Published:Updated:

சித்திரை சீசன் சிக்கல்கள்…

தர்பூசணி
பிரீமியம் ஸ்டோரி
தர்பூசணி

இயற்கையே அனுப்பி வைக்கும் சிறப்பு மருத்துவர்கள்!

சித்திரை சீசன் சிக்கல்கள்…

இயற்கையே அனுப்பி வைக்கும் சிறப்பு மருத்துவர்கள்!

Published:Updated:
தர்பூசணி
பிரீமியம் ஸ்டோரி
தர்பூசணி
சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்

ஒவ்வொரு பருவ காலத்திலும் எப்படி நம்மைச் சுற்றி சூழலியல் மாற்றங்கள் நிகழ்கின்றனவோ, அதைப் போலவே நமது உடலும் மாற்றங்களுக்கு உள்ளாகும்... ‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்’ எனும் கோட்பாட்டின்படி. அந்தப் புறச்சூழலுக்கு ஏற்ப நமது உடலைத் தகவமைத்துக்கொள்ள, அந்தந்தப் பருவ காலத்துக்கேற்ற உணவியல் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ஆம்... ஒவ்வொரு பருவ காலத்திலும் விளையும் உணவுப் பொருள்களுக்குப் பின், மிகப்பெரிய உணவு அறிவியல் இருக்கிறது.

அந்தந்தக் காலத்துக்கு நம் உடலுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களையே இயற்கை விளைவித்துக் கொடுக்கும். கார்காலம், கூதிர்காலம் என ஆறு பெரும் பருவங் களுக்கும் ஏற்ப இயற்கை வழங்கும் அந்த உணவுப் பொருள்களை அந்தந்தப் பருவங்களில் உணவில் சேர்க்கும்போது அந்தக் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளுக்கு அவை மருந்தாகவும் அமையும். அந்த வகையில், சித்திரையில் விளையும் காய், கனிகளின் பயன்களையும், கோடைக்கு ஏற்ற சமையல் முறைகளையும் பார்ப்போம்.

சித்திரை சீசன் சிக்கல்கள்…

நீர்ப்பழங்கள் முதல் மோர் வரை!

நீர்க்காய்கள்போல, கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை சமன் செய்யக்கூடிய நீர்ப்பழங்களான கிர்ணிப் பழம், தர்பூசணி போன்றவற்றை ஆசைதீர ருசிக்கலாம். அடிக்கும் வெயிலில் துவண்டு விடாமல் காக்கும் எலுமிச்சை சாற்றின் மகத்துவத்தை மறந்துவிட வேண்டாம். மேலும், மோருடன் சிறிது சிறிதாகக் கத்தரித்த கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூலிகை மோர் செய்து அருந்தலாம்.

சித்திரை சீசன் சிக்கல்கள்…

பித்தம் சமன் செய்யும் பானகம்!

பானகம், வெப்ப காலத்துக்கான நமது பாரம்பர்ய பானம். இதில் சேர்க்கப்படும் கூறுகளுக்கு பித்தத்தை சமன்படுத்தும் சக்தி இருப்பதோடு, செரிமானம் சார்ந்த அனைத்து உபாதை களையும் போக்கும் வலிமை உண்டு. அதேபோல், மோர் சேர்த்துத் தயாரிக்கப்படும் கம்பங் கூழ், `இன்ஸ்டன்ட்' ஆற்றலைத் தருவதோடு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

சித்திரை சீசன் சிக்கல்கள்…

சிறுநீரகக் கற்களுக்கு எதிரி... நீர்க்காய்கள்!

உடலின் நீர்த்துவத்துக்கு உதவும் பீர்க்கு, புடல், முள்ளங்கி, வெள்ளரி போன்ற நீர்க்காய் ரகங்களை வெவ் வேறு வகைகளில் சமைத்து சுவைத்துச் சாப்பிடலாம். சாதத்துக்குப் பொரியலாகவோ, கூட்டாகவோ தினமும் ஏதாவது ஒரு நீர்க்காய் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளவும். பொதுவாக, வேனிற்காலத்தில் தொந்தரவு களைக் கொடுக்கத் தொடங்கும் சிறுநீரக கற்களுக்கான எதிரி, இந்த நீர்க்காய்கள். இது போன்ற சிறுநீர்ப்பெருக்கி மற்றும் குளிர்ச்சித்தன்மை பொருந்திய காய்கறிகள் மற்றும் மூலிகைகளை வெப்பக் காலத்தில் உணவுகளில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

சித்திரை சீசன் சிக்கல்கள்…
சித்திரை சீசன் சிக்கல்கள்…

மாங்காய், வேப்பம்பூ!

இப்பருவத்தில் அதிகம் விளையக்கூடிய மாங்காயையும், சித்திரையில் பூக்கும் வேப்பம்பூவையும் இணைத்து, வெல்லம் சேர்த்துச் செய்யப்படும், பருவகால நோய்களை விரட்டும் ஒரு மருத்துவ உணவுதான் மாங்காய் - வேப்பம்பூப் பச்சடி. தனது மலர்களின் மூலம் பிரத்யேக வாசனையையும் மருத்துவ குணங்களையும் அள்ளிக் கொடுக்கக்கூடியது வேம்பு. சித்திரைத் திருநாளன்று வசந்த காலம் வருவதை வரவேற்கும் விதமாக வேப்பம்பூ பச்சடி செய்து சாப்பிடுவது காலகாலமாக நம்மிடம் இருக்கும் பாரம்பர்ய வழக்கம். இந்த வேப்பம்பூ பச்சடி பல்வேறு நலக்கூறுகளை உள்ளடக்கியது. இதற்கு இணையாக வேப்பம்பூ ரசமும் சித்திரை மாத உணவியலில் இடம்பிடிக்கிறது.

சித்திரை சீசன் சிக்கல்கள்…

அத்திக்காய் காய் காய்!

தொடங்க இருக்கும் சித்திரை மாதம் இளவேனிற் காலத்துக்குச் சொந்தமானது. இக்காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை அழகாகப் பட்டியலிடுகிறது சித்த மருத்துவம். அதாவது கிளி, நாகணவாய் (மைனா), அன்றில், குயில் போன்ற பறவைகள் குதூகலமடையும்; தென்றல் காற்று வீசும்; வேம்பு, மகிழ், புன்னை, செண்பகம் போன்ற தாவரங்கள் மலர்களை அவிழ்க்கும் என இயற்கையின் அற்புதங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த இளவேனிற் காலத்தில் அத்திக்காய்கள் அதிகம் காய்த்துக் குலுங்கும். எனவேதான், இப்போது அத்திக்காய்ப் பொரியல் அல்லது அத்திக்காய் கூட்டு பல வீட்டு சமையலறைகளில் தயாராவதை கிராமங்களில் இன்றும் பார்க்க முடிகிறது. துவர்ப்புச் சுவையுடைய அத்திக்காய், இக்காலத்தில் சோர்ந்திருக்கும் உடலுக்கு ஊட்டம் கொடுப்பதோடு, சுவைத் தத்துவ அடிப்படையிலும் உடலுக்குப் பலம் கொடுக்கும்.

சித்திரை சீசன் சிக்கல்கள்…

இயற்கை நியமித்த மருத்துவர்கள்!

கோடையைச் சமாளிக்க இளநீரையும் நுங்கையும் சிறப்பு மருத்துவர்களாக நியமித்திருக்கிறது இயற்கை. அதிக அளவு வியர்வையால் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்து, பருகிய அடுத்த நொடியே இழந்த நுண்சத்துகளை இளநீர் வழங்கும். உள்ளிருக்கும் வழுக்கையிலும் குளிர்ச்சிக்குப் பஞ்சமில்லை. வேனிற்காலத்தில் அதிக மாகக் கிடைக்கும் பனைபடு பொருளான நுங்கின் வெப்பம் போக்கும் குணம் குறித்துச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சித்திரை மாதப் பௌர்ணமி அன்று, மக்கள் குடும்பம் குடும்பமாக வண்டி பூட்டி, கூடை நிறைய கட்டுச்சோறுகட்டி கடற்கரை, ஆறு, குளக்கரைகளுக்குச் சென்று நிலாச்சோறு சாப்பிட்டு, அந்த இரவுப் பொழுதை ஆடல், பாடல் என ஆனந்தமாகக் கழித்ததாக வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மலைவாழ் மக்கள் சித்திரை இரவு களில் மனமகிழ்ச்சியுடன் குலதெய்வ பூஜையில் ஈடுபட்டு, பலாக்காய்களைப் பல விதங்களில் உணவாக்கி நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் தற்போதும் தொடர்கிறது.

சித்திரை சீசன் சிக்கல்கள்…

வெப்பத்தைக் குறைக்கும் வெள்ளரி!

சித்திரையில் சிறப்பாகக் கிடைக்கக்கூடியது, வெள்ளரிக் காய். தயிருடன் வெங்காயம் சேர்த்துச் செய்யும் பச்சடி போல, வெள்ளரி பச்சடியும் செய்து சாப்பிடலாம். வெயில் காலங்களில் அதிகமாகத் தயாரிக்கப்படும் பச்சடி ரகங்களின் அடிப்படை குணம், வெப்பத்தைக் குறைப்ப தாகத்தான் இருக்கும். இதில் கவனிக்க வேண்டியது, பச்சடி என்பது அடுப்பில் வேகவைத்த உணவு அல்ல. சுத்தமான, நறுக்கிய காய், கீரை வகைகளை அதன் பசுமைத்தன்மை மாறாமல் உணவாக மாற்றும் உன்னதக்கலை. வேனிற்காலங்களில் தயாரிக்கப்படும் பச்சடிகளில் சேர்க்கப்படும் மோர்/தயிர் வெப்பத்தைத் தடுப்பதோடு, செரிமானத்தையும் முடுக்கி விடுவதற்கான உணவு ஏற்பாடு.

சித்திரை சீசன் சிக்கல்கள்…

கோடையின் மிகச்சிறப்பான உணவு... நீராகாரம்!

இரவு மீந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை மட்டும் இறுத்தோ, சாதத்தை அந்தத் தண்ணீருடன் சேர்த்துப் பிசைந்தோ உப்பு சேர்த்தால், குளுமையான நீராகாரம் தயார். புறச் சூழலைப் பொறுத்து மோர் சேர்க்கலாம். ப்ரோபயோடிக் பாக்டீரியாக்களை எக்கச்சக்கமாகக் கொண்டிருக்கும் நீராகாரம் குளிர்ச்சியைக் கொடுப்பதோடு, குடல்பகுதியில் நலம் பயக்கும் நுண்கிருமிகளை அதிகப்படுத்தி, நோய் எதிர்க்கும் கட்டமைப்பை மேம்படுத்தும்.

உணவாலும் கொண்டாடுவோம் சித்திரையை!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சித்திரை சீசன் சிக்கல்கள்…
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism