Published:Updated:

ஈஸியா சமைக்கலாம்! - #HowToCook

ஈஸியா சமைக்கலாம்
பிரீமியம் ஸ்டோரி
ஈஸியா சமைக்கலாம்

ஜானகி அஸாரியா

ஈஸியா சமைக்கலாம்! - #HowToCook

ஜானகி அஸாரியா

Published:Updated:
ஈஸியா சமைக்கலாம்
பிரீமியம் ஸ்டோரி
ஈஸியா சமைக்கலாம்

சிலருக்கு என்ன சமைப்பது எனக் குழப்பம்... சிலருக்கு எப்படிச் சமைப்பது என்று குழப்பம்... வேறு சிலருக்கோ சமைத்த உணவு மீந்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம்... பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும், அதேநேரம் உணவுப் பொருளை வீணாக்கவும் கூடாது. அவசர சமையல், திடீர் சமாளிப்பு, தினசரி சமையலை ஆரோக்கியமாக மாற்றுவது என எல்லாவற்றுக்குமான டிப்ஸை இந்த இதழில் ஆங்காங்கே வழங்கியிருக்கிறார் சமையற்கலை நிபுணர் ஜானகி அஸாரியா.

ஜானகி அஸாரியா
ஜானகி அஸாரியா

மீந்துபோகும் உணவுகள்... புதிய அவதாரங்கள்

தினமும் இட்லி, தோசையா என்று முகம் சுளிக்கும் குடும்பத்தைச் சமாளிப்பது இல்லத்தரசிகளுக்குப் பெரும்பாடு. மீந்த இட்லியை உதிர்த்து, உப்புமாவாகச் செய்தது அந்தக் காலம். இப்போது அதை இத்தாலியன், சைனீஸ் உணவுகளாக மாற்றுவது தான் டிரெண்டு.

இட்லிமாவில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி ஆகியவற்றை வதக்கி, இத்தாலியன் ஸ்பைஸ் பவுடர் (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்), சிறிதளவு துருவிய சீஸ் சேர்த்துக் கலக்கவும். ஒரு குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஒரே பெரிய இட்லியாக ஊற்றி ஆவியில் வேகவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.

ஈஸியா சமைக்கலாம்! - #HowToCook

சப்பாத்தியை கத்தரிக்கோலால் நூடுல்ஸ் போல நீளவாக்கில் வெட்டவும். வெங்காயம், பூண்டு, கோஸ், கேரட், குடமிளகாய் போன்ற காய்கறிகளை வதக்கி அதில் சில்லி சாஸ், சோயா சாஸ் கலந்து வெட்டிவைத்த சப்பாத்தி துண்டுகளைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.

மீந்த காய்கறிப் பொரியல்களில் சிறிதளவு பீட்சா சாஸ், இத்தாலியன் ஹெர்ப்ஸ், துருவிய சீஸ், சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றைக் கலந்து இரண்டு பிரெட் ஸ்லைஸ்களுக்கு நடுவில் வைத்து மூடி டோஸ்ட் செய்து பீட்சா சாண்ட்விச்சாக பரிமாறலாம். வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கேரட், பட்டாணி போன்ற காய்கறிகளை வடித்த சாதத்தில் கலந்து மசித்து பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா, கரம்மசாலா சேர்த்து கட்லெட்டாக செய்து தவாவில் எண்ணெய் ஊற்றிப் பொரித்தெடுக்கலாம்.

ஈஸியா சமைக்கலாம்! - #HowToCook

கொரோனாவும் சமையலும்!

உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா, இன்னும் முடிந்தபாடில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் வழக்கத்தைவிட அதிக ஊட்டத்துடன் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கூடவே சில உணவுகளைத் தவிர்க்கவும் வேண்டும்.

நோய்த் தடுப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ, சி, சத்துள்ள காய்கறி, பழவகைகளை நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சூரிய ஒளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் டி-யும் மிகவும் அவசியம்.

`ஜிங்க்’ எனப்படும் துத்தநாகச் சத்து அதிகமுள்ள வால்நட், பாதாம், முந்திரி போன்றவற்றையும், பறங்கி, சூரியகாந்தி, வெள்ளரி, தர்பூசணி போன்ற விதை களையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

தினமும் பச்சைக் காய்கறிகள், விதைகள், எலுமிச்சைப்பழச்சாறு கலந்த கொண்டைக்கடலை போன்ற ஏதாவது ஒரு கடலை சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

காய்கறிகளையும் பழங்களையும் வெட்டியவுடன் உடனே பயன்படுத்து வது நல்லது. இஞ்சி ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம் நெல்லிக்காய் பச்சடி ஆகியவற்றை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

காய்கறிகள், கீரை, பருப்பு வகைகள் சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம். கோடைக்காலத்தில் கோலா பானங்கள், பாட்டில் ஜூஸ் போன்றவற்றைத் தவிர்த்து இளநீர், மோர், அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் அன்றாடம் சமைத் துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. வீட்டிலும், பொரித்த உணவுகளைத் தவிர்த்து, எண்ணெயைக் குறைத்து, லைட்டாக சமைப்பது நல்லது.

ஈஸியா சமைக்கலாம்! - #HowToCook

சமையல் ஹேக்ஸ் (Hacks)

சமையலை சுலபமாக்கி நேரத்தையும் பணத்தையும் சேமிக்க உதவும் சில டிப்ஸ்...

பச்சைப்பட்டாணி சீசனில் மலிவாகக் கிடைக்கும் போது அதை வாங்கி உரித்து ஜிப்லாக் பைகளில் போட்டு நன்றாக மூடி ஃப்ரீசரில் (Freezer) வைத்தால் தேவையானபோது உபயோகப்படுத்தலாம். பட்டாணியைத் தண்ணீரில் கழுவவோ, வேக வைக்கவோ வேண்டாம். சமைக்க வெளியில் எடுக்கும்போது கழுவினால் போதும். இதைப்போல மொச்சையையும் சீசனில் வாங்கி உரித்து கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

தக்காளி மலிவாகக் கிடைக்கும் போது வாங்கி, தக்காளியை வெங்காயத்துடன் மிக்ஸியில் அரைத்து நன்றாகக் கொதிக்க வைத்து ஆறியவுடன் சின்னச் சின்ன ஜிப்லாக் பைகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்தால் தேவையானபோது எடுத்து உபயோகிக்கலாம்.

பால் திரிந்துவிட்டால் அதைக் கொட்ட வேண்டாம். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரோ, எலுமிச்சைப் பழச்சாறோ சேர்த்து, அதை மேலும் முழுவதாகத் திரித்து வடிகட்டி பனீர் செய்யலாம்.

சமையலில் கறிவேப்பிலையை முழுதாகப் போட்டால் அனைவரும் சாப்பிடும்போது தனியே எடுத்து வைத்து விடுவார்கள். எனவே, கறி வேப்பிலையைக் கழுவி, நன்றாக வெயிலில் காயவைத்து, பொடி செய்து சாம்பார், ரசம், பொரியல் களில் கலக்கலாம். புதினாவையும் இவ்வாறு கழுவி காயவைத்து பொடி செய்து உபயோகிக்கலாம்.

குளிர்காலத்தில் வெந்தயக்கீரை நிறைய கிடைக்கும். அதைக் காம்பு நீக்கி கழுவி வெயிலில் நன்றாகக் காய வைத்து பிளாஸ்டிக் டப்பாவிலோ, ஜிப்லாக் கவரிலோ போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் நார்த் இந்தியன் கிரேவிகளில் உபயோகப்படுத்தும் `கஸுரி மேத்தி' ரெடி.

இதற்கு பதில், இது!

சி
ல நேரம் சமைக்கும்போது திடீரென தேவையான ஒரு பொருள் இருக்காது. வாங்குவதற்கு உடனே கடைக்கு ஓட முடியாது. அப்படிப்பட்ட சூழல்களை எப்படிச் சமாளிக்கலாம்?

நார்த் இந்தியன் கிரேவிகளில் பெரும் பாலும் ஃபிரெஷ் க்ரீம் (Fresh Cream) சேர்க்க வேண்டியிருக்கும். அதற்குப் பதிலாக பால் அல்லது தயிர் சேர்க்கலாம். அதே போல் முந்திரி விழுதுக்குப் பதிலாக கசகசாவை ஊறவைத்து அரைத்துச் சேர்க்கலாம். அதுவும் இல்லை என்றால் சிறிதளவு கடலை மாவை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துச் சேர்க்கலாம்.

ஈஸியா சமைக்கலாம்! - #HowToCook

கூட்டுக்கு அரைக்க தேங்காய் இல்லை என்றால் சிறிதளவு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் இவற்றை சிறிதளவு எண்ணெயில் வறுத்து அரைத்துக் கலந்தால் சுவையான கூட்டு ரெடி. சாம்பார், ரசம் செய்ய புளி தீர்ந்து விட்டால் தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்துச் சேர்க்கலாம்.

கரம் மசாலாத் தூள் இல்லையென்றால் தனியா (மல்லி), மிளகு, பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை லேசாக வறுத்து அரைத்துச் சேர்க்கலாம்.

உடனடியாக கேக் செய்ய வேண்டும். முட்டை இல்லை. என்ன செய்வது? ஒரு முட்டைக்கு ஈடாக கால் கப் தயிர் என்ற கணக்கில் தேவைக்கேற்ப சேர்த்து எக்லெஸ் கேக்காகச் செய்யலாம்.

உணவே மருந்து

முன்னோர்கள் காலத்து உணவுப்பழக்கங்கள், அவரவர் வசித்த நாடு, சீதோஷ்ண நிலை, அங்கு விளையக்கூடிய தானியங்கள் காய்கறிகள், பழவகைகளை அடிப்படையாக வைத்தே அமைந்தன. இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கை முறைக்கும், உடல் உபாதைகளுக்கும் தகுந்தபடி உணவுமுறையை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஈஸியா சமைக்கலாம்! - #HowToCook

பொதுவாக எல்லோருமே தினசரி உணவில் அதிகம் கொழுப்பில்லாத பால், தயிர், கீரை, காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக உப்பு, சர்க்கரை, பதப்படுத்திய உணவு, பொரித்த உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. சிறுதானியங்கள், சுண்டல் கடலை வகைகள் ஆகியவையும் இடம்பெற வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ள வர்கள் அதிக உப்பு சேர்த்த ஊறுகாய், அப்பளம், வற்றல், சிப்ஸ் போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் கிழங்கு வகைகளைத் தவிர்த்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்ள காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாம் சாப்பிடுகிற உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோல் சாப்பிடும் அளவும் மிக மிக முக்கியமானது. ஒரு நாளைக்கு மூன்று வேளை என்கிற வழக்கமான கணக்கை வைத்துக்கொண்டு, அளவுக்கு அதிகமாகத் திணிப்பதுதான் பலரின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், ஐந்து வேளை என்று பிரித்துக் கொண்டால், தேவைக்கேற்ற உணவை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். குறிப்பாக நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் இதைப் பின்பற்றுவது மிகவும் நல்லது.

சமையலுக்கு ஒரே எண்ணெயை உபயோகப்படுத்தாமல், நல்லெண் ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என்று மாற்றி மாற்றி உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது.