Published:Updated:

`35 வருஷமா வரி கட்றோம்; இந்த உப்பை நம்பித்தான் வாழ்வாதாரமே!’ - கலங்கும் தூத்துக்குடி கிராம மக்கள்

நான்கு தலைமுறைகளாகப் பிழைப்பு நடத்தி வந்த உப்பளங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, தூத்துக்குடியில் கிராம மக்கள் கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கறுப்புக்கொடி போராட்டம்
கறுப்புக்கொடி போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு ஊராட்சிக்குட்பட்டது துலுக்கன்குளம் கிராமம். இங்கு 150 வீடுகள் உள்ளன. 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு முக்கியத் தொழிலே உப்பளத் தொழில்தான். கடந்த 4 தலைமுறைகளாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் உப்பள நிலத்தை, சிப்காட் அமைப்பதற்குத் தேவைப்படுவதால் காலி செய்யுமாறு விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உப்பளத்தில் போராட்டம்
உப்பளத்தில் போராட்டம்

அந்த நோட்டீஸில், ``துலுக்கன்குளம் கிராமத்தில் உப்பளங்கள் அமைந்துள்ள இடமானது அரசுக்குச் சொந்தமான இடம். தற்போது இந்த இடம் அரசுக்குத் தேவைப்படுவதால் இந்தத் தகவல் சேர்க்கப்படும் தேதி முதல் 15 நாள்களுக்குள் நிலத்தைக் காலி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்காட்டிற்காக, அரசு உப்பளத்தினைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கிராமமே அழிந்துவிடும் நிலை ஏற்படும். அரசு இந்த முடிவைக் கைவிட்டு, பயன்படுத்தி வரும் உப்பளங்களுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள், வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி
கிராமத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

இதுகுறித்து துலுக்கன்குளம் கிராம மக்கள் கூறுகையில், ``ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து தற்போது வரை எங்கள் கிராமத்தில் 150க்கும் மேற்பட்டோர் அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைத்து உப்பு விளைவித்து அந்த வருமானத்தை வைத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலங்களுக்குக் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கிராம நிர்வாகத்துக்கு முறையாக வரி கட்டிக்கொண்டு வருகிறோம். இந்த நிலையில், தற்போது அரசு திடீரென இப்பகுதியிலுள்ள உப்பளங்களை அழித்துவிட்டு வேறு பயன்பாட்டுக்கு நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது.

கறுப்புக்கொடி
கறுப்புக்கொடி

எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. எங்களது கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இக்கிராமத்தில் உப்பள நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

இந்த வேதனையின் வெளிப்பாடாகவும், அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும்தான் கிராமம் முழுவதும் கறுப்புக்கொடி கட்டியுள்ளோம். முறையாக வரி செலுத்தி வரும் எங்களுக்கு, அரசு உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும்.

கிராம மக்கள் போராட்டம்
கிராம மக்கள் போராட்டம்

முதற்கட்டமாக இந்த அறிப்பை திரும்பப் பெற்று உப்பளத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்போம்” என்றனர் வேதனையுடன்.