Published:Updated:

திருச்சி: `மது பாட்டில் வீச்சு; தடியடி!’ - களேபரமான வ.உ.சி பேரவையினரின் போராட்டம்

ஒருவர் மதுபாட்டிலை காவல்துறையினரை நோக்கி வீசினார். அந்த பாட்டில் காவலர் ஒருவர் மீது பட்டுச் சிதறியது.

திருச்சியில் சாலைமறியலில் ஈடுபட்ட வ.உ.சி பேரவையினர்மீது போலீஸார் தடியடி நடத்தி, போராட்டத்தைக் கலைத்தனர்.

வ.உ.சி பேரவையினர்
வ.உ.சி பேரவையினர்

பட்டியலினத்திலுள்ள ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை `தேவேந்திரகுல வேளாளர்’ என்கிற பொதுப் பெயரில் அழைக்க, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதலமைச்சரின் இந்தப் பரிந்துரைக்கு வெள்ளாளர் சங்கத்தினர் மற்றும் வ.உ.சி பேரவையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வ.உ.சி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றினர்.

தடியடி நடத்திய போலீஸார்
தடியடி நடத்திய போலீஸார்

வாகனத்தில் ஏற மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் அடித்து வாகனத்தில் ஏற்றினர். வாகனத்திலிருந்த ஒரு நபர் மது பாட்டிலை காவல்துறையினரை நோக்கி வீசினார். அந்த மதுபாட்டில் காவலர் ஒருவர் மீது பட்டுச் சிதறியது.

போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது
போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள்மீது தடியடி நடத்தினர். தடியடியைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். தொடர்ந்து தப்பி ஓடியவர்களைக் காவல்துறையினர் விரட்டிப் பிடித்து கைதுசெய்தனர். இந்தத் தடியடிச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு