Published:Updated:

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

மாவு வகைகளைச் சலித்து அகலமான பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்துப் பிசையவும். அத்துடன் நெய் சேர்த்து நன்கு பிசறிவிடவும்.

பிரீமியம் ஸ்டோரி
மல்லிகா பத்ரிநாத்
மல்லிகா பத்ரிநாத்

எல்லா வருடங்களையும்போலவே இந்த வருடமும் ‘தீபாவளிக்குப் புதுசா என்ன பலகாரம் செய்யலாம்?’ என்ற கேள்வி பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ‘புதுசா மட்டுமல்ல, செய்யறதுக்கு சிம்பிளாவும் இருந்தா நல்லாருக்கும்’ என்பது இன்னும் சிலரின் எதிர்பார்ப்பு. இந்த இரு விஷயங்களையும் கருத்தில்கொண்டு, புதுமையான, ஈஸியான ஸ்வீட் மற்றும் காரங்களின் செய்முறை பகிர்கிறார் பிரபல சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி

தேவையானவை:

பூரணம் செய்ய:

வேகவைத்து உதிர்த்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2 கப், வெல்லத்துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு, பொட்டுக்கடலை மாவு (தேவையானால்) - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

மேல் மாவுக்கு:

சிரோட்டி ரவை அல்லது மைதா - ஒன்றரை கப், உப்பு - 2 சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

கிழங்குடன் நெய், எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் சேர்த்து அரைக்கவும். அந்தக் கலவையை கடாயில் சேர்த்து எண்ணெய், நெய் எதுவும் சேர்க்காமல் அடுப்பில்வைத்து ஒரு நிமிடத்துக்குக் கிளறினால் பூரணம் ரெடி. கலவை கையில் பிசுபிசுப்பாக ஒட்டுகிற மாதிரி தெரிந்தால் அதில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம். உருண்டை பிடிக்கும்போது கையில் ஒட்டாமலிருக்க கையில் சிறிது நெய் தடவிக்கொள்ளலாம். சிரோட்டி ரவை அல்லது மைதா மாவுடன் உப்பு, நெய் கலந்து பிசறிவிடவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து மறுபடியும் நன்கு அடித்துப் பிசையவும். மீண்டும் எண்ணெய் சேர்த்து நன்கு உறிஞ்சப்படும் வரை பிசையவும். உருண்டைகளாக உருட்டி மெலிதாக்கி, பூரணம் வைத்து மெலிதாக போளிகளாகத் திரட்டவும். சூடான தோசைக் கல்லில் நெய்விட்டு சுடவும்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

ராகி தட்டை

தேவையானவை:

கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - ஒரு கப், ஊறவைத்த கடலைப்பருப்பு - சிறிதளவு, கொரகொரப்பாக பொடித்த மிளகு, சீரகம் - அரை டீஸ்பூன், மெலிதாக நறுக்கிய முந்திரி, உரித்த வெள்ளரி விதைகள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மாவு வகைகளைச் சலித்து அகலமான பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்துப் பிசையவும். அத்துடன் நெய் சேர்த்து நன்கு பிசறிவிடவும். மற்ற பொருள்களைச் சேர்த்து ஒவ்வொரு முறை பொரிப்பதற்கு முன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பதமாகப் பிசைந்து ஒரே அளவில் உருட்டி ஈரத்துணியின் மீது மெல்லிதாகத் தட்டி மேலே முள்கரண்டியால் குத்திவிட்டு, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

முந்திரி - கருப்பட்டி கோவா

தேவையானவை:

முந்திரிப்பருப்பு - முக்கால் கப், உடைத்த / சீவிய கருப்பட்டி - முக்கால் கப், பால் - ஒன்றேகால் கப், சர்க்கரை சேர்க்காத கோவா - 100 கிராம், நெய் - அரை கப்புக்கும் குறைவாக.

செய்முறை: முந்திரியை நன்கு உலரவைத்து சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும், அதிலேயே கருப்பட்டி, மீதி பால் கலந்து அரைத்தெடுக்கவும். இதை அடிகனமான வாணலியில் ஊற்றவும். மிதமான தீயில் கிளறவும். பாதி அளவு வெந்தபிறகு உதிர்த்த கோவா சேர்க்கவும். நன்கு பளபளவென வந்த பிறகு பாதி அளவு நெய் சேர்க்கவும். நுரைத்து வரும்போது இறக்கி வைத்து மீதி நெய் சேர்த்து சிறிது நேரம் நன்கு கலந்து விடவும். நெய் தடவிய பெரிய தட்டில் இதைக் கொட்டி சில நிமிடங்கள் கழித்து விருப்பமான வடிவத்தில் வில்லைகள் போடவும்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

முந்திரி தேன்குழல்

தேவையானவை:

பச்சரிசி - ஓர் ஆழாக்கு, முந்திரிப்பருப்பு - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியைக் கழுவி அதோடு முந்திரி சேர்த்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து, தண்ணீரை முழுவதுமாக வடித்து, கெட்டியாக அரைக்கவும். பாதி அரைக்கும்போது உப்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். அதிலேயே நெய் சேர்த்து கடைசியில் நன்கு அரைத்தெடுக்கவும். அரைத்த மாவைத் தேன்குழல் அச்சில் சேர்த்து, சூடான எண்ணெயில் நேரடியாகப் பிழிந்து பொரித்தெடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

மாப்பிள்ளை சம்பா தேங்காய்ப்பால் அல்வா

தேவையானவை:

மாப்பிள்ளை சம்பா புழுங்கரிசி - ஒரு கப், தேங்காய்ப்பால் - இரண்டே கால் கப், நாட்டுச்சர்க்கரை - ஒன்றே கால் கப், ஜாதிக்காய்த்தூள், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் - சிறிதளவு, மெலிதாக சீவிய பாதாம்பருப்பு, குங்குமப்பூ- சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: மாப்பிள்ளை சம்பா அரிசியை சூடான வாணலியில் சேர்த்து நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, சலித்துக் கொள்ளவும். அத்துடன், அரைத்த தேங்காய்ப்பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் ஊற்றிக்கிளறவும். ஓரளவு கெட்டிப்படும்போது மசாலாத் தூள்கள், நெய் விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் நெய்யில் வறுத்த பாதாம், சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து எடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

உருளைக்கிழங்கு காராசேவு

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 150 கிராம், உதிர்த்து அளந்தால்

தலைதட்டி நிற்கும் அளவு (ஆழாக்கில்) கடலை மாவு - அரை கப், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு, சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் (மாவு பிசைய).

செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்தவுடன் சூடாக இருக்கும்போதே கட்டியின்றி மசிக்கவும். அதோடு சலித்த கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. நன்கு பிசைந்ததும் சூடான எண்ணெய் சேர்த்து மேலும் பிசையவும். காரா சேவு கரண்டியை சூடான எண்ணெய் வாணலியின் மீது உயரமாக வைத்துக்கொண்டு மாவைத் தேய்த்தால், மாவானது கண் வழியாக கொதிக்கும் எண்ணெயில் விழும். நன்கு கரகரப்பாகும்வரை மிதமான தணலில் பொரித்தெடுக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு