லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, யுகாதி, சிங்களப் பெருநாள்... சித்திரை சிறப்புப் பலகாரங்கள்!

சித்திரை சிறப்புப் பலகாரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திரை சிறப்புப் பலகாரங்கள்!

ஜெ.எஃப்

மிழ்ப் புத்தாண்டை நாம் கொண்டாடும் அதே வேளையில் கேரளாவில் விஷு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் யுகாதி வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. நம் அண்டை நாடான இலங்கையில் சிங்களப் பெருநாளும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும். புத்தாண்டை முன்னிட்டு அந்தந்தப் பகுதிகளில் பிரபலமாகத் தயாரிக்கப்படும் ரெசிப்பிகளை அளித்துள்ளார் சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.
மல்லிகா பத்ரிநாத்
மல்லிகா பத்ரிநாத்

பால் பாயசம் - தமிழ்நாடு

தேவையானவை:

அரிசி - ஒரு கப் தண்ணீர் கலக்காத

பால் - 10 கப்

சர்க்கரை - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

முந்திரி - சிறிதளவு

நெய் - சிறிதளவு

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, யுகாதி, சிங்களப் பெருநாள்... சித்திரை சிறப்புப் பலகாரங்கள்!

செய்முறை: பெரிய பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து பாலைக் கொதிக்கவிடவும். கொதித்தபின் பாதி பாலைத் தனியே எடுத்துக்கொள்ளவும். கழுவிய அரிசியை மீதமுள்ள பாலில் சேர்த்து (ஊறவிட வேண்டாம்) 5 - 10 நிமிடங்கள் வேகவைக்கவும். இடையிடையே கிளறிவிடவும். எஞ்சிய பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராகக் கலந்துவிடவும். அரிசி குழைவாக வெந்ததும், லேசாக மசித்துவிட்டு, சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கலந்துவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, யுகாதி, சிங்களப் பெருநாள்... சித்திரை சிறப்புப் பலகாரங்கள்!

ஒப்பட்டு - கர்நாடகா

தேவையானவை:

சீரோட்டி ரவை (அ) மைதா - ஒரு கப்

நெய் - ஒன்றரை டீஸ்பூன்

எண்ணெய் - கால் கப்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

தண்ணீர் - மாவில் கலந்துகொள்ள போதுமான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

பூரணம் செய்ய:

கடலைப்பருப்பு - ஒரு கப்

துருவிய வெல்லம் - ஒன்றே கால் கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை: மைதா (அ) ரவையுடன் உப்பு, நெய், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, மாவை மென்மையாகப் பிசைந்து, ஈரத்துணியால் மூடி ஒரு மணி நேரம் வைக்கவும். மென்மையாக ரப்பர்போல் வரும் வரையில் மாவை நன்கு பிசைந்துகொள்ளவும். பிறகு மாவில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் உறிஞ்சிக்கொள்ளும் வரையில் மாவைப் பிசைந்து, மூடிபோட்டு மேலும் மூன்று மணி நேரம் வைக்கவும்.

பிரஷர் குக்கரில் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கடலைப்பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். வேகவைத்த கடலைப்பருப்புடன் துருவிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸி யில் நைசாக அரைக்கவும். பூரணத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தால் வெறும் வாணலியில் பூரணத்தைப் போட்டு தண்ணீரை சுண்ட வைக்கவும். பூரணத்தை ஒரே அளவுள்ள உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். தயார்செய்து வைத்திருக்கும் மாவை எடுத்து ஒரே அளவுள்ள உருண்டைகளாக உருட்டவும். மாவு உருண்டையைத் தட்டி அதில் ஒரு பூரண உருண்டையை வைக்கவும். பக்கவாட்டில் உள்ள மாவை உள்ளே மடித்து உருண்டைகளாக்கவும். எண்ணெய் தடவிய வாழையிலையின் மீது வைத்து கைகளால் தட்டி போளி போல் செய்யவும்.

அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு சூடாக்கிக்கொள்ளவும். வாழையிலையோடு மாவை எடுத்து தோசைக்கல்லின் மேல் போட்டு இலையை மட்டும் எடுத்துவிடவும். சுற்றி சிறிதளவு நெய் விட்டு இரண்டு பக்கங்களும் வேகும்படி நன்றாகச் சுட்டெடுக்கவும்.

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, யுகாதி, சிங்களப் பெருநாள்... சித்திரை சிறப்புப் பலகாரங்கள்!

சதசதயம் - கேரளா

தேவையானவை:

அரிசி - ஒரு கப்

பயத்தம்பருப்பு - அரை கப்

துருவிய வெல்லம் - ஒன்றே கால் கப்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்

நெய், முந்திரி - தேவையான அளவு

செய்முறை: தண்ணீரில் அரிசியையும் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்துக் குழைய வேகவைக்கவும். வெந்தபின் துருவிய வெல்லம் சேர்த்து முழுவதும் கரையும்வரையில் குறைந்த தணலில் வேகவிடவும். கடைசியில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, யுகாதி, சிங்களப் பெருநாள்... சித்திரை சிறப்புப் பலகாரங்கள்!

சுகியன் - ஆந்திரா

தேவையானவை:

புழுங்கலரிசி - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - ஒரு கப்

எண்ணெய் - பொரித்தெடுக்க

உப்பு - கால் டீஸ்பூன்

பூரணம் செய்ய:

துருவிய தேங்காய் - ஒரு கப்

துருவிய வெல்லம் - ஒரு கப் பொடியாக நறுக்கிய

முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை: அரிசியையும் பருப்பையும் ஒன்றாக தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். போதிய அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்கு மாவை அரைத்துக்கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

தேங்காய், வெல்லம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு வாணலியில் சூடாக்கி, வெல்லம் முழுமை யாகக் கரைந்து கலவை கெட்டியாகும் வரையில் சீராகக் கிளறிவிடவும். அத்துடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து எலுமிச்சைப்பழ அளவு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, ஒவ்வோர் உருண்டையையும் அரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, யுகாதி, சிங்களப் பெருநாள்... சித்திரை சிறப்புப் பலகாரங்கள்!

கோகீஸ் - இலங்கை

தேவையானவை:

மைதா - 2 கப்

பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை

தேங்காய்ப்பால் - ஒரு கப்

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் வெனிலா அல்லது

ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்

எண்ணெய் - பொரித்தெடுக்க

செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். ஒரு பாத்திரத் தில் மைதாவுடன் தேங்காய்ப்பால், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். மரக்கரண்டியால் மாவை நன்கு அடித்துக் கலந்து, எசென்ஸ் சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதில் கோகீஸ் மோல்டை (அச்சு முறுக்கு மோல்டைப் பயன்படுத்தலாம்) ஒரு நிமிடம் வைக்கவும். மோல்டை வெளியே எடுத்து மாவில் தோய்க்கவும். மாவில் முழு மோல்டையும் தோய்க்கக் கூடாது. முக்கால் பகுதி மட்டுமே மூழ்க வேண்டும். சூடான மோல்டில் மாவு ஒட்டிக்கொள்ளும். அதை அப்படியே எடுத்து சூடான எண்ணெயில் வைக்கவும். பாதி வெந்ததும் ஒரு ஸ்பூன் உதவி யால் தளர்த்திவிட்டால் கோகீஸ் எண்ணெயில் விழுந்துவிடும். ஸ்டீல் குச்சியால் திருப்பிவிட்டு இருபுறமும் நன்கு மொறுமொறுப்பானதும் எடுத்து வடிதட்டில் வைக்கவும்.

ஒவ்வொரு முறையும் மாவில் தோய்ப்பதற்கு முன் சூடான எண்ணெயில் மோல்டை வைத்து எடுத்தால்தான் மாவு ஒட்டும். கோகீஸை பதமாகத் தயாரிக்க வேண்டும். மாவு மிகவும் நீர்க்கவோ, கெட்டியாகவோ இருக்கக் கூடாது.