Published:Updated:

கோவை நீலச்சட்டைப் பேரணி ஏற்படுத்திய தாக்கம் என்ன? சிறப்புக் கண்ணோட்டம்!

`நேரமாகிடுச்சு’ என்று காவல்துறை நெருக்கடி கொடுத்துக் கொண்டேயிருந்தது. ஆனால், நீலவானம் கருமையாக மாறியும், கீழே உள்ள நீலம் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.

எப்போதும், பரபரப்பாக காணப்படும் கோவை பாலசுந்தரம் சாலை, ஞாயிற்றுக்கிழமை நண்பகல்களில் சற்றே ஓய்வு எடுக்கும். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறான கூட்டம், திரும்பிய பக்கமெல்லாம் நீல நிறம், அம்பேத்கரின் உருவம் பொதிந்த பதாகைகள், விண்ணைப் பிளந்துகொண்டிருந்த பறை இசை என்று பாலசுந்தரம் சாலை மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டது.

நீலச்சட்டை பேரணி
நீலச்சட்டை பேரணி

அன்றைய தினம் பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் சாதி ஒழிப்புப் பேரணி மற்றும் மாநாடு நடந்ததே அதற்கான காரணம்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல ஆயிரம் பேர் அதில் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன், தனியரசு எம்.எல்.ஏ, திராவிட கழகத்தலைவர் வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திராவிட விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணி,

சாதிய ஒழிப்பு மாநாடு
சாதிய ஒழிப்பு மாநாடு

மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இருந்தும் முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மாநாட்டை கோவை வ.உ.சி மைதானத்தில் நடத்துவதற்காகத்தான் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு வ.உ.சி மைதானத்தில் எந்த நிகழ்வு நடப்பதற்கும் காவல்துறை அனுமதி கொடுப்பதில்லை. அதனால், தயக்கம் காட்டிய காவல்துறை, அதற்குப் பதிலாக பாலசுந்தரம் சாலையில் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது.

மாநாடு
மாநாடு

மாநாடு நடந்துகொண்டிருக்கும்போதே, `நேரமாகிடுச்சு’ என்று காவல்துறை நெருக்கடி கொடுத்துக்கொண்டேயிருந்தது. ஆனால், நீலவானம் கருமையாக மாறியும், கீழே உள்ள நீலம் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பிறகே கூட்டம் கலைந்தது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம், குடிநீரை தனியார் மயமாக்குவதற்குக் கண்டனம், ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம், ரஜினிக்கு எதிராக தீர்மானம் என்று அந்த மாநாட்டில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நீலச்சட்டைப் பேரணி
நீலச்சட்டைப் பேரணி

ஆர்ப்பரித்த இளைஞர் கூட்டம், குடும்பம் குடும்பமாகப் பங்கேற்ற மக்கள், ஒரே மேடையில் கூடிய தலைவர்கள் என்று தனிக்கவனம் ஈர்த்துள்ளது இந்த நீலச்சட்டை பேரணி மற்றும் மாநாடு.

இந்தப் பேரணி மற்றும் மாநாட்டை ஒருங்கிணைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ``நீண்ட இழுபறிக்குப் பிறகுதான் காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இப்படி ஒரு பேரணி மற்றும் மாநாடு நடக்கப் போகிறது, அதற்கு இவர்களை எல்லாம் அழைக்கப் போகிறோம் என்றவுடன், ஆசிரியர் வீரமணி வரமாட்டார், தனியரசு வரமாட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பி.ஜே.பி-யின் மதவாதத் தாக்கம் தமிழகத்தை தாக்கிவிடக் கூடாது என்ற அக்கறையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், இது சாத்தியமானது.

கு.ராமகிருஷ்ணன்
கு.ராமகிருஷ்ணன்

இன்றைய இளைஞர்கள் பெரியார், அம்பேத்கரை தேடி வரத்தொடங்கிவிட்டனர். நிறைய படிக்கிறார்கள். புத்தகக் கண்காட்சிகளில் ஆன்மிகப் புத்தகங்களைவிட பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள்தான் அதிகம் விற்கப்படுகின்றன. இளைஞர்கள் அறிவியலைத் தேடுகின்றனர். பெண்ணியம் போன்ற விஷயங்களில் பெரியாரின் கோட்பாட்டின் பலன்களை தெரிந்து வைத்துள்ளனர்.

அதனால்தான், பி.ஜே.பி-யினர் பெரியாரிய தத்துவங்களைக் குறி வைத்து தாக்குகின்றனர். அவர்கள் தாக்கத் தாக்க மக்கள் யதார்த்தத்தை நன்கு புரிந்துகொள்கின்றனர். எங்களது வேலையும் குறைந்துவிடுகிறது. கோவை ஒரு கலவர பூமி போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். நாங்கள் அதை மாற்ற வேண்டுமென நினைக்கிறோம். அனைவரையும் இணைக்க வேண்டுமென்பதுதான் எங்களது நோக்கம்.

மாநாடு
மாநாடு

பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் உள்ளிட்ட சில சமய தலைவர்களையும் கூட இதற்கு அழைத்திருந்தோம். சாதிய வேற்றுமை இங்கில்லை என்பதை உணர்த்தும்விதமாக பல்வேறு தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர். மக்களும் இதைப் பார்த்து அந்த மனப்பான்மைக்கு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினரும், சி.பி.எம் மூத்த தலைவருமான பி.ஆர்.நடராஜன், ``சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி போன்ற பிரச்னைகளுக்கு மக்கள் ஓரணியில் திரள்வது இயற்கையானதுதான். கோவை வலதுசாரிகளின் கோட்டை என்பதெல்லாம் ஒரு காலம். தொழில் முடக்கம் போன்ற காரணத்தால் மக்கள், அவர்கள் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

பி.ஆர்.நடராஜன்
பி.ஆர்.நடராஜன்

இப்படி ஒரு கூட்டம் நடத்தியதற்குப் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அதை வரவேற்கிறேன். அனைத்து மக்களும் ஒன்று கூடும்போது அதில் உள்ள நியாயத்தை நாம் கவனிக்க வேண்டும். வருங்காலங்களிலும் இதுபோன்ற அனைத்து விஷயங்களுக்கும் என்னுடைய ஆதரவு இருக்கும்” என்றார்.

``காவி வலிமை பெறுவதைத் தடுக்க கறுப்பும், நீலமும் போராடுகிறது” என்று பேசியிருக்கிறார் ஒரு தலைவர். அவர் முற்போக்கு அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசுதான் இப்படிப் பேசியுள்ளார். அவர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது, அவரது இயக்கத்துக்குள்ளேயே புகைச்சலை கிளப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனியரசிடம் கேட்டபோது,

தனியரசு
தனியரசு

``ஒட்டுமொத்த மானுட சமுதாயத்தையும் அரவணைத்து அதன் வழியாக ஆட்சி அதிகாரம் நடத்த வேண்டுமென்பதுதான் என் நோக்கம். ஆனால், நம் கண் முன்னரே பல்வேறு ஒடுக்குமுறைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதை எதிர்ப்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், சமத்துவம், மக்களாட்சி என்ற அடிப்படையில்தான் நான் இயங்கி வருகிறேன். அதை வலியுறுத்துவதற்காகத்தான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை நான் நீண்ட நாள்களாக சொல்லி வந்தேன். அதேபோல, ஜல்லிக்கட்டு, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை போன்ற விவகாரங்களில் முதலில் அழுத்தமாக குரல் கொடுத்து வருகிறேன்.

மாநாடு
மாநாடு

தற்போது, இருக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, பெரியார், அம்பேத்கர் கருத்துகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை பேசினேன். இதுகுறித்து எங்களது அமைப்பில் சிலரும் கேட்டனர். அதற்கான உரிய விளக்கத்தை நான் அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்” என்றார்.

தமிழக பி.ஜே.பி பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ``அப்படி ஒரு கூட்டம் நடந்ததா... நான் வெளியூரில் இருந்தேன். எனக்குத் தெரியவில்லை. சரி சொல்லுங்க” என்று விவரத்தைக் கேட்டுக்கொண்டு பிறகு பேசத் தொடங்கினார். ``சாதி ஒழிப்புக்கும் சி.ஏ.ஏ-வுக்கும் என்ன சம்பந்தம்... சி.ஏ.ஏ முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது அவர்களின் வாதம். ஆனால், அதை நிரூபியுங்கள் என்று அவர்களிடம் சொன்னதற்கு எந்தப் பதிலும் இல்லை.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த 512 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒரே நோக்கம் பி.ஜே.பி-யை எதிர்க்க வேண்டும் என்பதுதான். அதற்கு முஸ்லிம்களைக் காரணமாக வைத்திருக்கிறார்கள்.

பி.ஜே.பி-யை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாத அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதில், எந்த ஆச்சர்யமும் இல்லை. தி.க-வின் கொள்கைகளில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. ஆனால், கொள்கை என்ற ஒன்று அவர்களிடம் இருந்துவந்தது. இப்போது அதில் இருந்தும் விலகிவிட்டனர். இது கருத்தே இல்லாத ஒரு பேரணி, மாநாடு. மனுதர்மம் என்பது மறைந்து போன நம்பிக்கை. அதைக் கடைப்பிடித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதிருப்பது அல்ட்ரா மாடர்ன் இந்தியா. மனுதர்மத்தை இப்போது பேசுபவர்கள் பழைமைவாதிகள்.

நீலச்சட்டைப் பேரணி
நீலச்சட்டைப் பேரணி

முன்னேற்றத்துக்கு எதிரானவர்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள். இந்து மதம் மட்டும்தான் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு மதம். அதனால்தான், இந்து மதத்தில் பிறந்தவர்களே, அதை எதிர்த்தும் பேசமுடிகிறது. மற்ற மதங்களில் இது சாத்தியமில்லை. பி.ஜே.பி மற்றும் இந்து தர்மத்துக்கு எதிராக நிற்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அப்போதுதான், இந்த நாட்டின் கலாசாரத்துக்கு எதிராக நிற்பவர்கள் யார், நம் எதிரி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். அது எங்களை வளர்க்கவும் உதவும்” என்றார்.

எப்படியோ... கோவை நீலச்சட்டைப் பேரணி, அரசியல் அரங்கில் ஓர் அதிர்வலையையும் விவாதத்தையும் பலமாகவே எழுப்பியிருக்கிறது.

ரஜினிக்கு எதிராகத் தீர்மானம்... விண்ணைப் பிளந்த பறை இசை... கோவையைக் குலுங்கவைத்த நீலச்சட்டைப் பேரணி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு