Published:Updated:

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

சாயத்தில் மூழ்கி எடுக்கப்படாத ஃபிரெஷ்ஷான, நன்றாக விளைந்த பச்சைப் பட்டாணி கிடைக்கும்போது, கிலோ கணக்கில் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

சாயத்தில் மூழ்கி எடுக்கப்படாத ஃபிரெஷ்ஷான, நன்றாக விளைந்த பச்சைப் பட்டாணி கிடைக்கும்போது, கிலோ கணக்கில் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

Published:Updated:
வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

வெயில் காலங்களில் ஒரு வருடத்துக்கான வற்றல், வடகம், ஊறுகாய், தொக்கு ஆகியவற்றைத் தயாரிப்பது நம் வழக்கம். என்றாலும், கால மாற்றத்தில் சிலர் அதில் ஆர்வம் இழந்தார்கள். இப்போது கொரோனாவுக்குப் பிறகான ஆரோக்கிய விழிப்புணர்வு காரணமாக, ‘வடகம் ஒரு பாக்கெட், ஊறுகாய் ஒரு பாட்டில்’ என்று வாங்கிக்கொண்டிருந்தவர்கள் பலருக்கும், கவனம் மீண்டும் வீட்டுத் தயாரிப்பு உணவுகளில் திரும்பியிருக்கிறது.

 பத்மா
பத்மா

‘வருஷத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை கல் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து நாமளே தயாரிக்கலாமே’ என்கிற எண்ணம் பலருக்கும் வந்திருக்கிறது. அதிலும் சிலர், ‘சிறுதானியங்களிலும் பாரம்பர்ய அரிசிகளிலும் வற்றல், வடகம் செய்ய முடியுமா’ என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் சிலர், பச்சைப் பட்டாணி, மஞ்சள் கிழங்கு மாதிரி சீசனில் கிடைக்கிற உணவுப் பொருள்களை ஒரு வருடம் வரை கெடாமல் பாதுகாப்பது எப்படியென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மேனகா
மேனகா

இப்படி, வருடத்துக்குமான உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் ஆர்வமும் தேடலும் உள்ளவர்களுக்கெல்லாம் எளிமையாக வழிகாட்டும் இந்த இணைப்புப் புத்தகம். இதில் உள்ள குறிப்புகளையும் ரெசிப்பி களையும் வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் நங்கநல்லூர் பத்மா மற்றும் ‘மண்வாசனை’ மேனகா!

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!
YelenaYemchuk

பச்சைப் பட்டாணியும் ஃப்ரீஸர் பாக்ஸும்!

சிலருக்குக் காய்ந்த பட்டாணியைவிட பச்சைப் பட்டாணியே பிடிக்கும். ஆனால், காய்ந்த பட்டாணியைப்போல இதை ஸ்டோர் செய்து பயன் படுத்த முடியாது என்பதால், காய்ந்த பட்டாணியை வாங்கி வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக்கொள்வர். கவலையே வேண்டாம்... பச்சைப் பட்டாணியையும் ஆறு மாதங்கள் வரை ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்.

சாயத்தில் மூழ்கி எடுக்கப்படாத ஃபிரெஷ்ஷான, நன்றாக விளைந்த பச்சைப் பட்டாணி கிடைக்கும்போது, கிலோ கணக்கில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். நன்கு முற்றிய பட்டாணிகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து, கிலோ கணக்கில் வாங்கி, தோலுரித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துவிட்டால், ஆறு மாதங்கள் வரைக்கும் முளைகூட விடாமல் அப்படியே இருக்கும். ‘ஆனால் அடிக்கடி டப்பாவை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைக்கும்போது...’ என்பவர்கள், தோலுரித்த பட்டாணியை இரண்டாகப் பிரித்து, இரண்டு டப்பாக்களில் வைத்துக் கொள்ளலாம். ஒரு டப்பாவை முதல் மூன்று மாதங்களும், மற்றொன்றை அடுத்த மூன்று மாதங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். கவனம்,

முற்றிய பச்சைப் பட்டாணி மட்டுமே ஆறு மாதங்கள் வரைக்கும் தாங்கும். பிஞ்சாக இருந்தால் அழுகிவிடும். அதேபோல, தோலுரிக்கப்பட்ட பட்டாணியைத் தண்ணீரில் அலசி ஃப்ரீஸரில் வைத்தாலும் அழுகிவிடும்; சமைக்கும்போது அலசிக்கொள்ளலாம்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

சுண்டை வற்றல்... சாப்பாட்டுத் தட்டில் சொர்க்கம்!

காம்பவுண்ட் சுவர் கலாசாரத்துக்கு முன்னர், பலரது வீட்டு வேலி களிலும் சுண்டைச் செடியை அதன் முள்ளுக்காக வளர்ப்பார்கள். இப்போதோ, மார்க்கெட் ஓரமாகக் கூறுகட்டி காய்கறி விற்கும் பாட்டி களிடமும், சூப்பர் மார்கெட்களிலும்தான் பெரும்பாலும் சுண்டைக்காய் கிடைக்கிறது அல்லது கீரை விற்பவர்களிடம் சொல்லி வைத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. சுண்டை வற்றல் செய்து வைத்துக்கொண்டால், எல்லா மாதங்களிலும் செம ருசி அல்லவா? எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

மார்க்கெட்டில் சுண்டைக்காய் வரத்து அதிகமிருக்கிற நாள்களில், படிக்கணக்கில் வாங்கி, நசுக்கி, கெட்டித் தயிருடன் போதுமான அளவு கல் உப்பு சேர்த்து, நன்கு கலந்து, நான்கு நாள்கள் சுண்டைக்காயை அப்படியே ஊற விட வேண்டும். பிறகு இரண்டு நாள்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். தயிரும் உப்பும் ஊறிய தண்ணீர் இருந்தால், காயவைத்த சுண்டைக்காய்களை மறுபடியும் ஒரு நாள் முழுக்க அதில் ஊறவிட்டு, மறுபடியும் நன்கு காய விட வேண்டும். ஒரு வருடத்துக்குக் கெடாது இந்தச் சுண்டை வற்றல். வத்தக்குழம்பில் போட சுண்டை வற்றல் இருந்துவிட்டால் சொர்க்கமே நம் சாப்பாட்டுத்தட்டில்தான்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

வயிற்றுப்புண்ணுக்கு மணத்தக்காளி!

கீரை வகைகளில் மணத்தக்காளி எப்போதுமே சற்று விலை கூடுதல்தான். ஒரு கைப்பிடிக்குள் அடங்கிவிடும் சிறிய கட்டு 25 ரூபாய் என்று சொன்னாலும், நான், நீ என்று வாங்குவதற்கு அடிபிடியாய் இருக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும் இதன் குணத்துக்காகத்தான் இத்தனை மதிப்பு இந்தக் கீரைக்கு.

மணத்தக்காளிக் கீரை சீசனில் மணத்தக்காளிக் காயும் படிக்கணக்கில் விற்பனை செய்யப்படும். கீரைக்கு இருக்கிற ஆரோக்கிய பலன் அதன் காய்க்கும் உண்டு. எனவே, அதை வற்றலாகச் செய்து வைத்துக்கொண்டால் சீசனிலில்லாத நாள்களில் அதைக்கொண்டு வத்தக்குழம்பு செய்யலாம். மணத்தக்காளிக் காயுடன் அதன் பூக்கள், புழு இரண்டுமே இருக்கும் என்பதால் நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும். பின் காய் மூழ்குகிற அளவுக்குப் புளித்தத் தயிரும், தேவையான அளவு கல் உப்பும் சேர்த்து நன்கு ஊறவிடவும். பிறகு, வெயிலில் காய வைத்தால், ஒரு வருடத்துக்குக் கெடாது.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

வருடம் முழுக்க வேப்பம்பூ!

வெயில் காலம் வந்தாலே ஊரெல்லாம் வேப்பம்பூ வாசம்தான் வீசும். ஒரு காலத்தில் கீழே உதிர்ந்து மண்ணோடு மண்ணாகிப்போன வேப்பம்பூவின் மதிப்பு இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அரை கிலோ அளவுக்குக் காய்ந்த வேப்பம்பூக்கள் இருந்தால், பதப்படுத்தி, ஒரு வருடம் முழுக்க ரசத்துக்கு, பச்சடிக்கு, துவையலுக்கு என அந்தந்த சமையலுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். வேப்ப மரத்தடியில் இரவே பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து வைத்துவிட்டால், அதன் மீது உதிர்ந்து கிடக்கிற பூக்களை அள்ளிச் சேர்த்து ஒரேயொரு நாள் காய வைத்தாலே போதும், உலர்ந்துவிடும். காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர், சமையல் செய்யும்போது சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் ஃபிளாட்டில் வசிக்கிறீர்களென்றால் தினம் ஒருவர் பிளாஸ்டிக் ஷீட் விரித்து வேப்பம்பூ சேகரித்துக்கொள்ளலாம்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!
fcafotodigital

மஞ்சள்... பொங்கலன்று மட்டுமல்ல!

மஞ்சளில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமென்று, கொரோனா காலத்தில் அனைத்து மருத்துவர்களுமே தெரிவித்தார்கள். ஆனால், அந்த மஞ்சளை பெரும்பாலும் கடையில் தூளாகத்தான் வாங்கிப் பயன்படுத்துகிறோம். அது சுத்தமானதா; கலப்படம் செய்யப்பட்டதா என்று சந்தேகத்துடன் பயன்படுத்துவதற்குப் பதில், ஃபிரெஷ்ஷான மஞ்சளை நாமே வாங்கிப் பொடித்துக்கொள்ளலாமே?!

பொங்கலன்று உச்சத்திலிருக்கிற மஞ்சள் கொத்தின் விலை, மாட்டுப் பொங்கலன்று சற்றுக் கீழிறங்கியிருக்கும். அன்றைக்குத் தேவையான அளவுக்கு மஞ்சள் கொத்துகளை வாங்கி, கிழங்குகளை மெலிதாக நறுக்கி, காய வைக்கவும். காய்ந்த கிழங்குகளைக் கையிலோ, முறத்திலோ வைத்துத் தேய்த்தால் தோலுரிந்துவிடும். இதை மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளலாம். அல்லது தோல் நீக்கி, தேங்காய்த்துருவியில் சீவி, நன்கு காய வைத்தால், மிக்ஸியிலேயே அரைத்துவிடலாம்.

இந்தப் பொடியை சமையலுக்கு மட்டுமல்ல, குளியல் பொடியாகவும் பயன்படுத்தலாம்; ஒரு வருடம் வரைக்கும் கெடாது.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!
joji

தேங்காய் விலை குறைவாகக் கிடைக்கிறதா?

எல்லா சீசனிலும் கிடைக்கும் என்றாலும், நேரங்களில் நான்கு தேங்காய் 100 ரூபாய் என்றும் கிடைக்கும்; ஒரு தேங்காய் 40 ரூபாய் என்றும் கிடைக்கும். விலை மலிவாகக் கிடைக்கும்போது, நிறைய தேங்காய்களை வாங்கி, உடைத்து, ஓட்டை நீக்கி, தண்ணீரில் போடவும். அரை மணி நேரம் கழித்து மேல் தோலை நீக்கி, பொடியாக நறுக்கி, வெயிலில் உலர்த்தவும். உலர்ந்ததும் வெறும் வாணலியில் வறுத்து, கல் உப்பு சேர்த்துப் பொடித்து ஃப்ரீஸரில் வைத்துவிட்டால், குறைந்தது மூன்று மாதங்கள் வரைக்கும் கெடாது. அரைத்துவிட்ட சாம்பார், குருமா, சட்னி என்று தேங்காய் பயன்படுத்திச் சமைக்கும் அத்தனை சமையல் களிலும் இந்தத் தேங்காய்ப்பொடியைப் பயன்படுத்தலாம். தேங்காய் விலை கையைக் கடிக்கையில் தேங்காய்ப்பொடி கைகொடுக்கும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

சிறுதானியங்களில் வற்றல்!

சிறுதானியங்களிலும் வற்றல் போடலாம். ஒரு கிலோ கேழ்வரகை 4 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் சுவைக்கேற்ப இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, பாலைப் பிழிந்துகொள்ளவும். இதை அடுப்பில் வைத்துக் கிளறினால், கூழ்போல வரும். இந்தக் கூழை ஸ்பூனால் எடுத்து, பிளாஸ்டிக் ஷீட்டில் வட்டம் வட்டமாக ஊற்றவும். மஞ்சள் பூசணிக்காய் கிடைக்கிற சீசனில் அதை நறுக்கி, கூழுடன் சேர்த்து வேகவிட்டு, கிள்ளி வைத்தும் வற்றல் போடலாம். இதே செய்முறையில் கோதுமை மற்றும் கம்புப்பாலிலும் வற்றல் போடலாம்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

வருடம் முழுக்க மாங்காய் சாம்பார்!

மாங்காய் போட்ட சாம்பார் செம ருசிதான். ஆனால், அது சீசனில் மட்டுமே கிடைக்கக்கூடியது. சீசனில்லாத நேரத்தில் சில சூப்பர் மார்க்கெட்களில் கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும்; மாங்காய் தோலின் மீது கரும்புள்ளிகள் இருக்கும். அதனால், சீசனில் மாங்காய்களை வாங்கி, கழுவி, துடைத்து, இரண்டு பக்கமும் கீறி, உள்ளே கல் உப்பை வைத்து, அப்படியே வெயிலில் நன்கு காய வைத்தால் மாங்காய் வற்றல் ரெடி. இதை அடை மாங்காய் என்போம். இது ஒரு வருடமென்ன, இரண்டு வருடங்களானாலும் கெடாது. சாம்பார், புளிக்குழம்பு, மீன் குழம்பு என மாங்காய் சேர்க்கும் அத்தனை குழம்பு வகைகளிலும் இந்த அடை மாங்காயைச் சேர்க்கலாம். குழம்பில் உப்பை மட்டும் சற்றுக் குறைத்துப் போட்டுக்கொள்ள வேண்டும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

மாவடு மற்றும் மாகாளிப் பிரியர்களுக்கு...

மற்ற ஊறுகாய்களைவிட மாவடுவும் மாகாளியும் கூடுதல் ஸ்பெஷல்தான். தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்தால், ஒரு வருடம் தாண்டியும் அப்படியே இருக்கும். மாவடு உருண்டையாக, அழுத்தமாக இருக்க வேண்டும். ஒரு படி மாவடுவைக் கழுவி, துடைத்துக்கொள்ள வேண்டும். ஒரு படி மாவடுவுக்கு, பத்து

நீண்ட காய்ந்த மிளகாய், ஒரு துண்டு விரலி மஞ்சள், 2 டேபிள் ஸ்பூன் கடுகு ஆகியவற்றை ஊறவைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது, மாவடுவுடன் எல்லாவற்றையும் கலந்து, ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு, கரண்டிக் காம்பால் கிளறிவிட வேண்டும். அவ்வப்போது குலுக்கிவிட்டால், மூன்று நாளில் மாவடு நிறம் மாறி, சுருக்கம் கொடுக்க ஆரம்பிக்கும். இதை அப்படியே ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும். தேவைப்படும் போது, கிண்ணத்தில் எடுத்துப்போட்டுப் பயன்படுத்தலாம்.

மாகாளிக்கிழங்கைச் சுரண்டினால், வெள்ளையாக இருக்க வேண்டும். சிவப்பாக இருந்தால் அது முற்றல். உடைத்தால் உடைபட வேண்டும். கிழங்கின் தோலுரித்து, நடுவில் இருக்கிற நரம்பை நீக்கி, பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ மாகாளிக்கு 20 நீண்ட காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு இரண்டையும் அரைத்து கிழங்குடன் கலந்துகொள்ள வேண்டும். தேவையான கல் உப்பைச் சேர்த்து, கிழங்கின் மேல் எலுமிச்சைச் சாறு நிற்கிற அளவுக்கு 15 அல்லது 20 எலுமிச்சையை சாறு பிழிந்துவிட வேண்டும். அப்படியே தூக்கி ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வருடம் கெட்டுப்போகாது.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

வெங்காய வடகம்!

புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் வழுவழுவென்று அரைத்து, கல் உப்பு சேர்த்து, கரைத்து வைத்துக்கொள்ளவும். அரை கிலோ அரிசிக்கு 10 பச்சை மிளகாய் வீதம் எடுத்து, அரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரைத் தனியாக எடுத்து வைக்கவும். அரை கிலோ மாவுக்கு அரை கிலோ சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து, நான்காக நறுக்கி, கைகளால் உதிர்த்து தனியாக வைக்கவும்.

முதல் நாள் காலையில் மாவை அரைக்கிறீர்கள் என்றால், மறுநாள் காலையில் ஒரு பங்கு மாவுக்கு இரண்டு பங்கு தண்ணீரை (மிளகாய் அரைத்தத் தண்ணீரையும் சேர்த்து) அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும். நீர் தளதளவென்று கொதிக்கும்போது, மாவை தோசை வார்ப்பதற்கு முன்னால் செய்வதுபோல, நன்கு அடித்துக் கலந்து, கொதிக்கிற நீரில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, நன்கு கிளறவும். வெந்த மாவு பார்ப்பதற்குப் பளபளப்பாக இருக்கும். விரல்களைத் தண்ணீரில் தொட்டுக்கொண்டு, மாவைத் தொட்டால் மாவு ஒட்டக்கூடாது. இந்தப் பதத்திலிருக்கும்போது, சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக் கிளறினால், அந்தச் சூட்டிலேயே வெங்காயமும் வெந்துவிடும். இந்த மாவை சின்னச் சின்னதாக கிள்ளி வெயிலில் காயவைத்து, எடுத்து வைத்தால், சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள வெங்காய வடகமாகவும், மாலை நேரச் சிற்றுண்டிக்கு வெங்காய பக்கோடா போலவும் இருக்கும். ஒரு வருடத்துக்குக் கெடாது.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!
TommyIX

கொத்தவரங்காய் வற்றலுக்கு... பிஞ்சுக்காய்!

கொத்தவரங்காய் பொரியல் விரும்பாதவர்களும் கொத்தவரை வற்றலை விரும்புவார்கள். சீசன் நேரத்தில் பிஞ்சு கொத்தவரங்காயாகப் பார்த்து வாங்கி, உப்புப் போட்ட நீரில் போட்டு, ஒரு கொதிவிட்டு, வடிகட்டி, காய வைத்தால் போதும். இரண்டு நாளில் சருகாகக் காய்ந்துவிடும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

வெண்டை வற்றலுக்கு காய் இப்படிப் பார்த்து வாங்க வேண்டும்!

வெண்டைக்காய்களை பிஞ்சுமில்லாமல், முற்றலுமில்லாமல் நடுத்தரமாகப் பார்த்து வாங்கி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி, மோர் மற்றும் கல் உப்புடன் பிசறி, காய வைத்தால் வெண்டை வற்றல் ரெடி.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!
sundar bzee

கறிவேப்பிலை பொடி!

கறிவேப்பிலை சில மாதங்களில் ஃபிரெஷ்ஷாகக் கிடைக்கும்; சில மாதங்களில் விலை குறைவாகக் கிடைக்கும். விலை குறைவாகக் கிடைக்கும் நேரத்தில் நிறைய கறிவேப்பிலையை வாங்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை விலை அதிகமாக இருக்கும்போதும், கறுப்படித்துக் கிடைக்கும்போதும் இந்தக் கறிவேப்பிலைப் பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை சாம்பார்பொடி மற்றும் இட்லி பொடியிலும் கூட கலந்துகொள்ளலாம். ஒரு வருடம் தாண்டினாலும் கெடாது. இதே செய்முறை யில், சீசனின்போது முருங்கைக்கீரைப் பொடியும் செய்து கொள்ளலாம்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

பாரம்பர்ய அரிசிகளில் வற்றல் போட ஆர்வமா..?! - இதோ சில செய்முறைகள்...

மாப்பிள்ளை சம்பா தக்காளி வற்றல்!

ஒரு கப் மாப்பிள்ளை சம்பா பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் ஒரு தக்காளி, அரை டீஸ்பூன் சீரகம், 2 சிட்டிகை பெருங்காயத்தூள், தேவையான அளவு கல் உப்பு சேர்த்து, நைசாக அரைத்து எடுக்கவும்.

ஒரு கப் அரிசிக்கு 6 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து, அடுப்பிலேற்றி, அரிசி மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் கூழ் பதம் வரும்வரையில் வேக விடவும். இந்தக் கூழை ஸ்பூனில் எடுத்து வெள்ளைத் துணியில் வட்ட வட்டமாக விட்டுக் காய வைத்தால்... மாப்பிள்ளை சம்பா தக்காளி வற்றல் ரெடி.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

கிச்சலி சம்பா சின்ன வெங்காய வடகம்!

அரை கப் உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் 3 காய்ந்த மிளகாய், 10 பூண்டு பற்கள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதனுடன் 2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம், 2 சிட்டிகை பெருங்காயம், ஒரு டீஸ்பூன் சீரகம், தேவையான உப்பு, 50 கிராம் கிச்சலி சம்பா அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இந்த மாவை துணியிலோ, பிளாஸ்டிக் ஷீட்டிலோ கிள்ளி வைத்துக் காய வைக்கவும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

தூயமல்லி அரிசி ஜவ்வரிசி வற்றல்!

ஒரு கப் தூயமல்லி அரிசியை வேகவைத்து வடிக்கவும். சாதம் சூடாக இருக்கும்போதே மசிக்கவும். ஒரு கப் ஜவ்வரிசியை வேகவைத்து தனியாக வைக்கவும். 2 பச்சை மிளகாயை அரைக்கவும். மசித்த அரிசி, வெந்த ஜவ்வரிசி, அரைத்த பச்சை மிளகாய், 2 சிட்டிகை பெருங்காயம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்துக் கலக்கவும். இதை 2 கப் நீர் விட்டுக் கரைத்து, நன்றாகக் கொதிக்க விடவும். கூழ் பதத்தில் வரும்போது, அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு, ஒரு கிளறுக் கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கவும். தூயமல்லி வற்றல் மாவை, டீஸ்பூனால் எடுத்து துணியில் வட்ட வட்டமாக வைத்துக் காய விடவும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

பூங்கார் கறிவேப்பிலை வற்றல்!

ஒரு கப் பூங்கார் அரிசி மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரை கப் தண்ணீரில் கலந்து வைக்கவும். இதை ஐந்தரை கப் தண்ணீரில் கரைத்து கூழ் போல காய்ச்ச வேண்டும். பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்னால், அரை டீஸ்பூன் சீரகம், இரண்டு சிட்டிகை பெருங்காயம், கைப்பிடி அளவு நறுக்கிய கறிவேப்பிலை, வறுத்து கொரகொரப்பாக அரைத்த சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து, வற்றல் கூழை கீழ் மேலாக நன்கு கலக்க வேண்டும். இதை, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி மினி தோசை போல தேய்த்து விட வேண்டும். பூங்கார் அரிசி சீக்கிரமே கெட்டிப்பட்டுவிடும் என்பதால் வற்றல் போடும் போது, பக்கத்தில் வெந்நீர் வைத்துக்கொள்ளுங்கள். மாவு கெட்டியாகி விட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து, மறுபடியும் வற்றல் போட ஆரம்பியுங்கள். ‘எங்கள் அப்பார்ட்மென்டில் கொஞ்ச நேரம்தான் வெயில் வருகிறது’ என்பவர்கள்கூட இந்த வற்றலைப் போடலாம். ஜஸ்ட் இரண்டு மணி நேரம் வெயிலில் வைத்துவிட்டு, அதன் பிறகு, மின்விசிறியின் கீழ் வைத்தாலே வற்றல் உலர்ந்துவிடும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

இலுப்பைப்பூ சம்பா வெற்றிலை வடகம்!

ஒரு கப் இலுப்பைப்பூ சம்பா அரிசியை நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை அரை கப் தண்ணீரில் கலந்துகொள்ளவும். கலந்ததை 3 கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாயை அரைத்து வைக்கவும். மாவுக் கரைசலை அடுப்பில் ஏற்றிக் காய்ச்ச ஆரம்பிக்கவும். மாவு வெந்து கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வரும்போது, அரைத்த பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், நறுக்கிய இரண்டு வெற்றிலை சேர்த்து நன்கு கலந்து விடவும். வெற்றிலைச்சாறு எடுத்தும் சேர்க்கலாம். இதை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து காய வைக்கவும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

தங்கச்சம்பா டெல்லி அப்பளம்!

ஒரு கப் தங்கச்சம்பா பச்சரிசி, கால் கப் ஜவ்வரிசி இரண்டையும் கழுவி, மூன்று மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். இந்த மாவில் உப்புப் போட்டுக் கரைத்து இரவு முழுக்க அப்படியே வைத்து விடவும். காலையில் புளித்திருக்கும். இதை ஆப்ப மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்து இட்லித் தட்டைக் குப்புற போட வேண்டும். மேலெழும்பி இருக்கும் இட்லிக்குழியின் மீது ஒரு கரண்டி மாவை விட்டுத் தேய்த்து விடவும். இப்படியே எல்லா குழியின் மீதும் ஊற்றி வேகவைத்து உரித்து எடுக்கவும். கவனிக்க... இதை வெயிலில் காய வைத்தால் பொரிக்கும் போது உடையும். நிழலில்தான் காய வைக்க வேண்டும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

சாமை மசாலா வடகம்!

ஒரு கப் சாமை அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும். ஒரு கப் சாமை அரிசியில் நான்கு கப் தண்ணீர் விட்டு, தேவையான உப்புப் போட்டு, அரைத்த விழுதையும் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விடவும். விசில் அடங்கியதும் நன்றாக மசித்து, முறுக்கு அச்சில் நீள நீளமாகப் பிழிந்து விடவும். கிள்ளியும் வைக்கலாம்.

பின்குறிப்பு: பாரம்பர்ய அரிசி வகைகளை இயற்கை அங்காடிகளில் வாங்கலாம்.

ஆக... வெயிலிடம் ரெடி சொல்வோமா..?! வற்றல், வடகம் வேலைகளை ஆரம்பிப்போமா..?!

*******

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

கறுப்புக் கவுனி - வல்லாரை வற்றல்!

கறுப்புக் கவனி அரிசி மாவு ஒரு கப், சீரகம் அரை டீஸ்பூன், பூண்டு 4 பற்கள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் கப் அரைத்த வல்லாரை விழுது ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவை அரை கப் தண்ணீரில் கலந்து வைக்கவும். பூண்டு பற்களை அரைத்து வைக்கவும். 6 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கரைத்து வைத்த அரிசி மாவை ஊற்றி நன்கு வேகும் வரை கொதிக்க விடவும். அரிசி மாவு வெந்து கூழ்போல வரும்போது, சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வல்லாரை விழுது ஆகியவற்றைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை கிளறி கீழே இறக்கவும். பிறகு, துணியில் அல்லது எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் மினி தோசை போல ஊற்றித் தேய்த்து விடவும். அல்லது குட்டிக் குட்டியாகப் பட்டன் போலவும் ஊற்றி வெயிலில் காய விட்டு எடுக்கவும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

கத்திரிக்காய் வற்றல்... சுவை அள்ளும்!

பிஞ்சுக் கத்திரிக்காய்களை நான்காக நறுக்கி, உப்பு, புளிக்கரைசல், மஞ்சள் தூள் சேர்த்த வெந்நீரில் போட்டு ஒரு கொதிவிட்டு, உடனே வடித்துவிட வேண்டும். இதைக் காயவைத்து எடுத்து வைத்தால், பொரித்துச் சாப்பிடலாம்; மழைக்காலத்தில் கத்திரி வற்றலைப் போட்டு வத்தக்குழம்பு வைத்தால் சுவையள்ளும்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!
சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

6 மாதங்களுக்கு அழுகாது!

நாட்டுப்பூண்டும் சின்ன வெங்காயமும் அடிக்கடி விலையேறிவிடும். இவை விலை மலிவாக இருக்கும்போது, ஈரமில்லாமல் உலர்ந்ததாகப் பார்த்து வாங்கி, அடியில் துளைகளுள்ள கூடை யில் போட்டு வைத்தால், அழுகவே அழுகாது. கூடை இல்லையென்றால், நியூஸ்பேப்பர் மேல் பரவலாகக் கொட்டி வைக்கலாம். தினமும் உலர்ந்த கையால் கிளறி, பத்து நாளைக்கு ஒருமுறை வெயிலில் வைத்து எடுத்தால் வெங்காயமும் பூண்டும் அழுகாது; பூஞ்சணமும் பிடிக்காது. பூண்டை மேல் தோல் நீக்கி பல் பல்லாக உதிர்த்து வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை அப்படியே வைக்கலாம்.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

முற்றல் பிரண்டை... பொடிக்கு ஓகே!

பிரண்டை கிடைப்பதே அரிது. அப்படியே கிடைத்தாலும் முற்றலாகத்தான் கிடைக்கிறது. இதில் துவையல் அரைத்தால் நார் நாராகத்தான் வரும். அப்படி அரைக்கும் துவையலையும் ஃபிரிட்ஜில் வைத்து இரண்டு, மூன்று நாள்கள்தான் சாப்பிடலாம். பதிலாக, பிரண்டை பொடி செய்து நீண்ட நாள்கள் சாப்பிடலாமே. அதற்கு, பிரண்டையின் நார் நீக்கி, பொடியாக நறுக்கி, எண்ணெயில்லாமல் வெறும் வாணலியில் மொறுமொறுவென வறுத்துக்கொள்ளவும். கூடவே, பிரண்டையின் அளவுக்கேற்ப உளுத்தம் பருப்பு, காரத்துக்கேற்ப மிளகாய், கைப்பிடி கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வெறும் பாத்திரத்தில் வறுத்து ஆறவிடவும். இவற்றுடன், பெருங்காயத்தூள், கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்... நாரெல்லாம் மேலே வரும். அதை எடுத்துப் போட்டுவிட்டு, மறுபடியும் அரைத்தால் பொடியாகிவிடும். இந்தப் பொடியை சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம்; இட்லிப் பொடியாகத் தொட்டுச் சாப்பிடலாம். ஆறு மாதங்கள் வரை கெடாது.

சிறுதானிய வற்றல், வடகம் முதல்... பிரண்டைப்பொடி, தேங்காய்ப்பொடி வரை... வெயிலுடன் தயாரிக்க வழிகாட்டி!

சிப்ஸ் கேட்டு அடமா? பாகற்காய் பார்சல்!

பாகற்காயும் வேலியில் கேட்பாரற்றுக் கிடந்த காய்தான். மக்களிடையே நீரிழிவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பாகற்காயைத் தேடித் தேடி வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இந்த விழிப்புணர்வு வரவேற்கப்பட வேண்டியது. சில மாதங்களுக்கு முன்னால் ஒரு கிலோ 60 ரூபாய் என விற்றது நினைவிருக்கலாம். ஆனால், சீசனில் மார்க்கெட்டில் விதவிதமான நீளங்களில் கொட்டிக் கிடக்கும். அதுபோன்ற நேரங்களில், பிஞ்சு பாகற்காய்களாகப் பார்த்து வாங்கி, வில்லைகளாக நறுக்கவும். நறுக்கிய காயின் எடைக்கு ஏற்பவும், நீங்கள் விரும்பும் ருசிக்கு ஏற்பவும் புளிக்கரைசல், கல் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசறி, சிறிது நேரம் ஊறவைத்து, பிறகு நீரில் ஒரு கொதி அளவுக்கு மட்டும் வேக வைக்கவும். உடனே கொதிநீரை வடித்து, வெயிலில் சில நாள்கள் காய வைத்தால்... பாகற்காய் வற்றல் ரெடி. ‘சிப்ஸ் இருந்தாதான் சாப்பிடுவேன்’ என்று அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு நல்லதோர் ஆரோக்கிய மாற்று இந்த வற்றல். பொரித்தால் கசப்பும் அவ்வளவாகத் தெரியாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism