- சுகுன ரோஷிணி
மோர்க்குழம்பு தயாரிக்கும்போது தயிர் திரிந்தது போல ஆகிறது. அதைத் தடுக்க என்ன செய்வது?

- எஸ்.தமிழ்ச்செல்வி, திருப்பத்தூர்
மோர்க்குழம்பு வைக்கும்போது தேங்காய், சீரகம், கடலைப்பருப்பு, அனைத்தையும் ஊறவைத்து அரைத்து, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பிறகு, நீங்கள் எடுத்து வைத்துள்ள தயிரை நன்கு கடைந்து குழம்பில் சேர்க்கவும். தயிர் சேர்க்கும் போது ஒரு கொதிகூட வர விடாமல், அடுப்பை சிம்மில் வைத்து லேசாகக் கிளறிவிட்டு இறக்கி விடவும். இப்படிச் செய்தால், தயிர் திரியாமல் மோர்க் குழம்பு நன்றாக இருக்கும்.

மொத்தமாக தேங்காய் வாங்குவது வழக்கம். வாங்கும்போது நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், நான்கைந்து நாள்கள் கழித்து உடைக்கும்போது உள்ளே அழுகி இருக்கிறது. தேங்காய் அழுகாமல் இருக்க என்ன செய்வது?
- கலைவாணி சுப்பிரமணி, திருச்செந்தூர்
நீங்கள் வாங்கி வந்த தேங்காயை வீட்டில் வைக்கும்போது, குடுமி இருக்கும் பகுதி மேல்பக்கம் இருக்குமாறு வையுங்கள். அப்படி வைத்துப் பயன் படுத்தினால், தேங்காய் பல நாள்களுக்கு கெட்டுப் போகாமல், அழுகாமல் இருக்கும்.

ஃபில்டர் காபியில் டிகாக்ஷன் ஸ்டிராங்காகவும் டேஸ்ட்டாகவும் வர, என்ன செய்யலாம்?
- உ.மல்லிகா, புதுச்சேரி
ஃபில்டரில் காபித்தூள் போடுவதற்கு முன்பாக ஒரு டீஸ்பூன் சர்க்கரையைத் தூவி விடவும். பிறகு அதன் மேல் காபித்தூள் போட்டு, மேலே வெந்நீர் ஊற்றினால், ஸ்ட்ராங்கான டேஸ்ட்டான டிகாக்ஷன் கிடைக்கும்.
மட்டன் குழம்பு தயாரிக்கும்போது முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து சமைத்து சாப்பிடுவது எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால், மட்டனுடன் சேர்த்து உருளைக்கிழங்கு, முருங்கைக்காயை குக்கரில் வைத்து சமைக்கும்போது காய்கறிகள் குழைந்துவிடுகின்றன. அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
- கே.சுந்தரி, கோயம்புத்தூர்-6
மட்டனை முதலில் தனியாக குக்கரில் வைத்து மூன்று விசில் விடவும். இதன் பிறகு நறுக்கிய முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு விசில் விடுங்கள். தேவைப்பட்டால் இரண்டு விசில் வைத்து இறக்கி விடவும். இப்படிச் செய்தால் காய்கறிகள் சரியான பதத்தில் வெந்திருக்கும்.

வீட்டில் கருப்பட்டி காபி தயாரிக்கும்போது பால் திரிந்து போய்விடுகிறது. பால் திரியாமல் இருக்க என்ன செய்வது?
- லதா சுந்தரம், காட்பாடி
கருப்பட்டி காபி தயாரிக்கும்போது முதலில் கருப்பட்டிப் பாகு தனியாக தயாரிக்கவும். பிறகு பாலை தனியாக சூடு செய்து கொள்ளவும். கருப்பட்டிப் பாகு மிதமான சூட்டில்தான் இருக்க வேண்டும். பால் நல்ல சூட்டில் இருக்கலாம். டிகாக்ஷன் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். பால், டிகாக்ஷன் இவற்றைச் சேர்த்து ஒரு டீஸ்பூன் கருப்பட்டிப் பாகு எடுத்து, அதனுடன் கலந்து கருப்பட்டி காபி தயார் செய்தால், பால் திரியாமல் கருப்பட்டி காபி நன்றாக இருக்கும்.
வீட்டில் பனீர் பட்டர் மசாலா செய்யும்போது பனீரை எண்ணெயில் ஃப்ரை செய்து எடுத்துவைத்தால் மிருதுவாக இல்லாமல் இருக்கிறது. பனீர் சாஃப்ட்டாக இருக்க என்ன வழி?
- சாவித்ரி இளங்கோவன், தென்காசி
பனீரை எண்ணெயில் ஃப்ரை செய்து எடுத்தவுடன் குளிர்ந்த நீரில் அல்லது சாதாரண தண்ணீரில் போட்டு பிறகு மசாலாவில் சேர்த்தால் மிருதுவாக இருக்கும்.