Published:Updated:

`கொடைக்கானல் - மூணாறு எஸ்கேப் சாலை என்ன ஆனது?’ - போராடத் தயாராகும் தமிழ்நாட்டு விவசாயிகள்

மூணாறு

``கேரள வட்டவடை, கோவிலூர் உள்ளிட்ட 28 மலைக் கிராம மக்களையும், கிளாவரை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட 16 கிராம மக்களையும் ஒன்றாகத் திரட்டி திருவனந்தபுரத்திலுள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்.”

`கொடைக்கானல் - மூணாறு எஸ்கேப் சாலை என்ன ஆனது?’ - போராடத் தயாராகும் தமிழ்நாட்டு விவசாயிகள்

``கேரள வட்டவடை, கோவிலூர் உள்ளிட்ட 28 மலைக் கிராம மக்களையும், கிளாவரை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட 16 கிராம மக்களையும் ஒன்றாகத் திரட்டி திருவனந்தபுரத்திலுள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்.”

Published:Updated:
மூணாறு

மலைகளின் இளவரசியான ​கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியிலிருந்து 6 கிலோமீட்டர் ​தூரத்தில் மோயர் வியூ பாயின்ட் என்ற பகுதி​ இருக்கிறது. இந்தப் பகுதிக்கு பாதை ​உருவாக்கியதாகக் கூறி​ ஆங்கிலேயர் தாமஸ் மோயர் என்பவருக்கு ​​​நினை​வுத் தூண் அமைத்து அவரின் பெயரையே இந்தப் பகுதிக்குச் சூட்டிவிட்டனர்.

கொடைக்கானல்
கொடைக்கானல்

இதேபோல கொடைக்கானலை ஆங்கிலேயேர்கள்தான் கண்டறிந்து அதிகமாக குடியேறினர், பல்வேறு பகுதிகளுக்கு பாதை உருவாக்கினர் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஆதிகுடியான தமிழர்கள் ஏற்கெனவே கொடைக்கானலுக்கு பாதை அமைத்து அங்கு வாழ்ந்தது மட்டுமல்லாமல், கொடைக்கானலிலிருந்து மூணாறு செல்வதற்கான பாதையையும் அமைத்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பாதை மூடப்பட்டதால் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகிறார்கள் விவசாயிகள். தமிழக - கேரள எல்லையில் தமிழர்களுக்காகப் போராடும், பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம்.

``கடந்த 1944-ல், ​இரண்டாம் உலகப் போ​ர் காலகட்டத்தில் கொடைக்கானலில் ஆங்கிலேயர்கள் அதிக எண்ணிக்கையில் ​வசித்துவந்துள்ளனர். ​உலகப்​ போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில், சென்னை மீது ஜப்பான் அணுகுண்டு வீசப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து, அன்றைக்குச் சென்னையில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், உடனடியாகத் தங்கள் நாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

​அந்தப் பாதையில் கொடைக்கானல் வழியாக பூம்பாறை, மன்னவனூர், பூண்டி வழியாக கிளாவரை சென்று, அங்கிருந்து 11 கிலோமீட்டர் குதிரையில் பயணித்து, டாப் ஸ்டேஷனை அடைய வேண்டும்.​ ​​அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைந்து, அங்கிருந்து அடிமாலி, கோதமங்கலம் வழியாக கொச்சிக்கு சென்று, கப்பல் மார்க்கமாக இங்கிலாந்துக்கு​ச் செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.

இறுதியில் அந்த வழியாக கொச்சிக்குச் சென்று இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர். அவர்கள் சென்ற அந்தப் பாதைக்கு பெயர், `தப்பி ஓடிய பாதை’ என்பதால் `எஸ்கேப் ரோடு’ என்று ஆனது.

​இந்தப் பாதை உருவாவதற்கு முன்னாலேயே, வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானலுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்​. கரடுமுரடாக இருந்த அந்தப் பாதையைப் பயன்படுத்தித்தான் ​ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடியிருக்கிறார்கள்.

மூணாறு
மூணாறு

​நாடு விடுதலை அடைந்த பிறகும்கூட அந்தப் பாதை பயன்பாட்டிலேயே இருந்துவந்திருக்கிறது. ஆனால் 1956 மொழிவழிப் பிரிவினை துரதிஷ்டவசமாக வட்டவடை, கோவிலூரை கேரளாவோடு இணைத்தது.​ ​இந்த வாய்ப்பைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட மலையாளிகள், உடனடியாக களத்தில் இறங்கி எஸ்கேப் ரோட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள். தேவிகுளம் தாலுகாவில் ஏற்கெனவே தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதை மனதில்கொண்ட மலையாளிகள், எந்த வகையிலும் கொடைக்கானல் பகுதியிலிருந்து தமிழர்கள் மேற்கு நோக்கி நகர்வதை அனுமதிக்கவில்லை.

​தேவிகுளம், உடுமஞ்சோலை, பீர்மேடு தாலுகாவிலுள்ள தமிழர்களை, தேயிலைத் தோட்டங்களில் செயற்கையாக நடத்தப்பட்ட கதவடைப்புப் போரட்டங்கள் மூலமாகக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றிய மலையாள அரசு, கடந்த 2003-ம் ஆண்டு எஸ்கேப் ரோட்டை மறித்து,​ ​அதை பாம்பாடும் சோலை தேசியப் பூங்காவாக அறிவித்தது.

கொடைக்கானல்
கொடைக்கானல்

முன்பு இருதரப்பு பயணத்துக்கு ஓரளவு முட்டுக்கட்டை போட்ட கேரள மாநில அரசு,​ ​இப்போது டாப் ஸ்டேஷன் தாண்டியதும் கிளாவரை வரை சென்று தமிழகத்தை இணைக்கும் எஸ்கேப் ரோட்டில் சங்கிலியைப் போட்டு இழுத்துப் பூட்டியது.​ ​ஜீப்களில் ஓரளவு பயணித்துவந்த இரண்டு பக்கமும் உள்ள தமிழர்கள், இப்போது கேரள மாநில வனத்துறையால் கடும் அவதியை​ச்​ சந்தித்துவருகிறார்கள்.

​கேரள அரசு​ ​​வெறும் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்தப் பண சாலையை இழுத்துப் பூட்டியதன் மூலம், மிகப்பெரிய பொருளாதாரத் தாக்குதலை வட்ட வடை, கோவிலூர் உள்ளிட்ட 28 மலைக் கிராமங்களில் வாழும் தமிழர்கள்மீது திணித்திருக்கிறது​.​ எஸ்கேப் ரோட்டை இழுத்துப் பூட்டியது மனித உரிமைகளை மீறும் செயல்”​ என்றார்.

கேரள தலைமைச்செயலகம்
கேரள தலைமைச்செயலகம்

​இறுதியாக, ``​இரண்டு மாநில அரசுகளும் இதற்கு ஒரு முன்முயற்சியை எடுக்க வேண்டும். இல்லையேல் ​​வட்டவடை, கோவிலூர் உள்ளிட்ட 28 மலைக் கிராம மக்களையும், கிளாவரை, மன்னவனூர்,​ ​பூண்டி உள்ளிட்ட 16 கிராம மக்களையும் ஒன்றாகத் திரட்டி, திருவனந்தபுரத்திலுள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்​” என்றார். ​