகொடுக்கவில்லை.16 ஏக்கர் பரப்பளவுகொண்ட எங்கள் ஊரைச் சுற்றி விமானப்படை அதிகாரிகள் சுற்றுச்சுவர் எழுப்பி விட்டனர்.மேலும், முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டது எங்கள் கிராமம்.

இந்த நிலையில், எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள், விமானப்படைக்குள் இருக்கும் சாலையைப் பயன்படுத்தி வந்தோம். வேலைக்குச் செல்வது, பிள்ளைகள் பள்ளிக்குப் போவது உட்பட, வெளியே செல்ல வேண்டும் என்றால், குறிப்பிட்ட சாலை வழியாகத்தான் சென்று வந்துகொண்டிருந்தோம். மாற்று கிராமம் உருவாக்கும் வரை இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தச் சாலையை மூடிவிட்டதுடன், காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரையும் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.

ராதா
ராதா

மற்ற நேரங்களில் யாரும் வெளியே செல்லவும் உள்ளே வரவும் முடியாது. 'ஏன் சார் இப்படிப் பண்றீங்க' என கேட்டால், எங்க ரூல்ஸ் இதுதான். 'நாங்க எதுவும் செய்ய முடியாது. வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் போய் கேளுங்கள்' என விமானப்படையின் முக்கிய அதிகாரிகள் கூறிவிட்டனர். எங்க நிலத்தையும் கொடுத்து, நாங்க வெளியே செல்வதற்கும் சம்மதித்த நிலையில் மாற்று கிராமம் அமைத்துத் தருகிறோம் என கூறிவிட்டு செய்யாமல்போனது யார் தவறு. எங்களுக்கு வாழ வழிசெய்யாத அரசு, எங்களை அகதிகளாக நடத்துவது வேதனையைத்தருகிறது" என்றார்.

முத்து என்பவர், ``எங்களுக்கு சாலை இருக்கு, நடக்க முடியவில்லை. கோயில் இருக்கு, சாமி கும்பிட முடியவில்லை. வாழ்வாதாரமான நிலத்தைக் கொடுத்தோம், குடியிருக்கும் வீட்டையும் கொடுக்கிறோம். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சாலையில் செல்ல முடியும். மற்ற நேரங்களில் திறக்கவே முடியாது என்கிறார்கள். ரெண்டு நாளைக்கு முன், எங்க ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு உடம்பு சரியில்லை. ஆம்புலன்ஸ் வந்து விட்டது. ஆனால், மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் உள்ளே வர அனுமதித்தனர். நல்லது கெட்டதுக்கு கலந்துகொள்ள வருகிற எங்க உறவினர்களையும் அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் முழுவதுமாக சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.

பேச்சு வார்த்தை நாடத்தும் அதிகாரிகள்
பேச்சு வார்த்தை நாடத்தும் அதிகாரிகள்

இன்னும் சொல்ல முடியாத பல துயரங்களைச் சந்திக்கிறோம். இந்தக் குறைகளை கலெக்டரிடம் சொல்வதற்கு சந்திக்க வந்தாலும் சந்திக்க முடியவில்லை. தமிழக அரசு, எங்களை சொந்த நிலத்தில் அடிமைகளாக, அகதிகளாக வாழ வைத்துள்ளது. எங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது. உடனே இதற்கான மாற்றை ஏற்படுத்தி, எங்களை சுதந்தரமாக நிம்மதியாக வாழவிடுங்கள் என கெஞ்சி கேட்கிறோம்" என கலங்கியபடி கூறினார்.