“இரட்டை இலைச் சின்னத்தைக் கேட்டதால் பழிவாங்கிவிட்டனர்!” - நீதிமன்றத்துக்குச் செல்லும் ‘குபீர்’ ஜெயலலிதா அணி

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

இரட்டை இலை சின்னத்தைக் கேட்டதால், எங்கள் அணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களைத் தேர்தல் அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டனர் என்று அ.தி.மு.க.,ஜெயலலிதா அணியின் பொதுச் செயலாளர் பசும்பொன்பாண்டியன் தெரிவித்தார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிட 138 ஆண்கள், 7 பெண்கள் உள்பட 145 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை இன்று நடக்கிறது. ஏற்றுக்கொள்ளப்படும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற, டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாளாகும்.  வேட்புமனு தாக்கல்செய்ய நேற்று (4.12.2017) கடைசிநாள். இதனால், சுயேச்சையாகப் போட்டியிடுபவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுக்களைத் தாக்கல்செய்தனர். இரவு 11 மணி வரை வேட்புமனு தாக்கல்செய்யும் பணி நடந்தது.

தேர்தல் அலுவலகத்தில் 13 மணி நேரம் காத்திருந்தும் எங்களுடைய வேட்புமனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார், பசும்பொன்பாண்டியன். இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், "இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் என்னுடைய தலைமையில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் அஃபிடவிட்களைத் தாக்கல்செய்தேன். ஆனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிவிட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளேன்.

இதற்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எங்கள் அணி சார்பில் சென்னை மாவட்டச் செயலாளர் பூங்கா மாரி, மகளிரணிச் செயலாளர் கீதா ஆகியோரை வேட்பாளராக அறிவித்தோம். அ.தி.மு.க., ஜெயலலிதா அணியின் வேட்பாளராக பூங்கா மாரி, இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு வேட்புமனு தாக்கல்செய்ய நேற்று காலை 9 மணியளவில் தேர்தல் அலுவலகத்துக்குச் சென்றார். அதுபோல, அ.தி.மு.க., ஜெயலலிதா அணியின் ஆதரவு பெற்ற வேட்பாளராக கீதா, தொப்பி, படகு, இரட்டை மின்கம்பம் ஆகிய சின்னங்களைக் கேட்டு வேட்புமனு தாக்கல்செய்ய திட்டமிட்டிருந்தார்.

தேர்தல் அலுவலகத்துக்கு சென்றதும் அங்கிருந்த போலீஸார், பூங்காமாரிக்கும் கீதாவுக்கும் 70, 71 என்ற டோக்கன் நம்பர்களைக் கொடுத்தனர். ஆனால், 70-வது டோக்கனுக்கான நேரம் வந்தபோது, வேறு ஒருவர் சென்றார். அதுகுறித்துக் கேட்டபோது, பிறகு அழைப்பதாகத் தெரிவித்தனர். அதன்படி, இரவு 10 மணியளவில் பூங்கா மாரி மற்றும் கீதாவை அழைத்தனர். அப்போது, உங்கள் இருவரின் வேட்புமனுக்களும்  நிராகரிக்கப்படுவதாகக் கூறினர். இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது அங்கு வந்த போலீஸார் எங்களை சமரசப்படுத்தினர். இதனால் சாலைமறியலைக் கைவிட்டோம்.

எங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்பிய பூங்காமாரி, கீதா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் சந்தேகம் எழுகிறது. ஏனெனில், இரட்டை இலை சின்னத்தை பூங்காமாரி கேட்டு விண்ணப்பித்ததால், அவரது மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் காரணம் கூறினால், நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே, டோக்கன் வழங்குவதைப் போல சொல்லி 13 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கவைத்து, கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாங்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக இன்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளேன். மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த தடை கேட்பதோடு, எங்கள் அணி வேட்பாளர்களையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடுவேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!