Published:Updated:

பாயசங்கள்... பாட்டி சென்டிமென்ட்... பாசிட்டிவிட்டி...

பாயசங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாயசங்கள்

வித்யா முரளியின் வித்தியாச பிசினஸ்

பாயசங்கள்... பாட்டி சென்டிமென்ட்... பாசிட்டிவிட்டி...

வித்யா முரளியின் வித்தியாச பிசினஸ்

Published:Updated:
பாயசங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாயசங்கள்

பாயசம்....

சிம்பிளான ரெசிப்பிதான் என்றாலும் அதென்னவோ விசேஷ தினங்களில் மட்டுமே இடம்பெறும் இனிப்பாக இருக்கிறது.

திடீரென பாயசம் சாப்பிடத் தோன்றினால், எந்த ஹோட்டலிலும் அது தனியே கிடைப்ப தில்லை. இந்தக் குறையைப் போக்குவதே சென்னையைச் சேர்ந்த வித்யா முரளியின் நோக்கம்.

‘ஹவுஸ் ஆஃப் பாயசம்ஸ்’ என்ற பெயரில் சென்னை, ஷெனாய் நகரில் இவர் நடத்துவது, பாயசங்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் பிசினஸ்.

50 ஆண்டுகள் பழைமையான வீடும், 15 பேர் ஒன்றாக வசிக்கும் கூட்டுக்குடும்ப அமைப்பும், வீட்டுக்குள் நுழையும்போதே வீசும் இனிப்பு வாசமுமே நன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

வீக் எண்டு பாயச டெலிவரியை முடித்துவிட்டு ரிலாக்ஸ்டாக நம்மிடம் பேச ஆரம்பித்தார் வித்யா.

பாயசங்கள்... பாட்டி சென்டிமென்ட்... பாசிட்டிவிட்டி...

‘`பிசினஸ் பண்ணணும்ங்கிறது என்னுடைய பல வருட கனவு. அப்படிப் பண்ற பிசினஸ் தனித்துவமானதா இருக்கணும்ங்கிற ஆசையும் இருந்தது. ஆனா, அதுக்கான சரியான ப்ளானோ, நேரமோ அமையலை. ஐடி வேலையில பரபரப்பா ஓடிட்டே இருந்ததுல பிசினஸ் கனவு அப்பப்ப எட்டிப் பார்த்துட்டு அமைதி யாயிடும். என் கணவருடைய பாட்டி சச்சு, ரொம்ப பிரமாதமா சமைப்பாங்க. அவங்க கும்பிடற உன்னிகிருஷ்ணனுக்கு தினமும் நெய்ப் பாயசம், அவல் பாயசம்னு விதம் விதமா செய்து நைவேத்தியம் பண்ணுவாங்க. பாயசத்தோட வாசனையில வீடு முழுக்க தெய்விக மணம் வீசும். அப்படியொரு பாயச வாசனைதான் என் பிசினஸ் ப்ளானுக்கான முதல் விதை.

‘பாட்டி பண்ற பாயசம் இவ்ளோ பிரமாதமா இருக்கே.... இதை ஏன் நாம எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி, ஒரு பிசினஸா பண்ணக் கூடாது’ன்னு நானும் என் கணவரும் யோசிச் சோம் ஆனா, ஐடி வேலையில பிசினஸ் ப்ளானை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோக நேரமில்லை. கொரோனா வந்து, எல்லாரையும் வீட்டுக்குள்ள முடக்கிப்போட்டது. வொர்க் ஃப்ரம் ஹோம்ல இருந்தேன். ஆசுவாசப் படுத்திக்க கொஞ்சம் நேரம் கிடைச்சது. மறுபடி பிசினஸ் ப்ளானை தூசுதட்டி எடுத்தோம். திடீர்னு ஒரு நல்ல நாள்ல எல்லாம் வொர்க்அவுட் ஆகி, ‘ஹவுஸ் ஆஃப் பாயசம்ஸ்’ என்ற கம்பெனியா உருவாச்சு...’’ இனிப்பான தொடக்கம் சொல்லும் வித்யா முரளி, திருமணத்துக்கு முன்புவரை சமை யலறையை எட்டிக்கூடப் பார்க்காதவராம். ஆனால், இன்று 50-க்கும் மேலான இனிப்பு களைத் தயாரித்து இந்தியா மட்டுமன்றி, அமெரிக்கா, துபாய், வெர்ஜினியா, ஸ்வீடன், டொரன்ட்டோ உள்ளிட்ட பல நாடுகளுக்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்.

பாயசங்கள்... பாட்டி சென்டிமென்ட்... பாசிட்டிவிட்டி...

‘`பாயசத்துக்காக பிரத்யேக கேட்டரிங்னு எங்க ஐடியாவை சொன்னதும், ‘அதெல்லாம் சரியா வருமா’ன்னு கேட்டாங்க பலரும். ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது. மார்க்கெட் பண்றது கொஞ்சம் சவாலான விஷயம்தான். ஆனாலும் மக்களுக்கு சரியான டேஸ்ட்டை காட்டிட்டா அப்புறம் பிசினஸ் பிக்அப் ஆயிடும்னு நம்பினேன். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி எங்க பெரியப்பா வீட்டு விசேஷத்துக்குப் பண்ணிக்கொடுத்த பால் பாயம்தான் முதல் ஆர்டர். அது பெரிய ஹிட். விசேஷத்துக்கு வந்தவங்கள்ல நிறைய பேர் பாராட்டினாங்க. அடுத்தடுத்து ஆர்டர்ஸ் வர ஆரம்பிச்சது. பாலடை பிரதமன், சக்கப் பிரதமன், இளநீர்ப் பாயசம், சேமியா பாயசம், பாசிப்பருப்பு பாயசம்னு நிறைய வெரைட்டிகளை அறிமுகப்படுத்தினோம்.

எங்க மெனுவுல ரொம்ப ஸ்பெஷல்னா சக்கப் பிரதமன். அதாவது பலாப்பழ பாயசம். சீசன் இருக்கும்போது நிறைய பலாப்பழங்களை வாங்கிட்டு வருவோம். எங்களுடையது 15 பேர் வசிக்கிற கூட்டுக் குடும்பம். மொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பலாப்பழங்களை உரிச்சு, தோல், கொட்டைகளை நீக்கி, சுளை களைத் தனியா எடுப்போம். சக்கப் பிரதமனுக்கு பலாச்சுளைகளை உரிக் கிறதை எங்க மொத்தக் குடும்ப ஒரு கொண்டாட்டம்போல அவ்வளவு சந்தோஷமா செய்வோம்.. உரிச்ச சுளைகளை சுத்தப்படுத்தி வெல்லம் சேர்த்து ஜாம் பதத்துக்கு கொண்டு வருவோம். அது கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு கெடாது. எப்போ தேவையோ, அப்போ அதுல தேங்காய்ப் பால் சேர்த்து சக்கப்பிரதமனா ரெடி பண்ணிடலாம். அமிர்தமா ருசிக்கும்....’’ ஆவலைத் தூண்டுகிறது வித்யாவின் பேச்சு.

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

‘`இன்னிக்கு நிறைய பேருக்கு ஆரோக்கியத்துல அக்கறை அதிகமாகியிருக்கு. ஸ்வீட்ஸ் சாப்பிட யோசிக்கிறாங்க. ஹெல்த்தியான ஸ்வீட்ஸா தேடறாங்க. அவங்களுக்காக ஹெல்த்தியான பாயச வெரைட்டீஸை அறிமுகப்படுத்தினோம். சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி, டயாபட்டிஸ் உள்ளவங்களுக்கு அவங் களுக்கான பிரத்யேக இனிப்பு சேர்த்த பாயசம்,சர்க்கரையே சேர்க்காத இளநீர்ப் பாயசம், டயட் பாயசம், கோதுமை ரவை பாயசம்னு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். பாயசம் மட்டுமே பண்ணிக்கொடுத்திட்டிருந்தபோது போன வருஷ தீபாவளியின்போது ஒரு கஸ்டமர் தீபாவளி சீர் பட்சணம் கேட் டாங்க. அதுலேருந்து விஷு, ரம்ஜான் உட்பட எல்லாப் பண்டிகைகளுக்குமான ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ஆர்டர் எடுத்துப் பண்ண ஆரம்பிச்சிட்டோம். வேலைக்குப் போற பெண்களுக்கு உதவற மாதிரி நவராத்திரியின் ஒன்பது நாள்களுக்கும் ஒன்பது வகையான சுண்டல்களும் பாயசங்களும் ரெடி பண்ணித் தருவோம்...’’ பிசினஸ் வளர்ந்த கதை பகிர்பவரின் வாடிக்கையாளர் பட்டியலில் ராதிகா சரத்குமார், கிரிக்கெட்டர் அஷ்வின், சினேகா பிரசன்னா... இப்படி நிறைய பிரபலங்களும் உண்டு.

‘`பாசயம் ரெசிப்பீஸ்லேருந்து சமையல்ல உள்ள நுணுக்கங்கள்வரை கணவரோட பாட்டிதான் சொல்லிக் கொடுத்தாங்க. இன்னிக்கு நான் சக்சஸ்ஃபுல் பிசினஸ்வுமனா இருக்கிறதைப் பார்க்க அவங்க இல்லை. போன வருஷம் பாட்டி தவறிட்டாங்க. ஐடி வேலை, குடும்பம், குழந்தைங் கன்னு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு ஒரு பிசினஸையும் நடத்தறது சாதாரண விஷயமில்லை. ஃபேமிலி சப்போர்ட் இல்லாம இது சாத்தியமே இல்லை. எங்கப்பா டாக்டர். காலையில கிளினிக் கிளம்பும்போது அம்மாவை எங்க வீட்ல விட்டுட்டுப் போயிடுவார். அம்மாவும் மாமியாரும் சம்பந்திகள் மாதிரியில்லாம சிஸ்டர்ஸ் மாதிரி இருப்பாங்க. அவங்க குழந்தைங்களையும் குடும்ப நிர்வாகத்தையும் பார்த்துக்கிறதாலதான் என்னால என் வேலையோடு பிசினஸையும் பார்த்துக்க முடியுது. Everything happens at the right time-னு சொல்வாங்க. அப்படி எல்லாமே நல்லவிதமா நடக்க ஆரம்பிச்சிருக்கு...இனிமேலும் நல்லதாவே நடக்கும்னு நம்பறேன்...’’ பாயசத்தோடு பாசிட்டி விட்டியும் தந்து வழியனுப்புகிறார் வித்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism